வயநாடு:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிக கனமழை பெய்தது. இன்றும் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இருந்து மக்கள் மீள்வதற்குள் அதிகாலை 4.30 மணிக்கு 2வதாக மற்றொரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
அடுத்தடுத்து மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. அதிகாலை 6 மணிக்கு மீண்டும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் நான்கு மணிநேரத்தில் மூன்று பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் கிராமங்கள், சாலைகள், பாலங்கள் மண்ணில் புதைந்தன. ஆறுகளில் அடித்து செல்லப்பட்டன. இதில் இதுவரை 50க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோய் உள்ளன. வயநாட்டில் ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.
சூரல்மலா கிராமத்தை தாண்டி தான் முண்டக்கை டவுனுக்கு செல்ல முடியும். இரண்டு ஊர்களையும் இணைக்கும் பாலம் கனமழை, நிலச்சரிவால் சிதிலமடைந்துள்ளது. இதனால், முண்டக்கை டவுனுக்கு மீட்புக்குழு செல்வதில் சிரமம் நிலவுகிறது.
முண்டக்கை டவுனுக்கு அடுத்த அட்டமலை கிராமத்தில் ஓடும் ஆற்றில் ஆறு சடலங்களை அக்கிராம மக்கள் மீட்டெடுத்துள்ளனர். இவை, முண்டக்கை டவுனில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் என்று கூறப்படுகிறது. இதேபோல், பொதுகல்லு ஊராட்சியில் உள்ள சாலியாற்றில் இருந்து 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேப்பாடி பகுதியில் இருந்து உருவாகும் ஆறு தான் இந்த சாலியாறு. மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து வெளியேறும் நீரும் சகதியும் ஆற்றில் கலப்பதால், சாலியாறு பார்ப்பதற்கே அபாயகரமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ராணுவ வீரர்கள், தன்னார்வலர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.