பிளாஸ்டிக் குப்பைகள்தான் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கின்றன. அதிலும் பயன்படுத்திய பிறகு தூக்கி எறியும் வாட்டர் பாட்டில்கள் எங்கும் நிறைந்து கிடக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்கள் இல்லாத இடமே பூவுலகில் இல்லை என்றளவுக்கு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இந்தக் கழிவுகளால், பெய்யும் மழைநீர் மண்ணுக்குள் செல்ல முடிவதில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதும் தடுக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் பல்வேறு தீமைகள் ஏற்படும் என்ற விழிப்பு உணர்வு தற்போது அதிகரித்திருக்கிறது. ஆனாலும் அதன் பயன்பாடு குறையவில்லை.
நாளுக்கு நாள் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 2050 -ம் ஆண்டு பிளாஸ்டிக் பயன்பாடு 50 கோடி மெட்ரிக் டன் அளவுக்கு உயரும் என மதிப்பிட்டிருக்கிறார்கள். இத்தனை கழிவுகளையும் எப்படி மறுசுழற்சி செய்யப்போகிறோம் என்ற அச்சம் உலக நாடுகளிடம் எழுந்துள்ளது. இன்றைக்கு சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் பல்வேறு விதமான பொருள்களும் தினமும் அறிமுகமாகிக்கொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு மாற்றாக எளிதில் மக்கும் பேப்பர் பாட்டில் அறிமுகமாகியுள்ளது.
வாட்டர் பாட்டில்கள் தரையில் எறியும்போது அவை பல ஆண்டுகளானாலும் மக்குவதில்லை. ஆனால், புதிதாக அறிமுகமாகியுள்ள பேப்பர் பாட்டில் மண்ணில் விழுந்த மூன்றே வாரத்தில் மக்கிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்கார்ட்லாந்தைச் சேர்ந்த வேதியியல் மாணவர் ஜேம்ஸ் லாங்குரோப்ட், சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தப் பாட்டிலை உருவாக்கியுள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள ஜேம்ஸ், ‘‘எந்தவிதமான ரசாயன எரிபொருளும் பயன்படுத்தாமல் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாட்டிலின் உள்பக்கம் வாட்டர் புரூப் செய்யப்பட்டுள்ளது. அதனால் தண்ணீர் கசியாது. எடை குறைவானது. பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்தாலும் மூன்றே வாரத்தில் மக்கிவிடும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லை. இந்தப் பாட்டிலில் மூடி மட்டும்தான் இரும்பால் செய்யப்பட்டது. அதுவும் ஓர் ஆண்டுக்குள் மக்கிவிடும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக இந்த பேப்பர் பாட்டில் விளங்கும்” என தெரிவித்துள்ளார்.