காலா திரைவிமர்சனம்

காலா - விமர்சனம் .

நிலம் எங்கள் உரிமை - அந்த உரிமைதான் எங்கள் சுயநலம்.

இந்த ஒற்றை வரி கதையை வைத்து ஒரு புதிய புராணமே வடித்து வரலாறு படைக்கும் ஒரு காவியத்தை உருவாக்கிய பா.ரஞ்சித்திற்கு ஒரு ராயல் சல்யூட் ..

ரஜினி என்ற ஆளுமையை தன் திறமையால் முழுமையாக திரையில் கொண்டு வந்து ஒவ்வொரு காட்சியையும் சிற்பி போல செதுக்கி இருக்கிறார் ரஞ்சித் ..

திருநெல்வேலியில் இருந்து வந்து பம்பாய் தாராவி பகுதி குடிசைகளில் பல தலைமுறைகளாக வாழ்ந்து மும்பையின் வளர்ச்சிக்கு தங்கள் உடல் உழைப்பால் உருவகம் தந்த தமிழர்களையே அப்புறப்படுத்த நினைக்கும் மேலாதிக்க அதிகார வர்க்கத்திற்கு எதிராக பொங்கி எழுந்து தங்கள் நிலத்தையும் மக்களின் உரிமையையும் காக்கும் காலா வாக ரஜினி தன் பெரும் நடிப்பாற்றலில் நவரசங்களும் கலந்து படம் முழுக்க மிரட்டி உள்ளார் ...

ரஞ்சித்தின் திரைக்கதை மிக மிக கூர்மையாக உள்ளது..  ஒரு இடத்தில் கூட சலிப்பு தட்டாத வகையில் காட்சிகளை மிக துல்லியமாக கோர்த்து அனைத்து ரகமான ரசிகர்களையும் துள்ளி குதிக்க வைத்து விட்டார் ..

ஒரு முழு அதிரடி ஆக்ரோஷமான படத்தில் அதன் இடையே ரஜினிக்கும் ஹூமா குரோஷிக்கும் இடையே உள்ள பழைய காதலின் ஆழத்தை நிகழ் காலத்தில் ஒரு ஹைக்கூ கவிதை போல இந்த கால தலைமுறைகளை யும் ரசித்து உருகி மனதை கொள்ளை கொள்ளும் வகையில் கச்சிதமாக கட்டமைத்துள்ளார் ரஞ்சித்.

காலாவின் மனைவியாக வரும் ஈஸ்வரி ராவ் துடிப்பும் தவிப்பும் கலந்த நடிப்பில் திருநெல்வேலி நக்கல் பேச்சில் கலக்கி உள்ளார்...

காலாவின் மாப்பிள்ளையாக எப்போதும் போதையிலேயே வலம் வரும் சமுத்திரக்கனி பேசும் கவித்துவமான தத்துவம் நைய்யாண்டி வசனம் கலகலப்பான நடிப்பு கதையை மேலும் சிங்காரமாக அலங்கரிக்கிறது...

தேசிய விருதுகள் பல குவித்த நானா படேகரின் அமைதியான வில்லத்தனமான பேச்சும் உடல் மொழியும் காலாவிற்கு மிகப்பெரிய வலிமை சேர்த்துள்ளது...

ரஜினிக்கு இணையான வில்லன் ரகுவரனின் வெற்றிடத்தை நானா படேகர் நிரப்பிவிட்டார் ...

படத்தில் நடித்துள்ள ஒட்டுமொத்த குழுவும் பல மாதங்கள் கடுமையாக பயிற்ச்சி எடுத்து ஒத்திகை பார்த்துள்ளது திரையில் அவர்கள் கதாபாத்திரத்தில் மிக இயல்பாக ஒன்றியுள்ளதன் மூலம் தெளிவாக உணர முடிகிறது...

சென்னை பூந்தமல்லியில் தாராவியை தத்ரூபமாக வடிவமைத்து கண்முன்னே அப்படியே கொண்டு வந்து வசீகரித்துள்ளார் கலை இயக்குனர்.

பாடல் வரிகளும் பிண்ணனி இசையும் பிரமிப்பை தருகின்றன.

படத்தில் பல இடங்களில் இடம்பெற்றுள்ள கூர்மையான சுயமரியாதை வசனங்கள் பார்வையாளர்கள் மத்தியில் கைதட்டல் அள்ளுகிறது...

கண்ணம்மா கண்ணம்மா பாடல் காட்சிகள் வரும்போது எங்கே கபாலி படம் மாதிரி வேறு திசையில் கதை பயணிக்கிறதோ என்று நினைக்கையில் அதை எதிர்பாராத வகையில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி கதைஓட்டத்தை மின்னல் வேகத்தில் நகர்த்துகிறார் ரஞ்சித்.

வழக்கமான தாதா படத்தில் ஓப்பனிங்கில் வரும் பழைய புளித்து போன நாயகன் சண்டை காட்சிகள் பாடல் காட்சிகள் என இல்லமல் யாருமே எதிர்பாராத வகையில் ஒரு புதுமையான களத்தை அமைத்து அசத்தியுள்ளார் ரஞ்சித் ....

காலாவை அறிமுகப்படுத்தும் முதல் காட்சியே அட அட்ராசக்கை என படத்தோடு சேர்ந்து நம்மை நிமிர்ந்து பயணிக்க வைக்கிறது...

படத்தின் முதல் பகுதியில் பல இடங்களில் ரஜினி இப்போது சண்டை போடுவார் அப்போது சண்டை போடுவார் என ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றி விட்டு சரியாக இடைவேளைக்குப் பத்து நிமிடம் முன் எதிர்பாராத வகையில் காலா குடையை வைத்து போடுவாரு பாருங்க ஒரு பைட்டு .. அது செம வெயிட்டு...

இடைவேளை போடும் இடம் இதுவரை எந்த படத்திலும் இடம்பெறாத காட்சி...

பாடலோடு இணைந்து கதையையும் நகர்த்துவது ரஞ்சித்திற்கு கை வந்த கலை போல .

ராம்லீலா கதை பிண்ணனி ஓட்டத்துடன் அமைக்கபட்ட பிரமாண்டமான 40 நிமிட க்ளைமேக்ஸ் காட்சி இது வரை எந்த திரைப்படத்திலும் இடம்பெறாத மயிர் கூச்செரியும் அபாரமான புதுமை முயற்சி ....

ப்ளாஸ்பேக் காட்சிகளை 5 நிமிட கார்டூன் படங்கள் மூலம் மிக அழகாக உயிரோட்டத்துடன் சொல்லி உள்ளார்கள்..

படத்தில் உள்ள மிக பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து குழப்பமில்லாத திரைக்கதையை அமைத்து எடிட்டிங் மிக தெளிவாக செய்துள்ளனர்...

படத்தில் வரும் எந்த ஒரு காட்சியும் பழைய படங்களின் சாயல் இல்லாமல் நினைவுபடுத்தாமல் எல்லாமே புதுமையான காட்சிகளாக உள்ளது..

ரஜினியிடம் இருந்து இது வரை எந்த இயக்குனரும் கொண்டு வராத ஸ்டைலிஷ் ரஜினி நடிப்பை இந்த 67 வயதிலும் வெளிக்கொண்டு வந்து ரஜினியின் முழுதிறமையையும் மிக மிக சிறப்பாக 100% முழுமையாக பயன்படுத்தி உள்ளார் பா.ரஞ்சித் ...

எந்த இடத்திலும் மிகைபடுத்தபடாத நடிப்பில் மிகைபடுத்தபடாத காட்சி மூலம் இந்த கால இளைய தலைமுறைகளை முழுமையாக திருப்தி படுத்தும் இந்த படம்...

க்ளைமாக்ஸ் செம செம செம என்று கோடி செம சொன்னாலும் தகும்...

ரஜினியின் நடை உடை பாவனை ஆவேசம் வசனம் என அனைத்திலும் காலத்திற்கேற்ற மாற்றத்தை ஏற்படுத்தி புது ஸ்டைலு ரஜினியை கண் முன்னே கொண்டு வந்து இதுவரை ரஜினியை பிடிக்காதவர்களை கூட பிடிக்க வைக்கும் அளவிற்கு ரஞ்சித் படமாக்கியுள்ளார் .

கிளாஸூம் உச்சகட்ட மாஸூம் கொண்ட அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் படமாக காலா வை உருவாக்கியுள்ளார் பா.ரஞ்சித் ...

கண்டிப்பாக இந்த படம் பல தேசிய விருதுகளையும் சர்வதேச விருதுகளையும் வாங்கி குவிக்கும்...

காலா நூறு பாட்ஷா இல்ல ... அதுக்கும் மேல ...

பெருமகிழ்ச்சி !
புதியது பழையவை