பெயில் பற்றிய முழு விபரங்கள்



குற்றம் புரிந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குத் தொடுத்து, அவர்களை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி, சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பித்து அவர்களால்தான் அந்தக் குற்றம் செய்யப்பட்டது என்பதை நிரூபித்து குற்றவாளிகளுக்குத் தண்டணை பெற்றுத் தருகிறார்கள். 


இது போன்ற வழக்குகளானது அதில் செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்ற குற்றங்களைப் பொறுத்து, பெயிலில்விடக்கூடிய வழக்கு’  மற்றும் ‘பெயிலில் விட முடியாத வழக்கு’ என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.


பெயிலில்  விடக்கூடிய வழக்குகள் (Bailable Offence)

இவை பெரும்பாலும் சிறு சிறு குற்றங்களாகும். இது போன்ற குற்றங்களில் காவல்துறை அதிகாரியே கைது செய்யப்பட்டவரை பெயிலில் விடுவிக்கலாம். 


ஜாமீன் தருவோர்கூட தேவையில்லை. கைது செய்யப்பட்டவரிடமே ஜாமீன் பெற்று கொண்டு அவரை காவல்துறை அதிகாரி பெயிலில் விடலாம். 


பெயிலில் விட முடியாத வழக்குகள் (Non Bailable Offence)

இவை இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத் தண்டணை விதிக்கும் அளவிற்கு உள்ள பெரிய குற்றங்களாகும்.


 இதுபோன்ற குற்றங்களைச் செய்தவர்களை காவல்துறை அதிகாரியால் கைது செய்யத்தான் முடியும். பெயிலில் விட முடியாது. எனவே இது போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உரிய நீதிமன்றத்தில்தான் பெயில் பெற முடியும். 


அவ்வாறு பெயிலில் விட முடியாத வழக்கு ஒன்றில் காவல்துறையினரால் குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒருவர் நீதிமன்றத்தில் பெயில் கேட்டால், அவருக்கு எதிராக வாதாடக்கூடிய, அரசு தரப்பு வழக்கறிஞர் அந்த குற்றவாளிக்கு பெயில் கொடுக்கக் கூடாது என்று ஆட்சேபணை செய்வார். 


எதனால் ஆட்சேபணை செய்கிறீர்கள்? என்று நீதிபதி கேட்டால், கீழ்க்கண்ட காரணங்களைக் கூறுவார். 


1. குற்றவாளி விசாரணையின் போது முறையாக ஆஜராக மாட்டார்

2. சாட்சிகளை கலைத்துவிடுவார்.

3. பெயிலில் வந்த பிறகு அவர் மேலும் வேறு குற்றங்களைப் புரிவார்

4. காவல்துறையின் விசாரணை இன்னும் முடியவில்லை

 5. திருட்டுபோன பொருட்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை

6. குற்றம் புரிய பயன்படுத்திய ஆவணங்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை

7. சக குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

8. சாட்சிகளின் உயிருக்கு ஆபத்து.

குற்றம் சாட்டப்பட்டவர் அரசு தரப்பு / எதிர் தரப்பு வழக்கறிஞர் கூறும் இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுத்து பதிலளிக்க வேண்டும்.இல்லாவிட்டால் பெயில் கிடைக்காது. 


பெயிலில் வர மனு எப்படிப் போடுவது?


குற்றஞ்சாட்டப்பட்டவர் சிறையில் இருக்கும்போது தன்னுடைய உறவினர்களின் மூலமாகவோ அல்லது நண்பர்களின் மூலமாகவோ பெயிலில் வருவதற்கு தகுந்த வழக்கறிஞரின் உதவியை நாடலாம். 


இலவசமாக பெயில் எடுப்பதற்கு, வாரம் ஒருமுறை நேரடியாக ஜெயிலுக்கே வந்து, ஜெயிலில் உள்ளவர்களை இலவச சட்ட உதவி மைய வழக்கறிஞர் ஒருவர் சந்திப்பார். 


அவர் மூலமாகவும் உறவினர்களை  அல்லது நண்பர்களை தொடர்பு கொண்டு முயற்சி செய்யலாம்.


குற்றஞ்சாட்டப்பட்டவர் சட்டநுணுக்கங்கள் தெரிந்தவராக இருந்தால் நேரடியாகவே ஜெயில் அதிகாரி மூலமாக நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம்.


 அந்த மனுவில் பெயில் பெறுவதற்காக கீழ்க்கண்ட தகுந்த காரணங்களை குற்றஞ்சாட்டப்பட்டவர் குறிப்பிட வேண்டும்.


1. பெயிலில் செல்லாவிட்டால் தனது வேலையை இழக்க நேரிடும்.


2. குடும்பத்தில் தான் மட்டுமே சம்பாதிக்கும் நபர் என்பதால், தனது குடும்பம் வருமானம்     இன்றி பாதிக்கப்படுகிறது


3. தனக்கு உடல் நலமில்லை,  வெளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை    எடுத்தால்தான் குணமாக முடியும்.


4. மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல் முறையீட்டு மனு நிலுவையில்    இருக்கும்போது தண்டனை கைதியை தொடர்ந்து சிறையில் வைப்பது என்பது நீதிக்கு    எதிரானது.


ஜாமீன்


குற்றஞ்சாட்டப்பட்டவரை பெயிலில் எடுப்பதற்கு அது சிறிய குற்றம் என்றால், ரூ.50,000/- மதிப்புள்ள அசையா சொத்து வைத்திருக்கும் இரண்டு நபர்கள் ஜாமீன் கொடுக்க வேண்டும். 


வழக்கறிஞர் குறிப்பிடும் நாளில் ஜாமீன்தாரர்கள். நீதிமன்றத்திற்கு அசல் குடும்ப அட்டையுடன் செல்ல வேண்டும்.


 நீதிபதி அவர்களிடம், குற்றம் சாட்டப்பட்டவரை உங்களுக்கு எப்படித் தெரியும்? அவர் பெயர் என்ன? அவரது தந்தையின் பெயர் என்ன? அவர் எந்த ஊரில் வசித்து வருகிறார்? அவரது மனைவி பெயர் என்ன? என்ன குற்றம் செய்துள்ளார்? உங்கள் பெயர் என்ன? உங்கள் தந்தையின் பெயர் என்ன? உங்கள் சொத்து எந்த ஊரில் உள்ளது? அதன் மதிப்பு என்ன? என்ற கேள்விகளை கேட்பார்.


 அவற்றிற்கு தகுந்த பதில்களை ஜாமீன் அளிப்பவர் சொல்ல வேண்டும்.


 குறிப்பிடும் நிபந்தனைகளின்படி குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் அல்லது காவல் நிலையத்தில் ஆஜராகாவிட்டால் உங்களை கைது செய்ய நேரிடும்! என்பதையும் நீதிபதி ஜாமீன்தாரர்களிடம் தெரிவிப்பார். 


பின்பு ஜாமீந்தாரர்களின் குடும்ப அட்டையில் நீதிமன்ற முத்திரை வைத்து பெயில் வழங்கப்படும்.


பெயில் மறுப்பு மற்றும் மேல் முறையீடு

குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை பெயிலில்விட நீதிபதி மறுத்தால் அதற்கான காரணங்களை அவர் தனது தீர்ப்பில் கூறவேண்டும். 


அதனை வைத்துதான் குற்றம் சாட்டப்பட்டவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.


ஒருவரது பெயில்மனு தள்ளுபடி ஆனால் அதே நீதிமன்றத்தில் சில காலம் கழித்து மீண்டும் மனு போடலாம் அல்லது உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்யலாம்


முன் ஜாமீன் (Anticipatory Bail)

தன் எதிராளிகளால் பொய்யான வழக்கு தன்மீது போடப்பட்டு சில நாட்களாவது தன்னை சிறை வைக்க முயலக்கூடும் என ஒருவர் எண்ணினால் முன் ஜாமீன் கேட்டு மனு செய்ய சட்டத்தில் இடமுண்டு


இதற்கான மனுவை அவர் மாவட்ட நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.


 வாரன்ட் இல்லாமல் போலிசாரால் கைது செய்யப்பட்டால் , அவர் ஜாமீன் தர தயார் என்றால் அவரை ஜாமீனில் விட வேண்டும் என்று இந்த முன் ஜாமீன்  மூலம் நீதிமன்றம் உறுதி செய்கிறது.


குறிப்பு:

உச்சநீதிமன்றத்தில் பெயில் ஆர்டர் பெற்றிருந்தால்கூட, தண்டனை கொடுத்தவர்களே பெயில் கொடுக்க வேண்டும் என்பதால் தண்டணை வழங்கப்பட்ட நீதிமன்றத்தில்தான் அந்த பெயில் ஆர்டரை கொடுத்து பெயில் பெற வேண்டும் என்பது சட்டமாகும்..........

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை