வீட்டைச் சொந்தமாக கட்டி முடிக்கவோ அல்லது கட்டி முடித்த வீட்டை வாங்கவோ மிகப்பெரும் செலவு ஆகிறது. அந்த செலவை வங்கிகளில் கடன் வாங்கி சமாளிக்கலாம். ஆனால் வீடு கட்டுவதோடு செலவுகள் முடிவுக்கு வந்துவிடுவதில்லை.
புதுப்பிக்க கடன்
சுவர்களில் விரிசல், தரையில் பதித்துள்ள டைல்ஸ் உடைவது, மின் இணைப்புகளில் பழுது, தண்ணீர் இணைப்புகளில் கோளாறு என்று தொடர்ந்து ஏதாவது ஒரு செலவு வந்துகொண்டே இருக்கும். எனவே போதிய இடைவெளியில் வீட்டை புதுப்பித்து வந்தால்தான் வீடு நல்ல நிலையில் இருக்கும்.
வீட்டைக் கட்டுவதற்கு வங்கிக்கடன் கிடைப்பது போல, புதுப்பிப்பதற்கும் கடன் வழங்கப்படுகின்றன. மேற்கூரையை சரிப்படுத்தவும், உடைந்த டைல்ஸ்களை மீண்டும் பதிக்கவும், சுவர்களுக்கு புதிதாக வண்ணம் தீட்டவும் இந்த கடனை வாங்கலாம். ஏற்கெனவே வங்கிக்கடன் பெற்றவர்கள், புதிதாக வாங்கிய வீட்டைப் புதுப்பிப்பவர்கள் என இரண்டு தரப்பினருக்குமே இந்த கடன்வசதி அளிக்கப்படுகிறது.
கடனில் முன்னுரிமை
வங்கிக்கடன் பெற்று வீடு கட்டியவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. அவர்களது வீட்டு ஆவணங்கள் முன்பே வங்கிகளில் சரிபார்க்கப்பட்டுள்ளன என்பதே இந்த முன்னுரிமைக்கான காரணம்.
பொதுவாக இந்தக் கடன் ஒரே தொகையாக வழங்கப்படுவதில்லை. நடைபெறும் கட்டுமான வேலைகளுக்கு ஏற்றபடி, பகுதி பகுதியாகவே கொடுக்கப்படுகின்றன. கடன் வாங்குபவர்கள் அந்த தொகையை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது என்பதால்தான் இந்த ஏற்பாடு.
வட்டி விகிதம் குறைவு
அதே காரணத்தால்தான் வீட்டைப் புதுப்பிப்பதற்கான கடனில் மரச்சாமான்கள் வாங்குவதற்கும், அவைகளை பழுது பார்ப்பதற்கும் மேற்கொள்ளும் செலவுகளை ஏற்றுக்கொள்வதில்லை.
தனிநபர் கடனை காட்டிலும் குறைவான வட்டி வீதம், தவணை முறையில் திருப்பிச் செலுத்துவதற்கான ஏற்பாடு ஆகியவற்றால் இந்தக் கடனை வாங்குவதற்கான விருப்பம் அதிகரித்துவருகிறது. வீட்டைப் புதுப்பிப்பதற்காக கடன் வாங்கும்போது வருமான வரிவிலக்கும் அனுமதிக்கப்படுகிறது. வருமான வரிச்சட்டத்தின் 24–வது பிரிவின்கீழ் 30,000 ரூபாய் வரையிலும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
ஆதாரம் : தினத்தந்தி நாளிதழ்
Tags
கடன் வாங்கலாம்