இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு ரத்தம் சிந்தா புரட்சி அல்ல! ஆயிரம் ஆயிரம் விடுதலைப் போராளிகள் ரத்தம் சிந்திய தியாக வேள்வி. இந்திய விடுதலைப் போராட்டத்தில் எவரோடும் ஒப்பிட இயலாத தன்னிகரில்லாத தலைவர் வ.உ.சிதம்பரம் அவர்கள்.
வ.உ.சி காங்கிரஸ்காரர்களைப் போல, வெறும் தேசியவாதி அல்ல. வலிமையான மக்கள் போராட்டத்தின் வாயிலாக பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை இந்திய மண்ணிலிருந்து தூக்கி எறிய முடியும் என்று அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த தலைவர் வ.உ.சி.
கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்தும், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்தும் அந்நிய ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் தென் தமிழகத்தில் புரட்சிப் புயலாய் சுழன்றடித்தது. பரங்கியரை குலை நடுங்க வைத்த மாவீரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம், பூலித்தேவன், மருது சகோதரர்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தார்கள்.
வீரத்தின் விளைநிலமாய் தியாகத்தின் இலக்கணமாய் திகழ்ந்த மாவீரர்களின் தொடர்ச்சியாய் தென்தமிழகத்தில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா போன்ற தியாக சீலர்கள் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துக் களமாடிய போராட்டம் இந்திய வரலாற்றில் புகழ்மிக்க வரலாறாகும். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் காலனி ஆட்சிக்கு எதிரான விடுதலை போராட்ட பெருநெருப்பு பல இடங்களில் பற்றி எரிந்தது.
குறிப்பாக தென் தமிழகத்தில், கோரல் மில் நூற்பாலையில் 12 மணி நேர வேலை பார்க்க தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்பட்டனர்.ஓய்வில்லாமல் வேலை வாங்கப்பட்டனர். தொழிலாளி வர்க்கத்தின் உழைப்புகடுமையான முறையில் சுரண்டப்பட்டது. வார விடுமுறை கொடுக்காமல் தொழிலாளர்களை கொடுமைப்படுத்தியது.
கோரல் மில்லில் மகத்தான தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வ.உ.சி அவர்கள் தலைமையில் ஒன்பது நாள் நடைபெற்றது. வெற்றிகரமாக நடைபெற்ற இப்போராட்டத்தின் விளைவாய் வேலை நேரம் குறைப்பு விடுமுறை உரிமைகள் தொழிலாளர்களுக்கு கிடைத்தது.நாட்டு விடுதலைப் போராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தையும் பங்கெடுக்க வைத்த மகத்தான தலைவர் வ.உ.சி.
வ. உ.சி கோரல் மில் தொழிற்சாலையில் நடந்த வேலை நிறுத்தத்தில் தலைமையேற்று வழிநடத்தினார். விடுதலைப் போராட்ட வீரராக மட்டுமல்லாமல் தொழிலாளர்களை சுரண்டும் கொடுமைக்கு எதிராகவும், அஞ்சாமல் போராடிய தலைவர் வ.உ.சி.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கக் கப்பல் போக்குவரத்துக்கு எதிராக தனது சொத்துக்களையெல்லாம் விற்று தேசபக்தர்கள் மூலம் நிதி திரட்டி சுதேசிய கப்பல் கம்பெனி துவங்கி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு கடும் சவாலை ஏற்படுத்தினார். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியவர்.
1908, பிப்ரவரி 23 – 26 தேதிகளிலும் மார்ச் 1-3 தேதிகளிலும் தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மாபெரும் மக்கள் திரள் கூட்டத்தில் வ.உ.சி அவர்களின் உரைவீச்சு விடுதலைப் போராட்ட கனலை மேலும் பற்றி எரியச் செய்தது. காலனி ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக 150a பிரிவின் கீழ் தூத்துக்குடி சதி வழக்கு புனையப்பட்டது.
தூத்துக்குடி சதி வழக்கை விசாரித்த நீதிபதி பின்ஹே, 1908, ஜூலை 7-ம் தேதி தனது தீர்ப்பை வழங்கினான். அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்த குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனை, சிம்மக்குரலோன் சுப்பிரமணிய சிவா அவர்களுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அதற்கு இன்னொரு ஆயுள் தண்டனை என 40 ஆண்டுகள் ஜீவாந்திர தண்டனையை அந்தமான் சிறையில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் தூத்துக்குடியில் திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டன. மக்கள் அலையலையாய் ஆர்ப்பரித்தனர்.
பிரிட்டன் அமைச்சரவையில் இந்தியாவிற்கான அமைச்சராக இருந்த லார்ட்மூர்லி ஒரு “சொற்பொழிவுக்காக 40 ஆண்டுகள் சிறை தண்டனையா, என்ன நீதி இது?” என்று வைஸ்ராய் லார்டு மிண்டோ-விற்கு கடிதம் எழுதினார். இலண்டன் பிரிவ் கவுன்சில், அவரது தண்டனையை ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைத்து, தமிழக சிறைகளில் இருக்கலாம் என்று கூறியது.
கோவை மத்திய சிறையில் தான் சிதம்பரனாரின் வாழ்வின் துயரம் மிக்க பக்கங்களை, காலம் கொடூரமாக எழுதியது. விடுதலைப் போராட்ட வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைத்த அந்த மாமனிதனின் மகத்தான அர்ப்பணிப்பு – இணையற்ற தியாகம் – எதற்கும் அஞ்சாத வீரம் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை.
கப்பலோட்டிய தமிழன் கண்ட லட்சியக் கனவு இன்னும் ஈடேறவில்லை. கேந்திரமான கட்டமைப்புகளை பன்னாட்டு ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் இந்திய ஆட்சியாளர்களும், உலகமய சூழ்நிலையில் நாட்டை மீண்டும் மறு காலனி ஆதிக்கத்திற்கு கொண்டு செல்லத் துடிக்கும் கார்ப்பரேட் காவி பாசிச கும்பலும் அரசியல் அதிகாரத்தில் உள்ள போது, அதை எதிர் கொள்ள வ. உ.சி. அவர்களின் போராட்ட வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு புதிய வெளிச்சத்தை காட்டும்.
விடுதலையை நேசித்து மரணத்திலும் வாழ்ந்த வ.உ.சி. அவர்களுக்கு புகழ் வணக்கம் !