பொங்கல் 2023.. புதிய டிசைன்களில் இலவச வேட்டி- சேலை வழங்க தமிழக அரசு முடிவு.. மொத்தம் 15 வெரைட்டி!

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு இலவச வேட்டி சேலைகளை புதிய டிசைனில் வழங்க முடிவு செய்துள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது ஏழை மக்களும் புத்தாடை உடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் தமிழக அரசால் எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் எந்த கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைத்தாலும் செயல்படுத்தி வருகிறது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் இந்த பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி சேலை விநியோகம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலகம்

தலைமை செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ஐ பெரியசாமி, காந்தி, சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். அதில் இந்த ஆண்டு புதிய டிசைனில் இலவச வேட்டி சேலைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 15 டிசைன்கள் மற்றும் பல நிறங்களில் சேலைகளும் 5 டிசைன்களில் வேட்டிகளும் வழங்கப்படுகிறது.


10 ஆண்டுகளுக்கு பிறகு

2014 ஆம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா இருந்த போது சேலைகளின் டிசைன்கள் மாற்றப்பட்டு பருத்தி சாயமிட்ட நூலினால் ஆன சேலைகள் வழங்கப்பட்டது. அதன் பிறகு தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இலவச வேட்டி சேலைகளின் டிசைன் மாற்றப்படுகிறது. இந்த இலவச வேட்டி சேலைகளை அனைத்து ரேஷன் கடைகளிலும் வரும் ஜனவரி மாதம் 10 ஆம் தேதிக்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அது போல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்பு குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

பணமாக வழங்க முடிவு?

பொங்கல் தொகுப்பு வழங்கலாமா இல்லை பணமாக வழங்கலாமா என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த முறை 14 மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு தரமற்றதாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டது.

அதிமுக ஆட்சி

அது போல் இந்த ஆண்டும் நடைபெறாமல் இருக்க பொருட்களுக்கு பதில் பணமாக கொடுத்துவிடுவது குறித்து ஆலோசனை நடக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை பொங்கல் பரிசாக ரூ 1000 வழங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் அந்த தொகை ரூ 2000 ஆக அதிகரித்து வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை