பொங்கல் பரிசு ரூ.1000: நாளை முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம்!

பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கம் வழங்குவதற்கான டோக்கன்கள் நாளை முதல் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரேசன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜனவரி 2ஆம் தேதி முதல் இந்த பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு (Pongal Gift)
பொங்கல் ரொக்கப் பணம் தமிழ்நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. ரூ.1000 ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரூ.1000 வழங்குவதை வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வரும் மாவட்டங்களில் அமைச்சர்களும் தொடங்கி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1000 பொங்கல் பரிசு பணத்தை அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெற முடியும். சர்க்கரை அட்டை வைத்து இருப்பவர்களுக்கு இந்த பணம் கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 பரிசுத்தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி PHH, PHH-AAY, NPHH அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என தெரிகிறது. NPHH-S என்று குறிப்பிட்டிருக்கும் ரேஷன் கார்டுக்கு சர்க்கரை மட்டுமே வழங்கப்படும். NPHH-NC ரேஷன் அட்டைதாரர்களுக்கு எந்த பொருளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் கூறி வருகின்றனர். பொங்கல் பரிசு தொகுப்பில் வெல்லம் தர வேண்டும் என்றும் கரும்பு தர வேண்டும் என்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை