வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி?

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு வாழைத்தண்டு சூப் மிகவும் ஆரோக்கியமான உணவு.

 வாழைத் தண்டிலுள்ள நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகப் படியான சதையைக் குறைத்து உடலை சிக்கென மாற்றும்.

இதிலுள்ள வைட்டமின் பி6, ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம் இதய தசைகளை வலுவடையச் செய்கிறது.

இத்தகைய வாழைத்தண்டை கொண்டு இனி சூப் செய்து குடியுங்கள். 

தேவையான பொருட்கள் 

வாழைத்தண்டு – 200 கிராம்

பாசிப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 10

சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்

வெள்ளைப் பூண்டு – 4

இஞ்சி – கட்டை விரல் அளவு

மிளகு – 1 ஸ்பூன்

கொத்த மல்லி – ஒரு கொத்து

உப்பு – தேவையான அளவு

மிளகு பொடி – தேவையான அளவு

செய்முறை

வாழைத்தண்டினை வட்ட வட்டமாக வெட்டவும்.

வாழைத்தண்டினை வெட்டும் போது வரும் நாரினை, ஆட்காட்டி விரலில் சுற்றி வெளியே இழுக்க வந்து விடும்.

வாழைத்தண்டினை வட்டமாக வெட்டியதும் தண்ணீரில் போடவும். இல்லையெனில் வாழைத்தண்டு கறுத்து விடும். வட்டமாக வெட்டிய வாழைத்தண்டினை சிறுசிறு சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் வெட்டவும். இஞ்சி, வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும். கொத்தமல்லி இலையை அலசி பொடியாக வெட்டவும்.


பாசிப் பருப்பினை அலசி வைக்கவும். மிளகினை ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். குக்கரில் நறுக்கிய வாழைத்துண்டினை சேர்க்கவும். 

பின்னர் அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, வெள்ளைப் பூண்டு, சீரகம், பொடித்த மிளகு, இரண்டு டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து குக்கரினை மூடி அடுப்பில் வைக்கவும்.   

ஒரு விசில் வந்ததும், சிம்மில் ஐந்து நிமிடங்கள் வைத்து, அடுப்பினை அணைத்து விடவும். குக்கரின் ஆவி அடங்கியதும் திறந்து தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.


மீதமுள்ள வாழைத்தண்டு கலவையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவை மற்றும் அவித்த முழு வாழைத்தண்டு ஆகியவற்றை, ஏற்கனவே வடித்து வைத்துள்ள வாழைத்தண்டு தண்ணீரில் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு, கலவையை வடித்துக் கொள்ளவும். சூப்பரான சூப் தயார்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை