ஊராட்சி நிர்வாகம் தெரிந்து கொள்வோம்...

நோக்கம்

தமிழ்நாட்டில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று காலத்திலேயே வளர்ச்சி அடைந்த உள்ளாட்சி நிர்வாகம் நடைமுறையிலிருந்தது. உள்ளூர் சுயாட்சி அமைப்புகள் சோழர் ஆட்சிக் காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான வரலாற்றுச் சான்றுகள் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அமைந்துள்ள ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் உள்ளன.

இக்கல்வெட்டுகள், பராந்தகச் சோழர் ஆட்சி செய்த கி.பி.920-ஆம் ஆண்டினைச் சார்ந்ததாகும். இத்தகைய மக்களாட்சி அமைப்பில் கிராமக்குழுக்களின் உறுப்பினர்கள் இரகசியக் குடவோலை' முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கிராம் அளவில் பொருளாதார மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை முழுமையான சுதந்திரத்துடன் செயல்படுத்தி வந்தனர்.

சோழர் ஆட்சிக் காலத்தின் இரகசிய வாக்குப்பதிவே இன்றைய தேர்தல் முறையின் அடித்தளமாகும். பெரிய குடம் ஒன்று கிராமத்தின் முக்கியமான பகுதியில் வைக்கப்பட்டு, வாக்குப்பெட்டியாகப் பயன்படுத்தப்பட்டது. வாக்குரிமை பெற்றோர் தங்களுக்கு விருப்பமான வேட்பாளரின் பெயரை பனை ஓலையில் எழுதி அக்குடத்தில் போடுவர். இறுதியாகக் குடத்தில் உள்ள ஓலைகள் வெளியே எடுக்கப்பட்டு, வேட்பாளர்கள் வாரியாக எண்ணப்பட்டு அதிக வாக்குகள் பெற்றவர்கள் கிராமக் குழுவின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிராமக் குழுவின் உறுப்பினராகப் போட்டியிடுவதற்கான தகுதிகள் மற்றும் தகுதியின்மைக்கான விதிகள் வகுக்கப்பட்டிருந்தது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும்.

சுதந்திரத்திற்குப் பின், அரசியலமைப்புச் சட்டம் பகுதி IV, பிரிவு 40ல் கிராம ஊராட்சிகளை அமைத்து அவற்றுக்கு அதிகாரங்களும், பொறுப்புகளும் வழங்க வழிவகை செய்யப்பட்டது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட திரு.பல்வந்த்ராய் மேத்தா அவர்கள் தலைமையிலான குழு, 1957ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்பித்த அறிக்கையில் ஜனநாயக அடிப்படையில் அதிகார பரவலாக்கம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஊராட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரம் வழங்கிட பரிந்துரைத்தது.

இதன் அடிப்படையில் மதராஸ் அரசு கீழ்க்கண்ட முக்கிய அம்சங்களை கொண்ட மதராஸ் பஞ்சாயத்துச் சட்டம் 1958 மற்றும் மதராஸ் மாவட்ட வளர்ச்சி மன்றச் சட்டம் 1958 ஆகியவற்றை இயற்றியது.

  1. ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகள் என்ற இரண்டு அடுக்கு முறை.
  2. சமுதாய வளர்ச்சி வட்டார எல்லையின் அடிப்படையில் ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்குதல்.
  3. கிராம ஊராட்சித் தலைவர்கள் ஊராட்சி ஒன்றியக் குழுவின் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக இருப்பர். ஊராட்சி ஒன்றியக் குழு தலைவரை நேரிடையான / மறைமுகமான தேர்தல் செய்தல் மூலம் தேர்வு செய்தல்.
  4. பல்வேறு வளர்ச்சி மற்றும் நலப்பணிகளை ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளிடம் ஒப்படைத்தல்.
  5. மாவட்ட கழகங்களை கலைத்தல்
  6. மாவட்ட வளர்ச்சி மன்றக் குழு என்ற ஆலோசனை வழங்கும் அமைப்பினை ஏற்படுத்துதல்

73-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்

73-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், 1992 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 243 ஊராட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை பகிர்ந்தளிக்க வகை செய்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் 11-வது அட்டவணையில் 29 இனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 74-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மாவட்ட திட்டக் குழு அமைக்க வகை செய்கிறது. இவற்றின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ஐ இயற்றியது. இச்சட்டமானது 22.04.1994 அன்று நடைமுறைக்கு கொண்டு வந்தது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 கீழே குறிப்பிட்டவாறு பல மாறுதல்களை தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி அமைப்புகளில் கொண்டு வந்தது.

  • தமிழ்நாட்டில் கிராம ஊராட்சி, வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சி என மூன்றடுக்கு ஊராட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவற்றின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக கட்டாய தேர்தல் அல்லது அவை கலைக்கப்பட்ட தேதியிலிருந்து 6 மாத காலம் முடிவதற்கு முன்பு தேர்தல் நடத்துதல்.
  • ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் உள்ள மொத்த மக்கள் தொகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பதவியிடங்கள் (வார்டு உறுப்பினர்கள்) மற்றும் தலைமைப் பதவியிடங்களுக்கு (ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் / ஊராட்சித் தலைவர்) சுழற்சி முறையுடன் கூடிய இட ஒதுக்கீடு கொண்டு வருதல்.
  • மொத்தப் பதவி மற்றும் தலைமைப் பதவியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு சுழற்சி முறையுடன் கூடிய இட ஒதுக்கீடு செய்யும் முறையை கொண்டு வருதல்.
  • ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய காலத்தில் தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் என்ற சுதந்திரமான அமைப்பினை ஏற்படுத்துதல்.
  • மாநில அரசின் நிதி ஆதாரங்களை ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளித்திட பரிந்துரை செய்யும் வகையில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாநில நிதி ஆணையத்தினை ஏற்படுத்துதல்
  • ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தயாரித்துள்ள திட்டங்களைத் தொகுத்து மாவட்டத்திற்கான விரிவான வளர்ச்சித் திட்டத்தினைத் தயாரித்திட ஏதுவாக மாவட்ட திட்டக்குழுவினை ஏற்படுத்துதல்.
  • கிராம ஊராட்சியிலுள்ள அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கிய 'கிராம சபை' என்ற அமைப்பினைக் கொண்டு வருதல்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ன் கீழ் வெளியிடப்பட்ட முக்கிய விதிகள்

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994ன் பிரிவுகளின் அடிப்படையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தொடர்புடைய அனைத்து விதிகளையும் வெளியிட அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசால் உருவாக்கப்படும் விதிகள் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994ல் தெரிவிக்கப்பட்ட அம்சங்களை செயல்படுத்த தொடர்புடைய அமைப்புகளுக்கும், அலுவலர்களுக்கும் உறுதுணையாகத் திகழ்கின்றன.

தமிழ்நாடு ஊராட்சிகள் (கிராம ஊராட்சி கூட்டத்தினை கூட்டுவது மற்றும் நடத்துவதற்கான குறைவெண் வரம்பு மற்றும் நடைமுறைகள்) விதிகள், 1999

ஊராட்சி மன்றக் கூட்டங்களுக்கிடையிலான கால இடைவெளி, கூட்டம் நடத்துவதற்கான அறிவிப்பு மற்றும் பொருள்கள் சார்வு செய்தல், குறைவெண் வரம்பு, வருகைப் பதிவு, தீர்மானம் நிறைவேற்றுதல், கூட்ட நடவடிக்கைக் குறிப்புகள் தயார் செய்தல் மற்றும் ஆவணங்களைப் பாதுகாத்தல் ஆகியவை குறித்து இவ்விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சபை நடத்துவது தொடர்பான விதிகள்

தமிழ் நாடு கிராம சபை (கூட்டுதல் மற்றும் நடத்துவதற்கான நடைமுறைகள்) விதிகள் 1998 மற்றும் அவ்விதிகளுக்கு 2006-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட திருத்தங்களில் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அரசாணையின்படி குறைந்தபட்சம் ஆண்டுக்கு 4 முறை, அதாவது ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களில் கிராம சபை நடத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிராம சபை நடத்துவதற்கான நெறிமுறைகள்

  • குறைவெண் வரம்பு,
  • கூட்டப்பொருள்,
  • வருகைப் பதிவு,
  • தீர்மானங்கள் இயற்றுதல்
  • மற்றும் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளைத் தயார் செய்தல்

ஆகியவை குறித்த நெறிமுறைகள் இவ்விதிகளில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு ஊராட்சிகள் (தேர்தல்) விதிகள், 1995

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடி மற்றும் மறைமுகத் தேர்தல்களை நடத்துவது குறித்து இவ்விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்,
  • வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் வெளியிடுதல்,
  • தேர்தல் அறிவிப்பு வெளியிடுதல்,
  • வேட்பு மனு தாக்கல்,
  • வாக்குப்பதிவு,
  • வாக்குகளை எண்ணுதல்,
  • ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல்,
  • கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல்,
  • தேர்தல் செலவினங்கள்,

தேர்தல் வழக்குகள் ஆகியவை குறித்து இவ்விதிகளில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு ஊராட்சிகள் (இட ஒதுக்கீடு மற்றும் இட ஒதுக்கீட்டிற்கான சுழற்சி முறை விதிகள், 1995

மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவியிடங்களில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் இட ஒதுக்கீட்டிற்கான சுழற்சி முறை ஆகியவை குறித்து இவ்விதிகளில் விவரிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு ஊராட்சிகள் கட்டட விதிகள், 1997

ஊரகப் பகுதிகளில் மனைப் பிரிவுகள் அங்கீகாரம் மற்றும் கட்டட வரைபடங்களை அங்கீகரித்தல் ஆகியவற்றுக்கான நடைமுறைகள் இவ்விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விதிகளின்படி, 200 சதுர மீட்டருக்கு மிகாத குடியிருப்பு கட்டடங்களுக்கும், 100 சதுர மீட்டருக்கும் மிகாத வணிக கட்டடங்களுக்கும் சில வரைமுறைகளுக்குட்பட்டு கட்டட வரைபட அனுமதி அளிக்க சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளன. பின்னர், கட்டட வரைபட அனுமதி அளிக்கும் அதிகார வரம்பு குடியிருப்பு கட்டடங்களுக்கு 4000 சதுர அடியாகவும், வணிக கட்டடங்களுக்கு 2000 சதுர அடியாகவும் உயர்த்தி நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குநர் அவர்களால் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட பரப்பளவிற்கு மிகையான கட்டட வரைபடங்களுக்கும், அனைத்து மனைப்பிரிவுகளுக்கும் நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குநரின் தொழில்நுட்ப அனுமதி பெற்று கிராம ஊராட்சி மன்றத் தலைவர் அனுமதி அளிக்க இவ்விதிகள் வகை செய்கின்றன.

தமிழ்நாடு ஊராட்சிகள் (வரிவிதிப்பு மற்றும் வசூலித்தல்) விதிகள், 1999

  • கிராம ஊராட்சிகளில் வீட்டுவரி நிர்ணயித்தல்,
  • வீட்டு வரி செலுத்துவோர் பட்டியல் தயாரித்தல்,
  • வீட்டு வரி விதிப்பின் மீதான மேல்முறையீடு,
  • வீட்டு வரியை வசூல் செய்வதற்கான வழிமுறைகள்

ஆகியவை இவ்விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு ஊராட்சிகள் (பணிகளுக்கான திட்டங்கள் மற்றும் மதிப்பீடுகள் தயாரித்தல் மற்றும் ஒப்பந்தங்களுக்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்) விதிகள், 2007 கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றின் பொது நிதி, மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூலம் பெறப்படும் திட்ட நிதி ஆகியவற்றைக் கொண்டு மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான திட்டங்கள் மற்றும் மதிப்பீடுகள் தயாரித்தல் மற்றும் ஒப்பந்தங்களுக்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவை குறித்து இவ்விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊராட்சிகள் (கிணறுகள் தோண்டுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒழுங்கு முறைப்படுத்துதல்) விதிகள், 2015

ஊரகப் பகுதிகளில், ஆழ்துளைக் கிணறுகள், குழாய் கிணறுகள் மற்றும் திறந்த வெளிக் கிணறுகள் வெட்டும் பணிகளை மேற்கொள்ளும்போது எதிர்பாராத விதமாக நேரக்கூடிய விபத்துக்கள் மற்றும் குழந்தைகள் மரணத்தை தவிர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து இவ்விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விதிகளின்படி கிணறு தோண்டும் இயந்திர உரிமையாளர் மற்றும் இயக்குபவர் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்தும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

மாநிலத் தேர்தல் ஆணையம்

மாநிலத்திலுள்ள நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள் நடத்துவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான தன்னாட்சி அதிகாரம் கொண்ட அரசியலமைப்பு நிறுவனமாக 1994ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் தயாரித்தலை கண்காணித்து, இயக்கி, கட்டுப்படுத்தும் அதிகாரம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 239 உட்பிரிவு (3)-ன்படி தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் மற்றும் நிர்வாக பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். மாநில தேர்தல் ஆணையர் இரண்டு ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பார். மேலும், இப்பதவியினை ஆறு ஆண்டுகளுக்கு மிகாமல் இரண்டு முறை நீட்டிப்பு செய்யலாம். மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டவருக்கு 65 வயது நிறைவடையும் நிலையில் அவருக்கு ஓய்வளிக்கப்பட வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல் நடத்துதல்

தமிழ்நாட்டில், 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் இயற்றப்பட்ட பின் மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் அக்டோபர் 1996-ம் ஆண்டு நடத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாவது, மூன்றாவது, நான்காவது சாதாரண தேர்தல்கள் முறையே அக்டோபர் 2001, அக்டோபர் 2006 மற்றும் அக்டோபர் 2011-ல் நடத்தப்பட்டது.

மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல்களை கட்சி அடிப்படையில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிடுகிறது. ஆனால், கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான பதவியிடங்களுக்கு கட்சி சாரா அடிப்படையில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

கிராம ஊராட்சிகளில் பல உறுப்பினர் வார்டுகளை ஓர் உறுப்பினர் வார்டுகளாக மாற்றியமைத்தல்

தமிழ்நாட்டில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஓர் உறுப்பினர் வார்டு முறை இருந்தாலும் கிராம ஊராட்சியில் ஓர் உறுப்பினர் வார்டு மற்றும் பல உறுப்பினர் வார்டு என்ற இரண்டு நிலையும் இருந்தது. இந்நிலையின் அடிப்படையில் அக்டோபர் 2006 ஆம் ஆண்டு வரை சாதாரண தேர்தல் நடத்தப்பட்டது.

அரசாணை எண். 63 ஊரக வளர்ச்சி (பரா 2) ஊராட்சித் துறை நாள்.14.9.2011-ன்படி, 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு ஊராட்சிகள் (உறுப்பினர்கள் எண்ணிக்கை நிர்ணயம் செய்தல் மற்றும் வார்டுகளை பிரித்தல்) விதிகள் 1995-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, கிராம ஊராட்சியில் ஒரு உறுப்பினர் வார்டு முறை கொண்டுவரப்பட்டது.

1991 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, கிராம ஊராட்சியில், 40,879 உறுப்பினர் வார்டுகளில் 97,458 வார்டு உறுப்பினர்கள் இருந்தனர். 2001ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒவ்வொரு கிராம் ஊராட்சியிலும் பல உறுப்பினர் வார்டுகளை ஒரு உறுப்பினர் வார்டுகளாக மாற்றியமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வாயிலாக, கிராம ஊராட்சி வார்டுகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 99,333 ஆக உள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் மற்றும் தலைமைப் பதவியிடங்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் சுழற்சி முறை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஊராட்சி அமைப்புகளின் பல்வேறு பதவியிடங்களுக்கு மக்கள் தொகை விகிதத்தின் அடிப்படையில் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம், சட்டக்கூறு 243D-ன்படி ஊராட்சி அமைப்புகளில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கான பதவியிடங்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் சுழற்சி முறை செய்யப்பட வேண்டும்.

அதில் மூன்றில் ஒரு பங்குக்கு குறையாமல் ஆதிதிராவிடர், பழங்குடியினப் பெண்களுக்கு ஒதுக்கப்படும் எண்ணிக்கையையும் உள்ளடக்கி மொத்த ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்குக்குக் குறையாமல் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

இதற்காக, 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப் பிரிவுகள் 11, 20, 32, 57 மற்றும் 1995-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (பதவிடங்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் சுழற்சி முறை) விதிகள் ஆகியவற்றில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மற்றும் சுழற்சி செய்வது குறித்து தெளிவாக, கூறப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு உயர்த்தி வழங்கப்பட்ட இட ஒதுக்கீடும் பதவிகளும் (50 விழுக்காடு ஒதுக்கீடு)

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு சட்டம் 21,1994) -ல் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியக்குழு மற்றும் மாவட்ட ஊராட்சிகளில் உள்ள பதவியிடங்கள் மற்றும் தலைமை பதவியிடங்கள் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உள்ளாட்சி நிர்வாகத்தில் மகளிர் பங்கேற்பினை அதிகப்படுத்தவும் மகளிருக்குரிய அதிகாரம் வழங்கிடவும் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டினை 50 விழுக்காடாக உயர்த்துவது அவசியம் எனக் கருதியதால், மகளிருக்கான இடஒதுக்கீடு மூன்றில் ஒரு பங்கு என்பதை 50 விழுக்காடாக இட ஒதுக்கீடு செய்யும் வகையில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் (இட ஒதுக்கீடு மற்றும் சுழற்சி முறை இட ஒதுக்கீடு) விதிகள் 1995-ல் திருத்தம் செய்து, அதன் அடிப்படையில் அரசு ஆணை எண். 60 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (ப.ரா) துறை, நாள் 23.05.2016-ல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாணையின்படி, எதிர்வரும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மகளிருக்கான உயர்த்தப்பட்ட இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்.

கிராம ஊராட்சி

31 மாவட்டங்களில் 79,394 குக்கிராமங்களை உள்ளடக்கிய 12,524 கிராம ஊராட்சிகள் உள்ளன. கிராம் ஊராட்சி என்பது, அதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு ஊராட்சிகளின் ஆய்வாளர் அறிவிக்கையில் குறிப்பிட்ட தேதியிலிருந்து அமைக்கப்படும். ஒவ்வொரு கிராம ஊராட்சியும் உரிய காரணங்களால் கலைக்கப்படாதவரை ஒவ்வொரு சாதாரணத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதற்கூட்டத்திலிருந்து 5 ஆண்டு காலம் ஊராட்சி நிர்வாகம், செயல்பாட்டில் இருக்கும். கிராம் ஊராட்சியின் தலைவர், கிராம ஊராட்சியின் செயல் அலுவலர் ஆவார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்துடன் ஒருங்கிணைந்து கிராம ஊராட்சி வாரியாக 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 31 மாவட்டங்களில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளுக்கும் ஊரக மக்கள் தொகை விபரம் ஆகஸ்ட் 2014ல் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு கிராம ஊராட்சி வாரியாக வெளியிடப்பட்ட மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தவர் மற்றும் பெண்கள் குறித்த விவரங்களும் அடங்கும். மேலும், மேற்கண்ட விவரங்கள் www.tnrd.gov.in என்ற இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிராம சபை

கிராம சபை என்பது ஒவ்வொரு கிராம ஊராட்சி அளவிலும் உள்ள அடித்தள ஜனநாயக அமைப்பாகும். பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல், சமூக தணிக்கை ஆகியவற்றில் பொதுமக்களின் பங்கேற்பினை உறுதிபடுத்தி வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பான நிர்வாகத்திற்கு வழிவகுக்கிறது. சட்டப்படி, இரண்டு கிராமசபைக் கூட்டங்களுக்கு இடையே உள்ள காலம் ஆறு மாதங்களுக்கு மிகாமல் இருக்கும் வகையில் கிராம சபைக் கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும். கிராம ஊராட்சியில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் அரசு கீழ்க்கண்டவாறு குறைவெண் வரம்பு நிர்ணயம் செய்துள்ளது.

கிராம சபை கூட்ட நடவடிக்கைகளை முறையாக பதிவேடுகளில் பதிவு செய்வது மற்றும் புகைப்பட ஆவணங்களை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கிராம சபை பின்வரும் செயல்பாடுகளை மேற்கொள்கிறது.

  1. கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குதல்.
  2. கிராம ஊராட்சியின் வரவு-செலவு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குதல்.
  3. அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து தகவல் தெரிவித்து வளர்ச்சிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  4. பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளின் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான பணி பட்டியல்களுக்கு ஒப்புதல் வழங்குதல்.
  5. திட்டப்பணிகள் செயல்பாட்டின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தல். கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான சமூக தணிக்கை அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குதல்.
  6. இன மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவித்தல்.

கிராம ஊராட்சிகளின் சட்டரீதியான கடமைகள்

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 110-ன் படி கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ளுதல் கிராம ஊராட்சிகளின் கட்டாய கடமைகளாகும்.

  • அனைத்து கிராமச் சாலைகள்,
  • பாலங்கள்,
  • சிறுபாலங்கள்,
  • தடுப்புச்சுவர்கள் மற்றும் தரைப்பாலங்களை அமைத்தல்,
  • பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் (நெடுஞ்சாலைகள் மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் தவிர)
  • குடியிருப்பு பகுதிகளில் தெரு விளக்குகள் அமைத்தல்.
  • கழிவு நீர்க் கால்வாய் அமைத்துக் கழிவுநீரை வெளியேற்றுதல்.
  • தெருக்களை சுத்தம் செய்தல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை செயல்பாட்டின் மூலமாக சுகாதாரத்தை மேம்படுத்துதல்.
  • பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்துதல்
  • இடுகாடுகள் மற்றும் சுடுகாடுகளை ஏற்படுத்திப் பராமரித்தல்
  • குடிநீர் வழங்குதல்
  • சமுதாய சொத்துக்களை பராமரித்தல்
  • கிணறுகள் தோண்டுதல் மற்றும் பராமரித்தல் மற்றும்
  • குளம் தோண்டுதல், பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல்.

அவ்வப்போது அரசு அறிவிக்கை வாயிலாகப் பணிக்கக்கூடிய பிற கடமைகள்

குடிநீர் வழங்கல்

ஊரகப் பகுதிகளில் குடிநீர் வழங்கும் பணி, கிராம ஊராட்சியின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். கிராம் ஊராட்சிகளில், கைப்பம்புகள் மற்றும் விசைப்பம்புகள் முதன்மைக் குடிநீர் ஆதாரமாகவும், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் சிறிய நீர்த்தேக்கத் தொட்டிகள் முதன்மைக் குடிநீர் சேகரிப்பு அமைப்புகளாகவும் விளங்குகின்றன.

ஏற்கனவே உள்ள குடிநீர் ஆதாரங்களுடன், 2016-17-ம் ஆண்டில் 51,895 குடிநீர் பணிகள் தமிழ்நாடு குக்கிராம வளர்ச்சித் திட்டம், உட்கட்டமைப்பு இடைநிரவல் நிதி திட்டம், மாநில நிதிக்குழு மானியம் மற்றும் கிராம ஊராட்சிகளின் பொது நிதி ஆகிய திட்டங்களில் ரூ. 544.65 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வறட்சிக் காலத்தில் குடிநீர் விநியோகம்

2016-17ம் ஆண்டில், பருவ மழை பொய்த்ததன் காரணமாக, மாநிலத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடந்த ஆண்டு மிகக் குறைந்த அளவில் மழை பெய்தது.

இதன் விளைவாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததோடு மட்டுமல்லாமல் குடிநீர் ஆதாரங்களும் வறண்டு விட்டதால், ஊரக பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் பணி ஊராட்சி நிர்வாகத்திற்கு சவாலாக இருந்தது. இருப்பினும் இப்பிரச்சினைகளை சமாளிக்க அனைத்து நிதி ஆதாரங்களையும் ஒருங்கிணைத்து தேவையான முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை இத்துறை மேற்கொண்டு, முறையாக குடிநீர் விநியோகம் செய்தது.

நிலைமையை கையாள பின்பற்றிய வழிமுறைகள்

கீழ்க்காணும் நட்டிவக்கைகளை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பின்பற்றுமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

  • அனைத்து குடிநீர் ஆதாரங்களும் மதிப்பீடு செய்யப்பட்டு குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ள கிராம ஊராட்சி வாரியாக செயல் திட்டம் தயாரிக்கப்பட்டது.
  • போர்க்கால அடிப்படையில் பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் ஆதாரங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
  • மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட ரூ.15 கோடி குடிநீர் பணிகளுக்காக செலவிடப்பட்டது. குடிநீர் பற்றாக்குறை நிலவும் ஊரகப்பகுதிகளில் மத்திய மற்றும் மாநில நிதிக்குழு மானியம், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய், கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பொது நிதி ஆகியவற்றை குடிநீர் விநியோக பணிகளுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்தின.
  • குடிநீர் விநியோகத்தை கிராம ஊராட்சி அளவில் கண்காணிப்பதற்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களும், வட்டார அளவில் கண்காணிப்பதற்கு உதவி இயக்குநர் நிலையிலான அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.
  • குடிநீர் தட்டுப்பாடு தொடர்பான புகார்களை பதிவு செய்ய மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் குறை தீர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் வரையறுக்கப்பட்ட மற்றும் வரையறுக்கப்படாத கூறுகளும் குடிநீர் விநியோக பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டன.

குக்கிராம அளவில் தினசரி குடிநீர் விநியோகத்தினை இணையதளம் மூலம் கண்காணித்தல்

தேசிய தகவலியல் மையத்தின் உதவியோடு ஊரகப் பகுதிகளில் குக்கிராம அளவில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை தினசரி இணையதளம் மூலம் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தெரு விளக்குகள் பராமரித்தல்

ஊரக பகுதிகளில் தெருவிளக்குகளை பராமரிப்பது, கிராம ஊராட்சிகளின் அடிப்படை கடமைகளில் ஒன்றாகும்.

ஆதாரம்: தமிழ்நாடு அரசு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை 

மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில் 


மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில் 

எங்களுடன் இணைந்து இருங்கள்

Facebook | Twitter | Play Store 

பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 

Download Now 

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை