இலவச வீட்டுமனை பட்டா யாருக்கு வழங்க வேண்டும்...?

 


வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- நீர்நிலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு நிரந்தர வீடு வழங்கவேண்டும் என்பதற்காகவும், இத்தகைய நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்து உரிய செயல்பாட்டுக்கு உட்படுத்துவதற்காகவும் சம்பந்தப்பட்ட கிராமங்களில் வருவாய்த்துறையின் மூலமாக தனியார் நிலங்களை கையகப்படுத்தி, ஏழை குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாவை சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு இலவசமாக வழங்கும் ஒரு சிறப்பு திட்டத்தை 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதேபோல ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலான குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவை இலவசமாக வழங்கும் ஒரு சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தவும் அரசாணை வெளியிடப்பட்டது.


புறம்போக்கு நிலங்கள் இந்த நிலையில் இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் ஆட்சேபனையற்றதாக கண்டறியப்பட்ட சுமார் 1 லட்சத்து 26 ஆயிரத்து 66 இனங்களில் இதுவரை 19 ஆயிரத்து 501 இனங்களில் மட்டுமே வரன்முறைப்படுத்தப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில் மாற்று இடம் கண்டறிந்து வீட்டுமனை பட்டா வழங்கி, ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களை மீட்டெடுத்து அதன் தன்மை மாறாமல் பயன்படுத்தும் பணியில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதையும் கருத்தில் கொண்டு, இத்திட்டங்களை சீரமைத்து மேலும் காலஅவகாசம் வழங்கி செயல்பாட்டை தீவிரப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு இத்திட்டங்களை செயல்படுத்த அரசு ஆணையிடுகிறது. அதன் விவரம் வருமாறு:-

அரசே முடிவு செய்யும்

 * கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான அனைத்து புறம்போக்கு நிலங்களிலும் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் மாவட்ட நிர்வாகம் அரசு நிலப்பதிவேட்டில் பதிவு செய்த விவரங்களின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு விவரங்களை தொகுத்து கணினியில் பதிவு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை கணக்கெடுப்பு முடிக்காமல் இருந்தால் 31.8.2019-க்குள் ஆக்கிரமிப்பு விவரங்களை தொகுத்து கணினியில் பதிவு செய்ய வேண்டும்.

* சென்னை மாநகர், 

காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சென்னை மாநகர் சூழ் பகுதிகளிலும், இதர மாநகராட்சி பகுதிகளிலும் ஆட்சேபனைக்குரிய மற்றும் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் பற்றிய விவரங்களை மாவட்ட நிர்வாகம் அரசு நிலப்பதிவேடு மற்றும் புலத்தணிக்கை ஆகியவற்றின் மூலமாக விவரங்களை சேகரித்து கணினியில் பதிவு செய்து கொள்கை முடிவு எடுக்கும் பொருட்டு, நில நிர்வாக ஆணையர் மூலமாக அரசுக்கு அனுப்ப வேண்டும். அந்த பகுதிகளில் தடையாணை பதிவு செய்யப்பட்டுள்ள இனங்களில் அதை தளர்வு செய்வது குறித்து அரசே முடிவு செய்யும். வரன்முறை * ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை கணக்கெடுப்பின் அடிப்படையில் தகுதியான நபர்களுக்கு வருவாய் நிலை ஆணை எண்.21-ன் கீழ் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வரன்முறை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வரன்முறை செய்ய வேண்டும்.

* உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒப்புவிக்கப்பட்ட நிலங்களில் ஆட்சேபனையற்ற நிலங்களான தோப்பு, களம் போன்ற இனங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தீர்மானத்தை பெற்று அதன் அடிப்படையில் வரன்முறை செய்யலாம். * கோவில் நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் அதில் குடியிருப்பவர்கள் நலன் கருதி விதிமுறைகளுக்கு உட்பட்டு, தகுதியான நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி வரன்முறைப்படுத்த அந்த நிலங்களை உரிய வகையில் கையகப்படுத்தி, நிலமதிப்பு நிர்ணயம் செய்வதற்கு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலைய துறை வழிகாட்டுதலின்படி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இதற்கான முன்மொழிவுகள் மாவட்ட வாரியாக நில உரிமை பெற்றுள்ள கோவில் வாரியாக அரசுக்கு அனுப்பி, அரசின் ஆணைப்பெற்று அதன் அடிப்படையில் வரன்முறைப்படுத்தவேண்டும். ஆக்கிரமிப்புகள் * மேய்க்கால், மந்தைவெளி போன்றவையும் ஆட்சேபனைக்குரிய ஆக்கிரமிப்புகளாக இருந்தபோதிலும் ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் பொதுநலனை கருத்தில் கொண்டும், நீண்ட கால ஆக்கிரமிப்புகள் என்பதை கருத்தில் கொண்டும் கால்நடைத்துறையின் அனுமதி பெற்று மாவட்ட நிர்வாகம் உரிய விதிமுறைகளுக்குட்பட்டு முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி, அதன் அடிப்படையில் பிறப்பிக்கப்படும் அரசு ஆணையின்படி வகை மாற்றம் செய்யப்பட்டு, குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்த வேண்டும்.

* நீர்நிலைகள், கால்வாய்கள்,
 சாலைகள் போன்ற ஆட்சேபகரமான ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி அதன் தன்மை மாறாமல் பாதுகாக்கும் பொருட்டு அத்தகைய குடியிருப்பு ஆக்கிரமிப்பு செய்துள்ள ஏழைகளுக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். அத்தகைய தகுதியான பயனாளிகளுக்கு மாற்று புலமாக தகுதியுள்ள ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம் அதே கிராமத்தில் இல்லாத நிலையில், தனியார் பட்டா நிலங்களை வருவாய்த்துறை மூலம் கையகப்படுத்தியோ அல்லது பேச்சுவார்த்தை மூலம் விலைக்கு நிலத்தை பெற்றோ மறுகுடியமர்வு செய்யும் வகையில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட வேண்டும். நிலமதிப்பு அதிகம் உள்ள நகர் சார்ந்த பகுதிகளில் தனிப்பட்டாவுக்கு மாற்றாக தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரியம் மூலம் அடுக்குமாடி வீடுகள் கட்டித்தர வழிவகை செய்ய வேண்டும். நிலமதிப்பு வழிகாட்டி * ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்குகளில் குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தும்போதும், ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகளுக்கு மாற்று இடம் வழங்கும்போதும் நகர்ப்புறத்திலும், கிராமப்புறத்திலும் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.3 லட்சம் வரை உள்ள பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா இலவசமாக வழங்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மேல் உள்ள பயனாளிகளுக்கு நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி நிலமதிப்பு வழிகாட்டி பதிவேட்டின் படியான மதிப்பின் படி வசூல் செய்துகொண்டு, அதன் அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட வேண்டும். இந்த வரன்முறை திட்டங்களில் பேரூராட்சி, நகராட்சி போன்ற நகர்ப்புற பகுதிகளில் ஆக்கிரமிப்பு விஸ்தீர்ணம் 25 சென்டுக்கு மிகாமல் இருந்து போதுமான இடம் இருந்தால் குடும்பத்திற்கு தலா 2 சென்டுக்கு மிகாமலும், கிராமப்புறங்களில் 3 சென்டுக்கு மிகாமலும் வீட்டுமனை பட்டா வழங்கலாம். நகர்ப்புற பகுதிகளில் நில மதிப்பை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்பு விஸ்தீரணம் 25 சென்ட்டுக்கு கூடுதலாக இருந்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஏதுவாக அந்த நிலம் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்திற்கு மாற்றம் செய்து அடுக்குமாடி வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிதி அதிகார வரம்பு * 

இந்த சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டங்களின் கீழ் நிலமதிப்பு அடிப்படையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு நிதி அதிகார வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது, வட்டாட்சியர் ரூ.1 லட்சம் வரை, வருவாய் கோட்டாட்சியர் ரூ.1 லட்சம் முதல் ரூ.2½ லட்சம் வரை, மாவட்ட கலெக்டர் ரூ.2½ லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை, நில நிர்வாக ஆணையர் ரூ.5 லட்சத்திற்கு மேல் என நிதி அதிகார வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. * ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் வட்டாட்சியர் மற்றும் வட்ட தலைமை நில அளவர் ஆகியோரைக் கொண்ட குழுவால் சரிபார்க்கப்பட்டு வரன்முறைப்படுத்தப்பட்டு பட்டா வழங்கப்பட வேண்டும். * மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட மாவட்ட அளவிலான குழு, நில நிர்வாக ஆணையர் மற்றும் அரசு அனுமதி தேவையில்லாத இனங்களில் குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்யலாம். ஒரு ஆண்டுக்குள்... * மாவட்ட அளவிலான குழுவினால் ஆக்கிரமிப்புகள் வரன்முறை செய்ய இயலாத நேர்வுகளில் சம்பந்தப்பட்ட புலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட துறை அலுவலருடன் கூட்டுத்தணிக்கை செய்து, அதன் அடிப்படையில், முன்மொழிவினை வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர், நில நிர்வாக ஆணையர், நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட மாநில குழுவுக்கு அனுப்பி, உரிய விலக்களிப்பு ஆணை பெற்றபின் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். * தடையாணை புத்தகத்தில் பதியப்பட்டுள்ள நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய் கோட்ட அலுவலர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலரால் பதியப்பட்டிருப்பின் அதனை மாவட்ட கலெக்டரால் விலக்களிக்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கலாம். மாவட்ட கலெக்டரால் தடையாணை புத்தகத்தில் பதியப்பட்டிருப்பின் மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ள குழுவால் விலக்களிக் கப்பட வேண்டும். நில நிர்வாக ஆணையராலோ அல்லது அரசளவிலோ பதிவு செய்யப்பட்டிருப்பின் உரிய முன்மொழிவினை பெற்று மாநில குழுவால் விலக்களிக்கப்பட வேண்டும். இச்சிறப்பு வரன்முறை திட்டங்கள் ஓராண்டு காலத்திற்கு செயல்படுத்தப்பட வேண்டும். மேலும், இந்த விலக்களிப்பு அதிகாரங்கள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும் காலத்திற்கு மட்டுமே பொருந்தும். இந்த அரசாணைப்படி தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கணினியில் பதியப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் மாதாந்திர ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாவட்ட கலெக்டர் மாதாந்திர ஆய்வு அறிக்கையை நில நிர்வாக ஆணையருக்கு 5-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இத்திட்டம் சிறப்பாக செயல்முறைப்படுத்தப்படுகிறதா என்பதை கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது நில நிர்வாக ஆணையர் மாதம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும்.


மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில் 

எங்களுடன் இணைந்து இருங்கள்

Facebook | Twitter | Play Store 

பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 

Download Now 




Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்