பொன் நிற மேனிக்கு ஆவாரம்பூ

வாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ’ என தமிழில் ஒரு சொலவடை உண்டு. சாலையோரங்களில் உதிர்ந்துகிடக்கும் ஆவாரம்பூவில் பல மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளன. அழகுக்காக பல கிரீம்கள் பயன்படுத்தும் தேவையினைக் குறைத்து எளிய அழகூட்டியாக இயற்கையிலேயே அமைந்திருக்கிறது. அழகு விஷயத்தில் ஆவாரம்பூவின் மகிமையை விளக்குகிறார் கோவை ஆர்.வி.எஸ் மருத்துவமனையின் சித்த மருத்துவர், ஜூலியட்  ரூபி.
''ஆவாரம்பூ, உடலுக்குக் குளிர்ச்சி. அந்தக் காலத்தில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர்கள், உடலின் வெப்பத்தைக் குறைக்க ஆவாரம்பூ இலைகளைத் துணியில் கட்டி, தலையில்வைத்துக்கொண்டு செல்வார்கள். இதனால் உடல் அதன் வெப்பச் சமநிலையை இழக்காமல் சக்தியைத் தக்கவைத்துக்கொள்வதோடு, உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும். சருமத்தைப் பொன் நிறமாக மாற்றக்கூடிய ஆற்றலும்கொண்டது.  
பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, ரோஜா மொட்டு, வெட்டி வேர், கோரைக் கிழங்கு, விளாமிச்சி வேர், கஸ்தூரி மஞ்சள், ஆவாரம்பூ இதழ்கள் இவற்றைச் சம அளவில் எடுத்து, சிறிதளவு வசம்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். சோப்புக்குப் பதில் இந்த நலங்கு மாவை, தினமும் தேய்த்துக் குளிப்பதன் மூலம் சருமம், பொன் நிறமாக மாறும். சருமம் சுத்தமடைந்து, தேமல், கரும்புள்ளிகள் மறையும். பளபளப்பைத் தந்து ஆரோக்கியமாகவைத்திருக்கும். தொடர்ந்து ஆவாரம்பூவைப் பயன்படுத்திவந்தால் சுருக்கங்களைக் குறைத்து, பளிச் சருமத்தைப் பெறலாம்.
இந்த மாவை மாஸ்க் போலப் பூசி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் நல்ல பொலிவையும் குறைந்த செலவில் ஃபேஷியல் செய்த பலனையும் உடனடியாகப் பெற முடியும். மேலும், பார்லரில் செய்யப்படும் ஸ்க்ரப்பிங், ஷைனிங் போன்றவையும் இதிலுள்ள துகள்கள் மூலம் இயற்கையாகவே கிடைத்துவிடுவதால், வேறு எந்த அழகு சிகிச்சையுமே முகத்துக்கும், உடலுக்கும் தேவை இல்லை.
கருத்த கார்மேகக் கூந்தலை விரும்புபவர்கள், தலா 200 கிராம் ஆவாரம்பூ, வெந்தயத்துடன் ஒரு கிலோ பயத்தம்பருப்பைச் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம். தலையில் எண்ணெயை நன்றாகச் சூடுபரக்கத் தேய்த்து, இந்த பவுடரை தண்ணீரில் கரைத்துக் குளிக்கலாம். வாரம் இருமுறை தொடர்ந்து கடைப்பிடித்தால், தலைக்குக் குளிர்ச்சியைத் தந்து கூந்தல் நன்றாக வளர ஆரம்பிக்கும். பொடுகு, பேன் தொல்லையும் நீங்கும். தலைக்கு டை அடிப்பதால் நெற்றியிலும், கன்னத்திலும் சிலருக்கு, கருமை படர்ந்து இருக்கும். இதைப் போக்க, 200  கிராம் ஆவாரம்பூவை அரைத்து, சாறு எடுக்க வேண்டும். இதை அடுப்பில் வைத்துச் சடசடவென ஓசை வந்தவுடன் இறக்கி, இதனுடன் 200 கிராம் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெயைக் கலந்து முகத்தில் தினமும் தேய்த்துக் குளித்தால் சுருக்கம், கருமை, தேமல் மறைந்து முகம் பிரகாசமாக ஜொலிக்கும்' என்றார்.
இனி, ஆவாரம்பூவைப் பார்த்தால் விடுவோமா? 

ஆரோக்கியம் காக்கும் ஆவாரை!
பட்டைகளை உலர்த்திப் பொடியாக்கி நீரில் கலந்து பூசி வர நீண்ட நாள் புண்கள் ஆறும்.  இந்தப் பொடியைத் தண்ணீரில் கலந்து, நான்கில் ஒரு பங்காகத் தண்ணீர் குறையும் வரை வற்றவைக்க வேண்டும். இந்தக் கஷாயத்துக்கு 'ஆவிரைக்குடிநீர்’ என்று பெயர். தினமும் இரண்டு வேளை 30 மி.லி அளவுக்குக் குடித்து வந்தால் சர்க்கரை, கட்டுக்குள் இருக்கும். பக்கவிளைவுகளும் குறையும்.
பெண்களுக்கு வெள்ளைப்படுதல், உஷ்ணம் ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணி.
மல்லிகைப்பூ, ஆவாரம்பூ, சிறுகம்பிழை ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக தயாரித்து பருகிவந்தால் சிறுநீரகக்கற்கள் கரையும்.  இதன் பிசினை 10 கிராம் அளவுக்கு எடுத்து தினமும் நீரில் கலந்து பருகி வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குணமடையும்.
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்