வாட்ஸ் அப் மூலமாக தொடர்பு கொள்ளும் மோமோ என்னும் கண்ணுக்குத் தெரியாத விஷமிகள் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் அளவுக்கு ஆபத்தானவையாக உள்ளன.
உலக அளவில் ப்ளூ வேல் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் மறையாத நிலையில் அடுத்த விளையாட்டு வினை உண்டாகி விட்டது. மனிதன் மற்றும் மிருகத்தின் கலவையான முகத்தைக் கொண்டிருக்கும் இந்த மோமோ பின்னணியில் இருந்து இயக்குவது யார்? யார் இதற்கு தாய், தந்தை என்பதெல்லாம் பெரிய கதையாக இருக்கிறது.
தென்னகத்திலும், சில முக்கிய தமிழக நகரங்களிலும் பலரது வாட்ஸ்-அப் செயலி மூலம் இந்த மோமோக்கள் செல்போனுக்குள் ஊடுருவுகின்றன.
வாட்ஸ்-அப்பில் ஒருவருக்கு முதலில் ஹை சொல்லும் மோமோ, அவரது தகவல்களைத் திருடி அவரைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அவருக்கே சொல்லி அதிர்ச்சியளிக்கிறது.
அடுத்து ஒரு லிங்கை அனுப்பி அதனை ஓபன் செய்யச் சொல்லும் மோமோ, அதனை அவர் ஓபன் செய்ததும், அதன் மூலம் நமது செல்போனில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் திருடி விடும்.
எனவே, இதுபோன்ற ஹை வந்ததும், உங்கள் வீரத்தை அதனிடம் காட்டுகிறேன் என்று பேசுவதோ, அது நம்மை என்ன செய்து விடும் என்று வீராப்புக் காட்டுவதோ வேண்டாம் என்கிறார்கள் தொழில்நுட்ப நிபுணர்கள்.
செல்போன் எண்ணுக்கு உள்ளூர் எண்ணோ வெளிநாட்டு எண்ணோ எதில் இருந்து மோமோ என தகவல் வந்தாலும், உடனடியாக செல்போனில் அந்த எண்ணை பிளாக் செய்து விடுங்கள். பிறகு செல்போனில் டேட்டாவை ஆஃப் செய்துவிட்டு, லோக்கேஷன் போன்றவற்றையும் ஆஃப் செய்துவிடுங்கள்.
செல்போனில் இருக்கும் கேமராவில் ஸ்டிக்கர் ஒட்டிவிடுங்கள். செல்போனில் இருக்கும் கேமரா மூலமாக ஒருவரை மோமோக்கன் தொடர்ந்து கண்காணிக்க முடியும். எனவே கேமராக்களை ஸ்டிக்கர் போட்டு ஒட்டுவதும் அவசியம். பின் பக்க மற்றும் முன்பக்க கேமராக்களை மறக்காமல் ஸ்டிக்கர் போட்டு ஒட்டவும்.
மேலும், வாட்ஸ் அப் செட்டிங்கில் டேட்டாவை பயன்படுத்தும் வாய்ப்பில், மோபைல் டேட்டாவைப் பயன்படுத்தும் போது என்ற ஒரு ஆப்ஷனில் புகைப்படம், விடியோ, மீடியா என பல ஆப்ஷன் இருக்கும். அதில் புகைப்படம் செலக்ட் செய்யப்பட்டிருந்தால் அதையும் நீக்கிவிடுங்கள்.
அதாவது செல்போனில் டேட்டாவை ஆன் செய்ததும், ஆட்டோ மேட்டிக்காக ஒரு புகைப்படத்தை அல்லது விடியோவை டவுன்லோடு செய்யும் வாய்ப்பு இருந்தால் அதன் மூலம் வைரஸ் நிரம்பிய புகைப்படத்தை வாட்ஸ் அப்புக்கு அனுப்பி அதில் இருக்கும் வைரஸ் மூலம் செல்போனில் இருக்கும் தகவல்களை திருட பார்ப்பார்கள். எனவே செட்டிங்ஸில் இருக்கும் மொபைல் டேட்டாவை அணைப்பது மற்றும் ஆட்டோமெடிக்காக புகைப்படங்கள் டவுன்லோடு ஆவதைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.
இதையெல்லாம் செய்துவிட்டால் மோமோவால் உங்களை நெருங்க முடியாது. அதைவிடுத்து அதற்கு ஹை சொல்வதோ, அது அனுப்பும் படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பதோ விபரீத விளையாட்டுத்தான். அதால் நம்மை என்ன செய்ய முடியும் என்று நினைக்க வேண்டாம்.. முடியும் என்பதே நிதர்சனம்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த மோமோ பெண்களையே அதிகம் குறி வைக்கின்றன. குறைந்தபட்சம் இளைஞர்களையும் இது பாடுபடுத்துகிறது.
தொழில்நுட்ப நிபுணர்கள் இது பற்றி கூறுவது என்னவென்றால் மோமோ என்பது யாரோ எவரோ அல்ல. அது ஒரு விதமான வைரஸ் செயலி. அதனைப் பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் மோமே என்று கூறி அச்சுறுத்தலாம். தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளலாம்.
பெரும்பாலான மோமோக்கள் ஒருவருக்கு நெருங்கியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு மோமோவைப் பயன்படுத்தி மிரட்டுகிறார்கள் என்பதே முதற்கட்ட ஆய்வில் கிடைத்திருக்கும் தகவல்.
வெளிநாட்டு எண்களை தமிழகத்தில் இருந்து கொண்டே ஒருவரால் பயன்படுத்த முடியும் என்பதையும் செய்தித் தொலைக்காட்சி ஒன்று நேரடியாகவே செய்து காட்டியுள்ளது.
வெளிநாட்டு எண்களை வாங்குவதோ, அதை தமிழகத்தில் பயன்படுத்துவதோ பெரிய விஷயம் அல்ல. மோமோக்களைப் பார்த்து பயப்பட வேண்டாம். ஆனால் ஒதுங்கியிருக்க வேண்டியது மிகவும் அவசியம். தற்காத்துக் கொள்ள வேண்டியதும் கட்டாயம்.