Recent Posts

Labels

உதயம் மலர்

உதயம் மலர்

Contact form

Search This Blog

3/related/default
Developed by ❤️ - Blogger Templates at Piki Templates | Distributed by Free Blogger Templates

Made with Love by

Monster Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable

நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன ஐகோர்ட் மகாராஜா..

4 ஜூன், 2019
ஆறுமுகமங்கலம், தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது ஆறுமுகமங்கலம். இங்கு வீற்றிருக்கும் சுடலைமாடன் ஐகோர்ட் மகாராஜா என்றழைக்கப்படுகிறார். ஆறுமுகமங்கலம் கோயில் சுமார் ஆறு தலைமுறைக்கு முன்னால் உருவானதாக கூறப்படுகிறது. ஒரு நாள் அப்பகுதியை சேர்ந்த மந்திரம் நாடார், பனை மரத்தின் மேல் இருந்து பதநீர் இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது பனை மரத்தின் கீழே நின்ற வயது முதிர்ந்த ஒருவர், ‘‘ஏம்பா, மந்திரம் நல்ல தாகமா இருக்கு, குடிக்க பதநீர் இறக்கி கொண்டாப்பா’’ என்றார். அதற்கு மந்திரம் நாடார் சொன்னார், ‘‘ஐயா, பெரியவரே இன்னும் பதப்படலையே’’ என்று.

‘‘நீ, இறக்கி கீழே கொண்டு வந்து பாரு, பதப்பட்டிருக்கும், கலயமும் நிறைஞ்சிருக்கும்’’ என்றார். அதன்படியே மந்திரம் நாடார் கலயத்தை இறக்கி கொண்டு வந்தார். பால் பொங்குவது போல பொங்கி வழிந்தது. முகத்தில் சந்தோஷத்தை நிரப்பிய மந்திரம் நாடார், அந்த முதியவரை பார்த்தார். இரண்டு நபராக அந்த முதியவர் நின்றார். மீண்டும் ஒருவராய் ஆன அந்த முதியவர் பதநீர் கேட்க ‘‘ஐயா, நீங்க யாரென்று தெரியவில்லை, எப்படி இது நடந்ததென்றும் புரியவில்லை’’ என்றார்.

‘‘சரிப்பா, பனை ஓலையில பட்டை பிடிச்சு, பதநீர் விட்டு கொடு’’ என்று கேட்டார். மந்திரம் நாடார் அதன்படியே கொடுத்தார். கலயத்திலிருந்த பதநீர் முழுவதையும் அவர் அருந்தி விட்டார். அருந்தி முடித்து நிமிர்ந்தார். மந்திரம் நாடார் முகத்தில் சோகம். முதியவர், மந்திரம் நாடாரின் தோளை தட்டிக்கொடுத்து விட்டு சென்றார். அன்று இரவு தூக்கத்தின் போது அவர் கனவில் அதே ரூபத்தில் வந்த சுடலைமாடன்.

தன்னை யாரென்று கூறி, ‘‘உன் பனை விளை இருக்கும் இடத்தின் தென் கிழக்கு பக்கம் அரச மரம் நிற்கும் இடமருகே எனக்கு மண்ணால் பீடம் அமைத்து கோயில் கட்டி வழிபட்டு வா, உன் வாழ்வை வளமாக்குவேன். என் பெயரை சொல்லி, நீயோ, உன் வாரிசுகளோ திருநீறு கொடுத்தால் அதை பெறுபவர் நலம் பெறுவார். கேட்டது கிடைக்கும். என்னை நம்பி கை தொழும் அடியவர்களுக்கு எனதருள் எப்போதும் உண்டு என்ற சுடலைமாடன், நீ என்ன சாப்பிடுவாயோ, அதை படையலாக வைத்தால் போதும். எனக்காக நீ சிரமப்பட வேண்டாம். படையல் வைக்கும் போது, பதநீரையும் சேர்த்து வை. மேலும் நானிருக்கும் இடம் அருகே நான் சொல்கிற நபர்களுக்கும் சேர்த்து 21 பீடம் அமைத்து வழிபடு’’ என்று கூறினார்.

அதன்படியே மந்திரம் நாடார் தனது உடன்பிறந்தவர்களிடம் பேசி பீடங்கள் அமைத்து வழிபட்டு வந்தார். இரண்டு சுடலை மாடன் பீடம் இருந்ததால் இரட்டை சுடலை மாடசுவாமி கோயில் என்றழைக்கப்படுகிறது. கோயிலில் சுண்ணாம்பு மண்ணால் பீடம் அமைத்து, பனை ஓலையால் கூரை அமைக்கப்பட்டு இருந்தது. நாளடைவில் கோயிலுக்கு வழிபாடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது. நேர்ச்சை செலுத்துவோர்கள் அதிகமாக வரலாயினர். மந்திரம் நாடார் நல்ல முறையில் பூஜை, வழிபாடுகளை செய்து வந்தார்.
கோயில் நல்ல வளர்ச்சியை பெற்றது. ஓலைக் கூரை, ஓட்டு கூரையானது.

பக்தர்கள் சுவாமியிடம் முறையிட்டு, நேர்ச்சை வேண்டி, தொழில் செய்து வந்தனர். விளைச்சலில் ஒரு பங்கு உனக்கு தருகிறேன். விளைச்சல் அமோகமாக இருக்கட்டும் என்று அவரை ஒரு பங்குதாரர் போல எண்ணியே நேர்ச்சை செலுத்தி வந்தனர். மூலவர் இரட்டை சுடலைமாடன் இருக்கும் பகுதி மட்டும் ஓடுகளால் வேயப்பட்டது. மற்ற பீடங்கள் வெட்ட வெளியில் இருந்தது. மந்திரம் நாடாருக்கு பின் அவரது மகன் மாசானமுத்து நாடார் பூஜை செய்து வந்தார்.


ஒருநாள் கோயிலில் மாசானமுத்துநாடார் இருந்து கொண்டிருந்த போது, கோயில் வழியாக அந்த ஊரைச்சேர்ந்த ஒருவர் பசு மாடு ஒன்றை ஓட்டிச் சென்றார். மாசானமுத்துநாடார் அவரிடம் “மாட்ட எங்க கொண்டு போற, என்று கேட்க, அவர், திருச்செந்தூர் ஆறுமுகனுக்கு பால் அபிஷேம் செய்ய, நேர்ந்து விட்ட பால் மாடு இது. கொண்டு போய் விட போறேன் என்றார்.

‘‘இங்க வாப்பா, திருநீறு வாங்கிட்டு போ, சுடலை துணைக்கு வருவாரு’’ என்றார். ‘‘முருகன் கோயிலுக்கு போறவனை பேய் கோயிலுக்கு கூப்பிடுறியப்பா, சரி வாரேன் ‘‘என்ற பேசியபடியே மாடுடன் அவர் கோயிலுக்கு வந்தார். கோயிலில் அரச மரத்தின் முன்னே மாட்டை கட்டிப் போட்டார். கோயிலுக்கு வந்த அவர், சுடலை மாடனை மட்டமாகப் பேசினார். அதைக்கேட்ட பூசாரி மாசானமுத்து நாடார், முருகனைப்போன்று எங்க அப்பன் சுடலையும் சிவனுக்கு மகன்தான் என்றார். அந்த நேரம் அரசமரத்தின் முன்னே முருகப் பெருமான், ஆறுமுகத்துடன் காட்சி கொடுத்தார். சில நொடிகளில் அக்காட்சி மாறி, அசரீரி கேட்டது.

கோயிலில் பேதமை கூடாது என்பதற்காகவே காட்சி கொடுத்தேன். உன் பயணத்திற்கு துணையாய் சுடலைமாடன் வருவார். அவரைக் கைதொழுது வா, செந்தூர் வந்து கொடிமரம் முன்னே சிதறு தேங்காய் உடைத்து விட்டுவா என்றது. ஆறுமுகத்துடன் முருகப்பெருமான் காட்சியளித்ததால் அன்று முதல் இவ்வூர் ஆறுமுகமங்கலம் என அழைக்கப்படலாயிற்று. கோயில் இருக்கும் இடம் கணபதி மங்கலம் என்று அழைக்கப்படுகிறது.

வேம்படி மாடனாக எழுந்தருளல்:   ஏரலை சேர்ந்த தெய்வத் தடியாபிள்ளை நெல் வியாபாரம் செய்து வந்தார். சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நெல் கொள்முதல் செய்து தனது மாட்டு வண்டியில் ஏற்றி சாத்தான்குளம் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார். ஒரு முறை கணபதிசமுத்திரம் பகுதியில் நெல் கொள்முதல் செய்து கோணிப்பைகளில் நிரப்பி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வருகிறார். இரட்டை சுடலைமாடசுவாமி கோயில் தாண்டி வரும்போது ஒரு மூட்டை மாயமாகி விட்டது. இது வெள்ளிக்கிழமை தோறும் நடந்தது. மாதம் ஒன்றாகியும் காரணம் தெரியாமல் தவித்தார் தெய்வத்தடியாபிள்ளை. அன்றைய தினம் அவரது கனவில் தோன்றிய சுடலைமாடன்.

உனது வண்டியிலிருந்து நெல் மூட்டையை நான் தான் எடுத்தேன் என்றும் எனது எல்லைக்குள் தொழில் செய்யும் நீ, என்னை கவனிக்கவில்லை என்று கூறியுள்ளார்.  அப்போது தெய்வத்தடியாபிள்ளை நான் முருகனுக்கு அடிமைப்பட்டவன். சைவம். உனக்கு பலி கொடுத்து பூச பண்ண என்னால முடியாது. உன் இருப்பிடம் தேடி வந்து நெல் கொடுக்கவும் முடியலையே எனக்கூறினார். உடனே சுடலைமாடன் அடுத்துவரும் ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமை என் கோட்டையிலிருந்து எட்டாவது விளங்காட்டில் அடர்ந்து வளர்ந்து நிற்கும்  பனைமரங்களுக்கு இடையே ஒற்றையாய் நிற்கும் வேப்பமரத்தின் கீழ் புற்றாய் வளர்ந்து நிப்பேன்.

அவ்விடத்தில் எனக்கு கோயில் எழுப்பி பூஜித்து வா. உன்னையும் உன் சந்ததியினரையும் வளமோடு வாழ வைப்பேன். என் பேரை சொல்லி வரும் பக்தர்களுக்கு வேறுபாடு பாராமல் திருநீறு கொடுத்து அனுப்பு. அவர்களிடம்  எனக்கு வேண்டியதை கேட்டு வாங்கிக் கொள்கிறேன். பூஜை செய்யும் பணிவிடையை நீ செய்தால் போதும் என்றுரைத்தார்.
சுடலைமாடன் சொன்னபடியே பனங்காட்டுக்குள் வேப்பமரத்தின் அடியில் புற்றாக சுடலைமாடன் தோன்றினார். அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. தெய்வத்தடியா பிள்ளை கோயிலை நிர்வகித்து பூஜை செய்து வந்தார். வேப்பமரத்தின் அடியில் தோன்றியதாலே இங்கிருக்கும் சுடலைமாடன் வேம்படி மாடன் என்று அழைக்கப்படுகிறார்.

இந்த கோயில் கீழகோயில் என்று அழைக்கப்படுகிறது. மண் பீடமாக சுவாமி இருக்கிறார். மூலவர் இருக்கும் இடம் பனை ஓலையால் வேயப்பட்டிருக்கிறது. இவ்வாலயத்தில் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் சுடலை மாடனின் உத்தரவிற்கிணங்க கொடை விழா நடத்தப்படுவதாக கோயில் நிர்வாகத்தினர் கூறினர். அதாவது கொடை விழா நடத்தும் பொருட்டு, ஆடிமாதம் சந்நதியில் அமர்ந்து ஆலோசிக்கும் போது, பல்லி சத்தம் எழுப்பினால் அதை சுடலை ஆண்டவனின் உத்தரவாக ஏற்று கொடை நடத்த முடிவு செய்கின்றனர். பல்லி சத்தம் எழுப்பாமல் இருந்தால் குறிக்கப்பட்ட நாள், மாதம் கடந்தும் விழா எடுப்பதில்லை. நாள், மாதம் மாறி கூட அந்த உத்தரவு வந்த பின்தான் கொடை நடந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர். சுடலைமாடனே பல்லி ரூபம் கொண்டு உத்தரவு கொடுப்பதாக நம்புகின்றனர்.

ஐகோர்ட் மகாராஜா பெயர் வரக்காரணம் :

ஆறுமுகமங்கலத்தில் வசித்து வந்த செல்லையா சுடலைமாடனின் தீவீர பக்தன். தனது வாழ்வில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் அவர் கொடுத்தது என்று நினைத்து வாழ்ந்து வந்துள்ளார். சுடலையின் பெயரைக் கூறி யார் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவார். தனக்கென்று ஒரு வீடும், சோறு போட சிறிய அளவில் நிலமும் வைத்திருந்தார். நிலத்தின் வரப்பு பிரச்னையில் மூன்று பேரிடையே தகராறு இருந்து வந்தது. அதில் இவரது 3ம் சொக்காரன் என்ற உறவில் தம்பி முறை வரும் ஆண்டி என்பவருக்கும் பக்கத்து நிலத்துகாரர் சின்னத்துரை என்பவருக்கும் தகராறு ஏற்படுகிறது.

அப்போது ‘‘யாருமில்லாத காட்டில் உன்னைக் கொலை செய்கிறேன். எனக்கு எதிராக யார் சாட்சி சொல்வார்?’’ என்று கொக்கரித்தான் சின்னத்துரை, ‘‘என்னைக் கொலை செய்தால் அந்த சுடலைமாடசாமி உன்னை பழிவாங்குவார்’’ என்றான் ஆண்டி. சின்னத்துரை, ஆண்டியை ஆத்திரத்தில் கத்தியால் குத்திவிடுகிறார். செத்து விட்டான் ஆண்டி என்று கருதி சின்னத்துரை அங்கிருந்து சென்று விடுகிறார். அந்த நேரம் வயலுக்கு வந்த செல்லையா உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆண்டியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவருக்கு உயிர் போய்விடுகிறது.

இதைக் கண்ட ராசப்பனால் இந்த செய்தி கிராமத்திற்குள் பரவுகிறது. இறந்து கிடந்த ஆண்டிக்கும். அருகே ரத்தகறையோடு நிற்கும் செல்லையாவிற்கும் ஏற்கனவே நிலத் தகராறு இருந்து வந்தது. அப்பகுதியினருக்கு தெரியும் என்பதால் செல்லையா மேல் கொலைப்பழி விழுகிறது. அவரது மனைவி பொன்னு தங்கம் கணவனிடத்தில், ‘‘ஈ, எறும்புக்கும் தீங்கு நினைக்காத என் ராசா நீயா, கொலை செஞ்ச’’ என்று கேட்க, ‘‘நீ, நம்புறியா புள்ள, ஊர் சொல்லட்டும், நான் கொலை செஞ்சிருப்பேன்னு நீ நினைக்கிறியா தங்கம்’’ என்று கேட்டபடி அழுதார் செல்லையா. அந்த நேரம் பிரிட்டீஷ்போலீஸ் வந்தது. செல்லையாவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கொலை வழக்கு நெல்லையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. அந்த காலத்தில் தாலுகா கோர்ட், ஜில்லா கோர்ட் என்று அழைத்து வந்தனர். ஜில்லா கோர்ட்டை உயர்ந்த கோர்ட்டாக கருதி, அதை பேச்சு வழக்கில் ஹைகோர்ட் என்பர். முதல் நாள் வழக்கு விசாரணையின் போது நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த செல்லையா, ‘‘ஐயா, நான் பழி, பாவங்களுக்கு அஞ்சுபவன், ஒரு உயிரை எடுக்கும் அளவுக்கு மனதிலும், உடலிலும் துணிவு எனக்கில்லை. கட்டிய மனைவியும், பெற்ற பிள்ளைகளும் என் ஆதரவின்றி பரிதவிக்கிறார்கள். நான் கொலை செய்யவில்லை, வக்கீல் வைத்து வாதாட வசதியும் இல்லை, என்னை விட்டு விடுங்கள்’’ என்றார்.

‘‘நீ கொலை செய்யவில்லை என்றால், ஆண்டி, தன்னைத்தானே கத்தியால் குத்தி இறந்தாரா’’ என்று நீதிபதி கேட்க, அதற்கு செல்லையா, ‘‘ஐயா என்னை தாயாய், தந்தையாய் காப்பவரான அந்த சுடலைமாடன். அவர் நிலை கொண்டிருக்கும் கோயிலின் நேர் கிழக்கு பக்கம்தான். இந்தச் சம்பவம் நடந்தது.  அதனால் அவருக்குத்தான் எல்லாம் தெரியும்’’ என்றார்.  உடனே நீதிபதி, அப்படி என்றால் அவர் வந்து சாட்சி சொல்வாரா? என்று கேட்க, நீதிமன்ற அவையில் இருந்த அனைவரும் சத்தமாக சிரித்தனர். செல்லையா, குற்றவாளி கூண்டுக்குள் சோகமாய் நிற்க, கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தோடியது. நாளை மறுநாள் விசாரணை நடத்தப்படும். என்று கூறி, வழக்கு விசாரணையை ஒத்தி
வைத்தார் நீதிபதி.

இதனிடையே வயலுக்கு நீர் பாய்ச்ச சென்ற சின்னத்துரை, நாகம் தீண்டி, ஆண்டி இறந்த இடத்திலேயே இறந்து விடுகிறான். வழக்கு விசாரணைக்கு முந்தைய நாள் இரவில் நீதிபதியின் கனவில் ‘‘மேல சட்டை இல்லாமல் தலையில் தலைப்பாகை கட்டியவாறு வெள்ளை வேட்டியுடன் வந்த ஒருவர், ஆண்டியை கத்தியால் குத்தி சின்னத்துரை கொன்றதாகவும், செல்லையா குற்றம் செய்யாதவர்’’ என்பதையும் கூறினார். மறுநாள் காலை விடிந்தது. இரவில் ஒரு விசாரணை தொடர்பான கனவை கண்டதில் வியப்பும், குழப்பமும், நம்ப முடியாத நிலையும் கொண்டு, அன்றைய தினம் நீதிமன்றம் வந்தார், நீதிபதி.

விசாரணை தொடங்கியது. குற்றவாளி கூண்டுக்குள் செல்லையா, சுடலைமாடனை எண்ணிக்கொண்டு எந்த தண்டனை தந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் நின்று கொண்டிருந்தார். நீதிபதி அவரிடம் குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா? என்று கேட்க, செல்லையா அவரிடம், ஐயா... என்றபடி பதில் சொல்ல முடியாமல் நீதிபதியின் முகத்தை ஏக்கத்துடன் பார்த்தார். அப்போது கோர்ட் வளாகத்திலிருந்து விரைந்து வந்த காவலர்கள், ஐயா, ஆண்டி கொலை வழக்கு தொடர்பா, சாட்சி சொல்ல ஒரு ஆள் வந்திருக்கிறார் என்றதும். வரச் சொல்லுங்கள் என்றார். நீதிபதி. வெள்ளைக்குதிரையை விட்டு வந்திறங்கிய வாட்ட சாட்டமான தேகம் கொண்ட அந்த நபர் முறுக்கு மீசையுடனும், மேல்சட்டை அணியாமல், வெள்ளை வேட்டியுடன் கையில் வேல் கம்புடனும் வந்து நின்றார். சற்று திகைப்புடன் பார்த்தார் நீதிபதி. ஆம், இரவு கனவில் வந்த அதே நபர். ‘‘ம்.. என்ன, சொல்லப் போகிறீர்கள்’’ என்றார்..

தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை எடுத்து தனது இடது கைப்பக்கவாட்டில் வைத்துக்கொண்டு வணக்கம் செலுத்தி விட்டு, ‘‘ஐயா, நான் செந்தூரிலுள்ள சண்முகநாதன் பண்ணை வீட்டு காவலாளி மகாராசன், சம்பவம் அன்று ஆறுமுகமங்கலம் வழியாக வந்தபோது கொலை சம்பவத்தை கண்டேன் என்றும் செல்லையா குற்றவாளி அல்ல அவன் நிரபராதி என்றும், குற்றவாளி சின்னத்துரை நாகம் தீண்டி இறந்ததாகவும்’’ கூறினார்.

நீதிபதி திகைத்தபடியே கேட்டார். பின்னர் நீங்கள் போகலாம் என்ற கூற, மாயமானார் மாயாண்டி. அவர் நின்ற கூண்டில் ரத்தம் வடிந்திருந்தது. கோர்ட் காவலாளிகள் தண்ணீர் விட, அது பாலாக மாறியது. சற்று நேரத்தில் எந்த தடயமும் இல்லாமல் ஆனது. ஆனால் அந்த பகுதியில் பிச்சிப்பூ (ஜாதி மல்லி) மணம் கமழ்ந்தது. கோர்ட்டில் அனைவரும் திகைத்தனர். நீதிபதி செல்லையாவை அழைத்து ‘‘உன் சாமி பேரென்ன சொன்ன’’  செல்லையா, ‘‘சொள்ள மாடன்’’  ‘‘ம்..ம்.. யுவர் கார்டு ஸ் கிரேட்’’ என்று கூறி, செல்லையாவை விடுதலை செய்து உத்தரவிட்டார் நீதிபதி.

மகாராசன் பெயரில் நம்ம சுடலைதான் வந்து காப்பாற்றினார் என்று செல்லையா ஊர்முழுக்க கூறினார். ஐகோர்ட்டில் சாட்சி சொல்லி, தன்னை நம்பிய பக்தனை காப்பாற்றியதால் அன்று முதல் ஆறுமுகமங்கலத்து சுடலைமாடன் ஐகோர்ட் மகாராசா என்றழைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்