ஆதாருடன் இணைக்காத பான் கார்டு செப்டம்பர் முதல் செல்லாது - மத்திய அரசு

டெல்லி: ஆகஸ்டு மாத இறுதிக்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும், இல்லாவிட்டால் வரும் செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து பின்பு பான் கார்டு எண் செல்லாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு பதிலாக வருமான வரித்துறை மூலம் புதிய ஆதார் எண் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில், வருமான வரி தாக்கலுக்கு பான் எண் அவசியமில்லை என்றும் அதற்கு பதிலாக ஆதார் எண் மூலம் வருமான வரி தாக்கல் செய்யலாம் என்று அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

மற்ற நாடுகளைப்போல் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான, நாடு முழுவதும் பயன்படுத்தும் வகையிலும் சமூக பாதுபாப்பு தேவை என்ற அடிப்படையிலும் ஒரு அடையாள எண் தேவை என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஆதார் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் நாடு தழுவிய குடிமக்கள் தரவுத் தளத்தை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். ஆதார் எண்ணைக் பயன்படுத்தி அனைத்து சமூகநலத் திட்டங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் மத்திய அரசும் பலமுறை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தவண்ணம் இருந்தது. குறிப்பாக கேஸ் இணைப்பு, முதியோர் உதவித் திட்டம் என மத்திய மாநில அரசுகள் மூலம் கிடைக்கப்பெறும் அனைத்துவித சமூக நல உதவித்திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று அறிவித்தது. அதே போல், ஆதார் எண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்த மத்திய நேரடி வரிகள் வாரியமும், வருமான வரி செலுத்துவோரும் பான் என்ணுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டியது கட்டாயம் என்றும் மத்திய அரசு வலியுறத்தியது. மத்திய அரசின் வேண்டுகோளை பலர் வேண்டுமென்றே தொடர்ந்து புறக்கணித்து வந்தவண்ணம் உள்ளனர். மத்திய அரசு பலமுறை எச்சரித்தும் இவர்கள் அதை உதாசீனம் செய்து வருகின்றனர். இதற்கு முக்கியமாக சில முறைகேடான பணப் பரிமாற்றம் மற்றும் வர்த்தகப் பரிமாற்றம் செய்பவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்ணை பயன்படுத்தி மத்திய

அரசுக்கு சேரவேண்டிய வரி வருவாயை கபளீகரம் செய்துவருகின்றனர். ஒருவேளை பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்துவிட்டால், முறைகேடாக பணப்பரிமாற்றமோ வர்த்தக பரிமாற்றமோ செய்ய இயலாது என்பதாலேயே பான் ஆதார் இணைப்பை தொடர்ந்து தவிர்த்து வருகின்றனர். சிலர் வேண்டுமென்றே பொது நலவழக்கும் தொடுத்தனர். இதனால் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவையும் பலமுறை நீட்டிப்பு செய்து வந்தது. இறுதியில் கடந்த மார்ச் மாதத்தில் மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes-CBDT) ஆதார் எண்ணுடன் பான் எண்ணை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் கூடவே, ஏப்ரல் முதல் வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பு கட்டாயம் என்றும் இல்லாவிட்டால் பான் எண் முடக்கப்பட்டுவிடும் என்றும் இறுதிக் கெடு விதித்தது. இதனால் வருமான வரி தாக்கலும் செய்ய முடியாமல் போய்விடும் என்பதால் இது வரையிலும் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காதவர்கள் இரண்டையும் இணைத்தே வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கு பான் கார்டுக்கு பதிலாக இனிமேல் ஆதார் எண்ணையும் பயன்படுத்தலாம் என்று அறிவித்தார். இதனால் பான் எண்ணின் அவசியமும் இல்லாமல் போய்விட்டது என்றே பலரும் அசட்டையாக இருக்கத் தொடங்கிவிட்டனர். இதை உணர்ந்த மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்டு மாத இறுதிக்குள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கவேண்டியது கட்டாயம் என்றும் இல்லாவிட்டால் பான் எண் செல்லாது என்றும் முடக்கப்பட்டுவிடும் என்றும் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து விளக்கமளித்த வருவாய் துறை செயலாளர் ஏ.பி.பாண்டே (A.B.Pandey). ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கவேண்டியது கட்டாயம் மற்றும் முதன்மையானதும் கூட. இதுகுறித்து பலமுறை எச்சரித்தும் பலரும் அதை கண்டுகொண்டதாக தெரியவில்லை. எனவே தான் பான் எண்ணை முடக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்துள்ளோம். பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பின்பே பான் எண் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறினார்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை