முக்கியமாகத் தெரியாத மற்றும் தெரியாதவர்களிடம் இருந்து வரும் இணைப்புகளை பயன்படுத்துவதைத் தவிருங்கள். அது மின்னஞ்சல், குறுஞ்செய்தி என எந்த வழியில் வந்தாலும் சரி.
வாட்ஸ்அப்பில் புதிதாக 'பிங்க் வாட்ஸ்அப்' (Pink whatsapp) என்ற பெயரில் வைரஸ் ஒன்று பரவுவதாக சைபர்பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். வாட்ஸ்அப் பயனர்கள் சிலரும் 'பிங்க் வாட்ஸ்அப்' என்ற பெயரில் சில இணைப்புகளை நண்பர்கள் ஃபார்வேர்ட் செய்திருந்ததாகத் தெரிவித்திருந்தனர். இது என்ன மாதிரியான வைரஸ், இது போன்ற வைரஸ் தாக்காமல் நம் சாதனங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி?

'பிங்க் வாட்ஸ்அப்' என்ற பெயரில் நாம் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பே பிங்க் நிறத்தில் இருப்பது போன்ற படங்களுடனும் சில இணைப்புகளுடனும் ஒரு குறுஞ்செய்தி வாட்ஸ்அப் பயனர்களுக்கு இடையில் வலம் வந்து கொண்டிருக்கிறது. பலர், அது என்னவென்று தெரியாமலேயே அதனை நண்பர்களுக்கு ஃபார்வர்ட் செய்து வருகின்றனர். இந்த பிங்க வாட்ஸ்அப் குறுஞ்செய்தியில் எந்தத் தீங்கும் இல்லை, அந்த குறுஞ்செய்தியில் இருக்கும் இணைப்பைப் பயன்படுத்தும் போதுதான் வைரஸ் உங்கள் சாதனத்திற்குள் வருகிறது. அந்த வைரஸ் பாதித்த சாதனங்களில் இருக்கும் தகவல்களை ஹேக்கர்களால் திருடவும், சாதனத்தின் மொத்தக் கட்டுப்பாட்டையும் அவர்கள் கையில் எடுக்கவும் முடியும். அது உண்மையில் என்ன மாதிரியான வைரஸ், யார் பரப்பியது போன்ற தகவல்கள் இப்போதுவரைத் தெரியவில்லை.
இது போன்ற நிகழ்வுகள் நடப்பது புதியது அன்று. வாட்ஸ்அப்பிற்கு மட்டுமல்ல, மொத்த டெக் உலகிற்கும் இது புதியது இல்லை. இணையத்தில் எந்த இடத்திற்குச் சென்றாலும் இது போன்ற தகவல் திருட்டில் ஈடுபடக்கூடிய செயலிகளும், இணைப்புகளும் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. நம் தகவல்கள் திருடுபோகாமல் பாதுகாப்பாக இருப்பது நம் கைகளில்தான் இருக்கிறது.
இது போன்ற நிகழ்வுகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
இது போன்ற சம்பவங்களில் நாம் சிக்காமல் பாதுகாப்பாக இருப்பதற்கு, தேவையற்ற இணைப்புகள், இணையதளங்கள் மற்றும் செயலிகள் ஆகியவற்றை நாம் பயன்படுத்தாமல் இருந்தாலே போதும். முக்கியமாக வாட்ஸ்அப்பில் வரும் இணைப்புகளைக் கட்டாயமாக ஃபார்வர்ட் செய்யக்கூடாது. அது பாதிப்பில்லாதது என நமக்கு உறுதியாகத் தெரியாதவரை எந்தக் குறுஞ்செய்தியையும் ஃபார்வர்ட் செய்யக்கூடாது.

எந்த செயலியாக இருந்தாலும், கூகுளின் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்வதுதான் சிறந்தது. இணையத்தில் இருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதைத் தவிருங்கள். எந்த செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என்றாலும் ப்ளே ஸ்டோரில் அந்த செயலியைத் தேடிப் பாருங்கள், உங்கள் சாதனத்திற்கு அப்டேட் இருந்ததென்றால், ப்ளே ஸ்டோர் மூலமாகவே நாம் தெரிந்துகொள்ளலாம்.
முக்கியமாகத் தெரியாத மற்றும் தெரியாதவர்களிடம் இருந்து வரும் இணைப்புகளை (ஆன்லைன் தளத்திற்குப் பயன்படுத்தப்படும் லிங்க்கள்) பயன்படுத்துவதைத் தவிருங்கள். அது மின்னஞ்சல், குறுஞ்செய்தி என எந்த வழியில் வந்தாலும் சரி.