மாதம் ரூ.1000 செலுத்தினால் ரூ.5,27,446.. எப்படி.. ஆண்குழந்தைகளுக்கு அஞ்சலகத்தின் அருமையான திட்டம்!

 


இன்றைய காலகட்டங்களில் குழந்தைகளுக்கான முதலீடு என்பதை பலரும் யோசிக்க தவறுகிறோம். ஆனால் அதன் அவசியத்தை உணர்ந்து உங்கள் குழந்தைகளுக்காக சேமிப்பது மிக அவசியம்.

ஆக சேமிப்பின் அத்தியாவசியத்தை உணர்ந்து இளம் வயதில் இருந்தே முதலீடு செய்ய ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் அஞ்சலகத்தின் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, ஆண் குழந்தைகளுக்கு என அரசு துவங்கிய ஒர் திட்டம் தான் பொன்மகன் சேமிப்பு திட்டம்.

ஆண் குழந்தைகளை மனதில் கொண்டு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களில் சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்க கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் தான் இது. அப்படி ஒரு திட்டத்தில் எப்படி இணைவது? என்னென்ன சலுகைகள் உள்ளன? வட்டி விகிதம் எவ்வளவு? மற்ற முழு விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

எவ்வளவு முதலீடு?

ஆண் குழந்தைக்களுக்காக அஞ்சலகத்தின் மூலம் வழங்கப்படும் ஒரு திட்டம் தான், பொன்மகன் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்திலும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தினை போலவே, ஆண்டுக்கு 12 முறை என குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

எத்தனை ஆண்டுகள்?

இந்த திட்டம் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டத்தினை போல் தான். இதுவும் ஒரு 15 ஆண்டுகால திட்டம். இந்த திட்டத்தினை இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் எங்கு வேண்டுமானலும் தொடங்கிக் கொள்ளலாம். அதே போல இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் அக்கவுண்டினை டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம்.



வயது வரம்பு

தங்களது மகன்களுக்கு என ஒரு கணக்கினை திறக்க நினைக்கும் பெற்றோர்கள் அருகில் இருக்கும் அஞ்சலக அலுவலகத்தினை நாடலாம்.

உங்களது குழந்தைக்கு 10 வயதுக்கு மேல் உள்ளது எனில், அவர்களின் பெயரிலேயே தொடங்கிக் கொள்ள முடியும். இதே குழந்தைக்கு 10 வயதுக்கு குறைவாக இருந்தால், ஜாய்ண்ட் அக்கவுண்ட் மூலம் தொடங்கலாம்.

என்னென்ன ஆவணங்கள்?

இந்த பொன் மகன் திட்டத்தில் இணைய மற்ற திட்டங்களை போல் தான் ஆவணங்கள் தேவை. குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் சரியான முகவரி சான்றாக ஆதார் கார்டு, ஐடி கார்டாக பான் கார்டு, மற்றும் குழந்தையின் புகைப்படம் உள்ளிட்ட சில ஆவணங்கள் தேவைப்படும்.

வட்டி விகிதம் எவ்வளவு?

பொதுவாக அஞ்சலக திட்டங்களுக்கு வட்டி விகிதம் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறும். தற்போது வட்டி விகிதம் 7.6% ஆகும். இது மற்ற திட்டங்களோடு ஒப்பிடும்போது வட்டி விகிதம் சற்று அதிகம் தான். அதோடு இந்த திட்டத்தில் அஞ்சல் அலுவலகத்தில் அனைத்து பரிவர்த்தனையும் செய்து கொள்ள முடியும் என்பதால், கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



வரி விலக்கு உண்டா?

இந்த திட்டத்திற்கு கணக்கில் முதலீடு மற்றும் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விலக்கு உண்டு. மேலும் நீங்கள் இந்த கணக்கு தொடங்கியதில் இருந்து 7வது ஆண்டில் இருந்து கணிசமான தொகையினை பெற்றும் கொள்ளும் வசதி உண்டு. அதே போல இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும், அடுத்து 5 ஆண்டு தொகுப்புகளாக அதிகரித்துக் கொள்ளலாம்.

கடன் வசதி உண்டா?

பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கும் ஒரு விஷயம். சேமிப்பு திட்டங்களை அவசர காலங்களில் பிணையமாக வைத்து கடன் பெற முடியுமா? என்பது தான். அந்த வகையில் இந்த திட்டம் உங்களுக்கு ஏற்ற திட்டம் என்றே கூறலாம். இந்த திட்டத்திலும் கடன் வசதி உண்டு. நீங்கள் முதலீடு செய்ய தொடங்கியதில் இருந்து மூன்றாவது நிதியாண்டில் இருந்து கடன் பெற்றுக் கொள்ள முடியும்.



பாதுகாப்பு உண்டு

இந்த செல்வமகன் திட்டம் இந்திய அரசின் தபால் துறை மூலம் இயக்கப்படுவதால் முதலீட்டு பாதுகாப்பு உண்டு. சந்தை அபாயம் இல்லை. நிரந்தர வருமானம் கொடுக்க கூடிய ஒரு திட்டம். இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயமும் இது தான். லாபம் அதிகம் இல்லாவிட்டாலும் முதலீட்டுக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது என்று தான்.

மாதம் எவ்வளவு?

மாதம் 1,000 ரூபாய் வீதம், வருடத்திற்கு 12,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். தற்போதைய வட்டி விகிதம் 7.6%. நீங்கள் 15 ஆண்டுகள் முதலீடு செய்யும்போது 1,80,000 ரூபாய் முதலீடு செய்வீர்கள். வட்டி விகிதம் 3,47,441 ரூபாய் முதலீடு வட்டியாக கிடைக்கும். அக மொத்தத்தில் முதிர்வு தொகை 5,27,446 ரூபாய் கிடைக்கும்.







கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை