கலையரசன் நடிப்பில் திரையரங்கில் வெளியாகியிருக்கும் படம் குதிரை வால். யாழ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ப.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மனோஜ் எல்.ஜேசன் மற்றும் ஷியாம் சுந்தர் இருவரும் இயக்கியுள்ளனர்.
கலையரசனின் கனவில், ஒரு மலை கிராமத்தில் வால் இல்லாமல் ஒரு குதிரை நின்று கொண்டிருப்பது தெரிகிறது. அவர் கண் விழித்து பார்க்கும்போது அவருடைய முதுகின் கீழ் குதிரை வால் முளைக்கிறது. திடீரென தனக்கு வால் முளைப்பதற்கு காரணம் என்ன ? தனக்கு வரும் விசித்திரமான கனவின் பின்னணி என்ன ? என்ற கலையரசனின் கேள்விகளுக்கு விடை கிடைத்ததா இல்லையா என்பதே படத்தின் கதை.
கனவு மற்றும் நிகழ்காலத்துக்குமிடையான போராட்டம் என வித்தியாசமான பாணியில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் பலமும் அதுதான், பலவீனமும் அதுதான். வித்தியாசமான ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு ஆகியவற்றை பயன்படுத்தி முதல் பாதி முழுக்க கலையரசனின் குழப்பமான மன நிலையை பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்தியிருக்கிறார்கள் இயக்குநர்கள் மனோஜ் எல்.ஜேசன் மற்றும் ஷியாம் சுந்தர்
முதல் பாதியில் ஒரு காட்சி முழுமை பெறாமல் இருக்க, அடுத்த காட்சியில் முதல் காட்சியின் முடிவை சொல்லுதல் என ஆங்காங்கே திரைக்கதையில் சுவாரசியம் சேர்த்திருக்கிறார் எழுத்தாளர் ராஜேஷ். குறி சொல்பவர்கள், கணித ஆசிரியர், ஜோசியர் என கலையரசன் தன் கனவுகளுக்கு விடை தேடி செல்ல, அவர்கள் ஒவ்வொருவரும் அவரது கனவுக்கு வெவ்வேறு கோணங்களில் விடை அளிக்கும் விதம் நன்றாக இருந்தது.
முதல் பாதி முழுவதும் கலையரசனுக்கு ஏன் இப்படி நடக்கிறது என நமக்கு எழும் கேள்விதான் படத்தை சுவாரசியப்படுத்துகிறது. விசித்திரமான காட்சிகள், மாறுபட்ட இசை என நம்மையும் ஒரு கனவு உலகத்திற்கு அழைத்து சென்றுவிடுகிறார்கள்.
பெரும்பாலான காட்சிகள் சிசிடிவி கேமரா கோணத்தில் மேல் நோக்கி மூன்றாவது நபர்கள் கவனிக்கும் விதத்தில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் முத்துகுமார்.
நடிப்பதற்கு முற்றிலும் வித்தியாசமான வேடம் கலையரசனுக்கு. படத்தில் அவர் மட்டுமே பிரதானமாக இருக்கிறார். படம் முழுக்க அவரது கதாப்பாத்திரம் வழியாகவே கதை சொல்லியிருக்கிறார்கள் இயக்குநர்கள். அதனை உணர்ந்துகொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவருக்கு பெயர் சொல்லும் கதாப்பாத்திரம். அஞ்சலி பாட்டில், சேத்தன் உள்ளிட்ட பிற நடிகர்களும் தங்களது அழுத்தமான பங்களிப்பை வழங்கி படத்தை சுவராசியப்படுத்தியிருக்கிறார்கள்.
துவக்கத்தில் குறிப்பிட்டதுபோல, வித்தியாசமான கதை சொல்லும் முறைதான் இந்தப் படத்தின் பலமும் பலவீனமும். கனவு, நிகழ் காலம் என மாறி மாறி வரும் காட்சிகளில் நாமே அதனை அனுமானித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
படம் முடிந்த பிறகும் சில கேள்விகள் நமக்குள் அப்படியே இருக்கிறது. அதனை பார்வையாளர்களின் யூகத்திற்கே விட்டிருக்கிறார்கள் இயக்குநர்கள். படத்தின் மெதுவாக நகரும் தன்மையும் ஒருசிலருக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். இருப்பினும் வித்தியாசனமான படங்களை எதிர்பார்ப்பவர்கள் நிச்சயம் இந்த குதிரை வால் படத்தை முயற்சிக்கலாம்.