இந்த சாம்பார் சாதம் செய்ய அரிசி வேண்டாம். உடலுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியம் தரும் ‘ஒன் பாட் சாமை சாம்பார் சாதம்’ செய்வது எப்படி.

 


கூடுமானவரை உடல் ஆரோக்கியத்திற்கு அரிசியை தவிர்த்து விட்டு, இப்படி சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு விஷயம் தானே. இந்த சாம்பார் சாதத்தை சாமை அரிசியில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வரகு, திணை, குதிரைவாலி போன்ற மற்ற மில்லட் வகைகளிலும் இதேபோல சாம்பார் சாதம் செய்தால் ருசியாக இருக்கும். வாங்க சுலபமான உடலுக்கு ஆரோக்கியம் தரும் அந்த சாம்பார் சாதத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

முதலில் 1 கப் அளவு சாமை அரிசி, 1/2 கப் அளவு துவரம்பருப்பு போட்டு இரண்டு பொருட்களையும் நன்றாக கழுவி நல்ல தண்ணீரை ஊற்றி 30 நிமிடங்கள் ஊறவைத்து விடுங்கள். இது அப்படியே இருக்கட்டும். பிறகு சிறிய நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் போட்டு ஊற வைத்து புளிக் கரைசலையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு எந்தெந்த காய்கறிகள் தேவையோ, தேவையான அளவு எடுத்து வெட்டி சுத்தம் செய்து அதையும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். கத்தரிக்காய், முருங்கைக்காய், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், சௌசௌ உங்கள் வீட்டில் எந்த காய்கறிகள் இருந்தாலும் இந்த சாம்பார் சாதத்திற்கு சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்தபடியாக ஒரு குக்கரை எடுத்து அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை – 2 கொத்து, வெட்டிய பச்சை மிளகாய் – 1, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 10 பல் போட்டு நன்றாக வதக்கி விடுங்கள். வெங்காயம் லேசாக வதங்கியவுடன் பெரிய சைஸ் தக்காளி பழம் – 1 பொடியாக நறுக்கிப் போட்டு மீண்டும் வதக்கவும்.

தக்காளி பழம் வெந்து வதங்கிய பிறகு வெட்டி வைத்திருக்கும் காய்கறிகளை எண்ணெயில் போட்டு 2 நிமிடம் வதக்கி விட வேண்டும். அடுத்தபடியாக மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், சாம்பார் தூள் – 2 ஸ்பூன், போட்டு மீண்டும் ஒரு நிமிடம் வரை வதக்க வேண்டும். அடுத்தபடியாக கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்றி, 2 நிமிடம் கொதிக்க விடுங்கள். பிறகு ஊற வைத்திருக்கும் அரிசி பருப்பை இதில் போட்டு சாம்பார் சாதத்திற்கு தேவையான அளவு உப்பு போட்டு, 4 லிருந்து 5 கப் அளவு தண்ணீர் வரை இதில் ஊற்ற வேண்டும். அரிசியை எந்த கப்பில் அளந்து எடுத்தீர்களா அதே கப்பில் தண்ணீரையும் அளந்து கொள்ளுங்கள்.

இந்த சாம்பார் சாதம் வெந்து வரும்போது தளதளவென இருக்க வேண்டும். அவ்வளவு தான். குக்கரை மூடி 5 லிருந்து 6 விசில் வரை வைக்க வேண்டும். பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து சாம்பார் சாதத்தை நன்றாக கலந்து விட்டு இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி, 2 டேபிள்ஸ்பூன் நெய் மேலே மணக்க மணக்க ஊற்றி அப்படியே ஒரு அப்ளத்துடன் பரிமாறி பாருங்கள். அத்தனை சுவையாக இருக்கும். உங்களுக்கு இந்த ஆரோக்கியமான ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை