Wi-Fi Calling | உங்கள் டெலிகாம் ஆப்ரேட்டர் வழங்கும் சேவையின் ஒரு பகுதியாக இந்த அம்சம் இருப்பதால், வைஃபை காலிங் முற்றிலும் ஒரு இலவசமான சேவை ஆகும், இதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை
நீங்கள் வசிக்கும் பகுதியில் உங்கள் மொபைல் நெட்வொர்க் மிகவும் பலவீனமாக இருக்கும் பட்சத்தில், மொபைல் நெட்வொர்க் வழியாக அல்லாமல் உங்கள் போனின் வைஃபை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்வதே - வைஃபை காலிங் (Wi-Fi calling) எனப்படுகிறது. வைஃபை காலிங் என்பது உங்கள் டெலிகாம் ஆப்ரேட்டரால் இயக்கப்படும் ஒரு அம்சமாகும், மேலும் இது உங்கள் அழைப்புகள் மிகவும் தெளிவாகவும் மென்மையாகவும் இருப்பதை உறுதி செய்ய உங்கள் மொபைலில் உள்ள வைஃபை-ஐ பயன்படுத்துகிறது.
இந்தியாவில், ஏர்டெல், ஜியோ மற்றும் வி (வோடாபோன் ஐடியா) போன்ற அனைத்து முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வைஃபை காலிங் அம்சத்தை வழங்குகின்றன. மேலும் இந்த அம்சம் தற்போது மிகவும் பொதுவானதாக மாறிக்கொண்டு வருவதால், இதன் நன்மைகள் என்ன? இதை எனேபிள் செய்து, பயன்படுத்துவது எப்படி? என்பதை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
வைஃபை காலிங் என்றால் என்ன?
மேலும் விரிவாக சொல்ல வேண்டுமென்றால் வைஃபை காலிங் என்பது மொபைல் டேட்டாவிற்குப் பதிலாக வைஃபை நெட்வொர்க் மூலம் யூசர்கள் அழைப்புகளை மேற்கொள்ளவும், பெறவும் அனுமதிக்கும் ஒரு அம்சமாகும், இது பலவீனமான மற்றும் நம்பகத்தன்மையற்றதாக நெட்வொர்க்கில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த அம்சம், டெலிகாம் நிறுவனங்களின் நெட்வொர்க்கிற்கு பதிலாக அழைப்புகளை மேற்கொள்ள உங்கள் ஸ்மார்ட்போனின் வைஃபை நெட்வொர்க்குகளை பயன்படுத்துகிறது.
இந்த வைஃபை காலிங், டெலிகாம் ஆப்ரேட்டர்களின் பக்கத்தில் இருந்து தானாகவே செயல்படுத்தப்படும் ஒரு அம்சம் என்பதால் யூசர்கள் வைஃபை காலிங்-ஐ செயல்படுத்த தங்கள் ஸ்மார்ட்போன்களில் எதையும் செய்ய வேண்டியதில்லை.
சாதாரண கால்களை விட வைஃபை காலிங் ஏன் சிறந்தது?
ஏனெனில் வைஃபை காலிங்கில் டேட்டாவிற்கு பெரிய அளவில் வேலையே கிடையாது. வைஃபை காலிங் செய்ய வைஃபை நெட்வொர்க் மட்டுமே தேவை, அதாவது இதற்கு மொபைல் டேட்டா அதிகம் தேவைப்படாது. ஏர்டெல் நிறுவனத்தின் கருத்துப்படி, 5 நிமிட வைஃபை காலிங் செய்ய 5 எம்பி டேட்டா மட்டுமே தேவைப்படும். பேட்டரி நுகர்வை பொறுத்தவரை, ஒரு ஸ்மார்ட்போன் மொபைல் நெட்வொர்க்கிற்கு பதிலாக வைஃபை வழியாக அதே விஷயங்களை செய்வதால், பேட்டரி நுகர்வு சாதாரண அழைப்புகளை போலவே தான் இருக்கும்.
இதற்கு கட்டணங்கள் ஏதேனும் உண்டா?
உங்கள் டெலிகாம் ஆப்ரேட்டர் வழங்கும் சேவையின் ஒரு பகுதியாக இந்த அம்சம் இருப்பதால், வைஃபை காலிங் முற்றிலும் ஒரு இலவசமான சேவை ஆகும், இதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்கில் வைஃபை காலிங் அம்சம் இருக்கிறதா என்பதை மட்டுமே நீங்கள் சரிபார்க்க வேண்டியிருக்கும்.
ஆண்ட்ராய்டு யூசர்கள், செட்டிங்ஸ் > மொபைல் நெட்வொர்க்ஸ் அல்லது கனெக்ஷன்ஸ் > வைஃபை என்பதற்குச் சென்று, வைஃபை காலிங் அம்சம் இருக்கிறதா இல்லையா என்பதை சரிபார்க்கலாம். ஐபோன் யூசர்கள், செட்டிங்ஸ் > ஃபோன் > மொபைல் டேட்டா > வைஃபை காலிங்-ஐ அணுக வேண்டும்.
வைஃபை காலிங்கில் குவாலிட்டி எப்படி இருக்கும்?
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வைஃபை காலிங்கின் கீழ் நிகழ்த்தப்படும் அழைப்பின் தரம் சீராகவே உள்ளது மற்றும் சில நேரங்களில் மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனால் சில சமயங்களில், வைஃபை கால்கள் மறுபக்கத்துடன் இணைய சிறிது நேரம் எடுத்து கொள்கிறது. மேலும் மறுபக்கத்தில் இருக்கும் நபர் தங்கள் வைஃபை-ஐ ஆன் செய்தும் வைத்திருக்க வேண்டும்.