சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகள் ரூ 1000 பெறுவதற்காக வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காலத்திற்கு பிறகு இடைநிற்றல் அதிகரித்துள்ளது. இதை தடுக்கும் விதமாக ஆதிதிராவிடர், பட்டியலினத்தவர், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ 1000 வரை உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12,000 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் 6 லட்சம் மாணவிகள் பயனடைவர் என சொல்லப்பட்டது.
இந்த திட்டத்திற்காக ரூ 698 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் மாணவிகள் penkalvi.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க 30 ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கு ஆதார் எண், வங்கிக் கணக்கு புத்தகம், பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10, 12 ஆம் வகுப்பு மார்க் ஷீட் உள்ளிட்டவைகளை கல்லூரிகளில் சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து அரசு வழிகாட்டும் நெறிகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மாநில உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில், "அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் சேரும் மாணவிகளுக்காக "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம்" என்ற திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த https://penkalvi.tn.gov.in என்ற தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த மாணவிகள் தங்கள் பெயர்களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதற்காக இளநிலை படிக்கும் மாணவியர்களிடம் இருந்து அவர்களது சுய விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள், அவர்கள் படித்த அரசு பள்ளி விவரங்களை, 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் ஆகியவற்றை தொகுத்து சமர்ப்பிக்க வேண்டும். இவற்றை ஒவ்வொரு கல்லூரி துறை சார்ந்த தலைவர்கள் இணைய தளத்தில் உள்ளீடு செய்து அனுப்ப வேண்டும். ஓ.டி.பி. அனுப்பப்படும் என்பதால் மாணவிகள் செல்போனை தவறாது கொண்டு வர வேண்டும். மாணவிகளும் தாங்களாகவே இதை பதிவேற்றம் செய்யலாம்.
அனைத்து விவரங்களும் வருகிற 30-ந்தேதிக்குள் பதிவிட வேண்டும். ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்குள் கல்லூரி வாரியாக பதிவிடப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து மேலும் விவரங்களுக்கு 14417 எனும் உதவி எண்ணுக்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம்.