தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஓர் புரட்சிகரமான சட்டமாகும். அரசு நிறுவனங்களின் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்கான இச்சட்டம் இந்தியாவில் 2005 அக்டோபர் மாதம் இயற்றப்பட்டது.
இச்சட்டத்தின்படி அரசு நிறுவனங்களில் தேவைப்படும் தகவல்களை எந்த ஒரு சாதாரண குடிமகனும் கோரிப் பெறலாம். தகவல்கள் 30 நாட்களுக்குள் வழங்கப்படுதல் வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் தகவல் வழங்கும் அதிகாரியிடமிருந்து கட்டணமாக ஒரு குறிப்பிட்டத் தொகை வசூலிக்கப்படும்.
நாட்டின் வலிமை வாய்ந்த சட்டங்களுள் தகவல் அறியும் உரிமைச் சட்டமும் ஒன்றாகும். இச்சட்டம் மிகவும் எளிமையானதாகவும், சாதாரண மக்களும் பயன்படுத்தக்கூடிய வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சட்டத்தின் வாயிலாக தகவல்களைப் பெற படிக்கத் தெரியாதவர்களுக்கு பொதுத்தகவல் அலுவலர் உதவி செய்ய வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள் அதாவது ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு அரசுத் துறைகள், அரசுப் பள்ளிகள், நெடுஞ்சாலைத் துறைகள் போன்றவை இச்சட்டத்திற்கு உட்பட்டதாகும்.
தகவல் அறியும் உரிமை சட்ட செயல்பாட்டாளர்கள் என அழைக்கப்படுபவர்கள் அருணா ராய் மற்றும் நிக்கில் தேவ் ஆவார்.
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஒருவர் அரசு ஆவனங்களான கோப்புகள்,அறிக்கைகள், தாள்கள் மற்றும் தனிப்பட்ட ஒருவரின் தகவல்கள் போன்றவைகள் கிடைக்கப்பெறலாம். நாட்டின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைகளான எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய சேமக் காவல் படை (CRPR) மற்றும் உளவுத்துறைப் பணியகம் (Intelligence Bureau) ஆகிய அமைப்புகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பத்தில் உங்கள் முழுபெயர், முகவரி எழுதி கையெழுத்திட்டு தேதியுடன் பதிவு தபாலின் குறிப்பிட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
அனுப்பப்பட்ட அஞ்சலுக்கு 30 நாட்களுக்குள் பதில் பெறப்படவில்லை எனில் விண்ணப்பத்தை மேல்முறையீடுக்கு அனுப்பலாம்.