தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்) மூலம் பயன்பெற முதல் தலைமுறை தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்) மூலம் பயன்பெற முதல் தலைமுறை தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழக அரசால் ‘புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்” (NEEDS) 2012-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, பட்டம், பட்டயம், ஐடிஐ/ தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் நீட்ஸ் திட்டத்தில் பயன் பெறலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு 21 வயது முதல் 35 வயது வரை மற்றும் பெண்கள் / பட்டியலிடப்பட்டோர் / பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / முன்னாள் இராணுவத்தினர் / மாற்றுத் திறனாளிகள் / சீர்மரபினர்/திருநங்கைகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு 21 வயது முதல் 45 வயது வரை ஆகும். பயனாளிகள் 3 வருடத்திற்கு குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

மேலும் அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த பொருளாதார ரீதியாக சாத்தியப்படக்கூடிய தொழில் துவங்க பயனாளிகளுக்கு ரூ.10 இலட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கிக் கடனுதவி வழங்க வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படும். வங்கியில் கடனுதவி பெற்று தொழில் துவங்கும் தொழில் முனைவோர்களுக்கு 25 சதவீதம் அரசு மானியமாக அதிகபட்சம் ரூ.75 இலட்சம் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் பட்டியல் இனம்/பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி தொழில் முனைவோர்களுக்கு 25 சதவீதம் மூலதன மானியம் மற்றும் மூலதன மானியத்தில் 10 சதவீதம் கூடுதல் மானியமும் வழங்கப்படும். பொது பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் சொந்த முதலீடாக செலுத்த வேண்டும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். வியாபாரம் மற்றும் நேரடி விவசாயத்திற்கு இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தென்னை நார் பொருட்கள் தயாரித்தல், கொய்யா பழச்சாறு தயாரித்தல், பூக்களில் இருந்து வாசனைத் திரவியங்கள் தயாரித்தல், உணவுப் பொருட்கள் தயாரித்தல், பால் பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள தொழில் முனைவோர்கள் உற்பத்தி சார்ந்த தொழில்கள்/சேவை சார்ந்த தொழில்களுக்கு கடன்பெற, https://www.msmetamilnadu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து தொழிற்கடன் பெற்று பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடைய அல்லது இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, திண்டுக்கல் அவர்களை நேரிலோ அல்லது 0451-2904215, 2471609 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

1 கருத்துகள்:

Solubilis சொன்னது…

Thank you, Tamil Nadu Government, for supporting first-generation entrepreneurs through the NEETS scheme! This initiative will empower many to grow and succeed.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்