- தமிழ்நாட்டில் புதிதாக 25 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் தொடங்கப்படுகிறது.
- கடந்த 6 ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் எதுவும் புதிதாக தொடங்கப்படவில்லை.
சென்னை:
தமிழ்நாட்டில் புதிதாக 25 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் தொடங்கப்படுகிறது. இதை பொதுசுகாதாரத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
அரியலூர் பெரியாத்து குறிச்சி, செங்கல்பட்டு பொன்மார், கோவை மணியக்காரன் பாளையம், கடலூர் ஒரங்கூர், மஞ்சக் கொல்லை, தர்மபுரி அதிகப்பாடி, ஈரோடு பவானி சாகர், மூலப்பாளையம், கள்ளம்குறிச்சி கீழப்பாடி, காஞ்சிபுரம் தேரியம்பாக்கம், கரூர் வி.வி.ஜி.நகர், மதுரை ஆரப்பாளையம், மயிலாடுதுறை வடகரை, சேலம் தாத்தம்பட்டி, தூத்துக்குடி சிவஞானபுரம், திருவாரூர் கொரடாச்சேரி, நெல்லை உதயத்தூர், மேலப்பாளையம், வேலூர் காட்பாடி, கன்னியாகுமரி பெருவிளை உட்பட 50 இடங்களில் புதிய ஆஸ்பத்திரிகள் அமைய உள்ளது.
கடந்த 6 ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் எதுவும் புதிதாக தொடங்கப்படவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி அனுமதி பெற்று தந்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அரசின் கொள்கைப்படி ஓர் ஊராட்சி ஒன்றியத்தில் 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் 50 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும் அமைக்கப்படும்.
ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூபாய் 126 லட்சம் செலவில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூபாய் 63 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டப்படும். மேலும் இதற்கு தேவையான மனிதவளம், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆண்டிற்கு ரூபாய் 57 கோடி செலவில் வழங்கப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூபாய் 120 கோடியாகும்.
நடைமுறையில் ஏற்கனவே இயங்கி வரும் மற்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள் போல மருத்துவ பணியாளர்களை கொண்டு புதிய அரசு ஆரம்ப நிலையங்கள் செயல்படுத்தப்படும். விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.