தோள்சீலைப் போராட்டம்!

மனித குல வரலாற்றில் ஆடைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. குகைகளில் வாழ்ந்த மனிதர்கள்கூடி ஏதோ ஒரு முறையில் அவர்களுக்கு வாய்ப்பான வகையில் உடலைப் போர்த்தி வாழ்ந்திருக்கிறார்கள். ஆடை என்ற தமிழ்ச் சொல், இலை எனும் பொருள் கொண்ட 'அடை' என்ற சொல்லிலிருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது.

சமுதாயம் முன்னேற, முன்னேற ஆடை வடிவத்திலும் பெரும் மாற்றங்கள் உருவாயின. “ஆள் பாதி, ஆடை பாதி” எனும் சொலவடை, இந்த நூற்றாண்டிலும்கூட, ஆடையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.“குற்றவாளிகளை அவர்களின் உடையிலிருந்தே அறிந்து கொள்ளலாம்” என ஒரு நாட்டின் தலைமை அமைச்சரே கூறும் அளவுக்கு ஆடையின் முக்கியத்துவம் இருக்கிறது.அது மட்டுமல்ல, “ஜீன்ஸ் பேன்டு அணிந்து கொண்டு கீழ்ச்சாதி இளைஞர்கள் “நாடகக் காதல்” செய்து, உயர்சாதிப் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்கின்றனர்” என ஓர் அரசியல் கட்சித் தலைவரே கூறுகின்ற அளவுக்கு உடை என்பது சாதியோடு இணைத்துப் பார்க்கப்படுகிறது. அதுவும் “பெண்களின் உடைகள்தாம் பாலியல் குற்றங்களுக்குக் காரணம்” என்ற குற்றச்சாட்டு இந்த நூற்றாண்டிலும் எழுப்பப்படுவதைக் காண்கிறோம். எனவே, பெண்களின் உடை மீதான கண்காணிப்பு என்பது எப்பொழுதும் சாதியோடும், ஆணாதிக்கத்தோடும் பிரிக்க இயலாதபடி தொடர்ந்து வருகிறது.அதன் ஒரு வெளிப்பாடுதான் தங்களின் மார்பகத்தை மறைத்து நாகரிகமாக உடை உடுத்துவதற்கான “தோள் சீலைப் போராட்டம்.” 19 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் இருந்து இடைப்பகுதி வரை, ஏறக்குறைய 40 ஆண்டுகள் இதற்கான போராட்டம் நடைபெற்றது என்றால், சாதி மற்றும் ஆதிக்கத்தின் இறுக்கத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

கேரளத்தின் பெரும் பகுதியையும், இன்றைய கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது தான் இந்தியாவில் முன்பு இருந்த 550 சிற்றரசுகளில் ஒன்று திருவிதாங்கூர் பகுதி ஆகும். (சமசுதானம்) இப் பகுதியில் நம்பூதிரிப் பார்ப்பனர்கள்தாம் அனைத்து அதிகாரங்களையும் பெற்றவர்களாக இருந்தனர்.

“ஒரு நம்பூதிரி இருக்கும் இடத்திலிருந்து நாடார்கள் மற்றும் ஈழவர்கள் 36 அடி தொலைவிலும், புலையர்கள் 96 அடி தூரத்திலும், நாயரிடமிருந்து நாடர்கள் மற்றும் ஈழவர்கள் 12 அடி தூரத்திலும், புலையர்கள் 60 அடி தூரத்திலும் நிற்க வேண்டும்” எனும் அளவுக்குச் சாதிவெறி மேலோங்கி இருந்தது. அரசர் - நம்பூதிரிப் பார்ப்பனர் - நாயர் - வேளாளர் ஆகியோரைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் தீண்டப்படாதோர் என்றே கருதப்பட்டனர். அதனால் உயர்சாதி நம்பூதிரி - நாயர் - வேளாளர் தவிர பிற சாதியினர் குடை பிடிக்கக் கூடாது; செருப்பு அணியக் கூடாது; கிணறு, குளம், சாலை, சந்தை ஆகியவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆண்கள் யாரும் மீசை / தாடி வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி வைத்தால் அதற்குத் தனி வரி கட்ட வேண்டும் என்ற கொடிய நிலை நிலவியது. தீண்டாமை / காணாமை / நடவாமை / கல்லாமை போற்ற தடைகள் அடுக்கடுக்காக விதிக்கப்பட்டிருந்தன. அதனால்தான், “சாதிப் பைத்தியங்கள் வாழும் பைத்தியக்கார விடுதி, கேரளம்” என விவேகானந்தர் குறிப்பிட்டார்.

ஆண்களுக்கே இவ்வளவு கட்டுப்பாடு என்றால் பெண்களைப் பற்றிப் பேசவும் கூடுமோ? பெண்கள்மீது அனைத்துக் கட்டுப்பாடுகளும் திணிக்கப்பட்டன. உயர்சாதிப் பெண்கள் வீட்டை விட்டு அதிகம் வெளியே வரக்கூடாது. கோயில் போன்ற இடங்களுக்கு வரும் பொழுது முகத்தைப் பனைக்குடையால் மறைத்துக் கொண்டு வர வேண்டும். கணவன் மற்றும் நெருங்கிய உறவினர்களைத் தவிர யாரிடமும் பேசக்கூடாது. வெளியே செல்லும்பொழுது மேலாடை அணிந்து கொள்ளலாம். ஆனால் நம்பூதிரிப் பார்ப்பனர்கள் முன்னால் வரும்பொழுது, திறந்த மார்போடுதான் வர வேண்டும் என்பன போன்ற கடுமையான தடைகள் விதிக்கப்பட்டன.

உடைகள் அணிவதில் மிகக் கடுமையான விதிகளைக் கடைப்பிடிக்குமாறு பெண்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர். பார்ப்பனரல்லாத, கீழ் சாதிப் பெண்கள் தங்களின் மார்பகத்தை மறைக்குமாறு ஆடை எதுவும் அணியக் கூடாது எனவும், அப்படி ஆடை அணிந்தால் அதற்கு “முலை வரி” கட்ட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. முலை வரி கட்டினால், அப் பெண்கள் பார்ப்பனர் அல்லாதோர் முன்னிலையில் மேலாடை அணிந்து கொள்ளலாம். ஆனால் வரி கட்டி இருந்தாலும், நம்பூதிரிப் பார்ப்பனர்கள்முன் வரும்பொழுது திறந்த மார்போடுதான் வர வேண்டும் என்ற முறை நிலவி வந்தது. அதன் அடிப்படையில் இதுகுறித்து உயர்வு நவிற்சியாக நிறையப் புனைவுகள் வரலாற்றில் பதிவாகி உள்ளன.

அவற்றில் ஒன்று, கேரளத்தில் உள்ள சேர்தலா எனும் கிராமத்தில் நடைபெற்றதாக ஒரு நிகழ்வு சுட்டிக் காட்டப்படுகிறது. அந்தக் கிராமத்தில் நான்கேலி எனும் ஈழவப் பெண், மார்பகத்தை மறைத்து மேலாடை அணிந்ததால், அரசு அதிகாரிகள் அவரிடம் வரி கேட்டதாகவும், சுயமரியாதை மிக்க அந்த ஏழைப் பெண் தன் மார்பகங்களை வாளால் அறுத்து, வாழை இலையில் வைத்துக் கொடுத்துத் தன் எதிர்ப்பைத் தெரிவித்ததாகவும், அதிக இரத்தப் போக்கால் அவர் மரணம் அடைந்ததாகவும், அவர் இருந்த இடம் “முலைச்சி பறம்பு” என வழிபாட்டிடமாக மாறியது எனவும், தன் அன்பிற்குரிய மனைவி மாண்டது கண்டு அவளின் கணவன் சிறுகண்டன் தீயில் பாய்ந்து உயிர் துறந்தான் எனவும், செய்திகள் பதிவாகி உள்ளன. ஆனால் இவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்கு உரியதாக இருந்ததால், இச்செய்திகள் அரசு அங்கீகரித்த வரலாறாக ஏற்கப்படவில்லை என அறிய வருகிறோம்.

இருப்பினும், ஈழவர் சமூகப் பெண்களில் நூறு விழுக்காட்டினரும், முக்குவர் சமூகப் பெண்களில் பெரும்பாலானோரும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இடுப்புக்கு மேலும் மூட்டுக்குக் கீழும் உடை ஏதும் உடுத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டனர். பெண்கள் மேலாடை அணிவது மேல் சாதியினராகிய நாயர் சமுதாயத்தவரை அவமதிக்கும் செயலாகக் கருதப்பட்டது. எனவே ஈழவர் மற்றும் 18 கீழ்சாதிப் பெண்கள் மேலாடையின்றி திறந்த மார்பகத்தோடு இருந்துள்ளனர் என்பதற்கு நிழற்பட ஆதாரங்கள் உள்ளன.

ஆனால், நாடார் குலப் பெண்கள் தங்கள் மார்பை மறைத்துத் தோள் சீலை உடுத்தி வந்துள்ளனர் என்பதை 1846 ஆம் ஆண்டில் “ரெக்லண்டு” எனும் கிறித்துவப் பாதிரியார் எழுதிய கடிதம் மூலம் அறியலாம் - எனத் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் பதிப்பித்த, எஸ்.இராமச்சந்திரன் மற்றும் அ.கணேசன் ஆகியோர் எழுதிய, “தோள் சீலைக் கலகம் - தெரிந்த பொய்கள் / தெரியாத உண்மைகள்” எனும் நூல் குறிப்பிடுகிறது.

மேலும் சான்றோர் எனப்பட்டோரே “சாணார்” என அழைக்கப் படுகின்றனர் எனவும், முதன் முதலில் புராடெஸ்டெண்டு கோயில் கட்டுவதற்குச் சான்றோர் குலத்தவர் நிலம் அளித்தனர் எனவும், சான்றோர் குலத்து நாடன்மார் பலர், நில உடைமையாளர்களாகவும், ஆண்ட பரம்பரையினராகவும் இருந்துள்ளனர் எனவும், சாணார் குலப் பெண்டிர் திறந்த மார்போடு. இருக்கவில்லை எனவும், உயர்சாதி நாயர் சமுதாய மகளிர்போல தோள்சேலை அணியும் உரிமை மட்டுமே அவர்களுக்கு மறுக்கப்பட்டது எனவும் மேற்காண் நூலாசிரியர்கள் பதிவு செய்கின்றனர். இவர்களின் பல்வேறு கருத்துகளை மார்ஷல் நேசமணி மறுத்து, மாற்றுக் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார் என்பதும் கருத்தில் கொள்ளத் தக்கதாகும்.

“தோள் சீலை” என்பது ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே அணிவதற்கு உரிமை உடைய ஆடையாகும். பெண்களின் கச்சின் மீது அணியும். மேல்முண்டு என்பதையே தோள்சீலை எனக் குறிப்பிடுகின்றனர். அதைப் பிற சாதிப்பெண்கள் அணிவது, சாதிக் கட்டுமானத்தை மீறிய செயலாகக் கருதப்பட்டது. எனவேதான் 1819-ஆம் ஆண்டிலேயே மூலம் திருநாள் இராம வர்மா எனும் அரசர் கீழ்ச் சாதி மற்றும் நாடார் சமூகப் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என அறிவிக்கை செய்தார். இதை எதிர்த்துத் தோள் சீலைக் கலவரம் மூன்று கட்டங்களாக நடைபெற்றதாக வரலாறு பதிவு செய்கிறது.

1822 முதல் 1823 வரை முதல் கட்டமாகவும், 1827 முதல் 1829 வரை இரண்டாம் கட்டமாகவும், 1858 முதல் 1859 வரை மூன்றாம் கட்டமாகவும் இப் போராட்டங்கள் நடைபெற்று உள்ளன.

‘கிருத்துவ மதத்திற்கு மாறினால், பெண்கள் குப்பாயம் போன்ற நீண்ட மேலாடை அணிந்து கொள்ளலாம்’ என ஆங்கில அதிகாரி ஜான் மன்றோ காலத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன் காரணமாக ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த பெண்கள் தங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள பெருவாரியாகக் கிருத்துவ மதத்தில் சேர்ந்தனர்.

இதனால் எரிச்சலுற்ற நாயர் - வேளாளர் போன்ற உயர்சாதியினர் 1822 மார்ச் திங்களில் பெருங் கலவரத்தைத் தொடங்கினர். கொத்தனாவிளை என்ற பகுதியில் தொடங்கிய கலவரம் ஒவ்வோர் ஊராகப் பரவத் தொடங்கியது. கிருத்துவ நாடார் பெண்களின் ரவிக்கைகள் கிழிக்கப்பட்டு, மரங்களில் தொங்க விடப்பட்டன.

மீண்டும் 1829 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. சாணார் மற்றும் ஈழவர் சமூகத்துப் பெண்கள் நாயர் பெண்டிர் அணிவதைப் போன்று மார்பை மறைக்கும்படி துப்பட்டா (சால்வை) போன்ற உடையணிய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், அதே நேரத்தில் கிருத்துவ மதத்துக்கு மாறிய சாணார் பெண்டிர் அணிந்து வருகிற குப்பாயம் போன்ற உடையை, இந்து மதத்திலுள்ள சாணார் பெண்டிர் அணிவது அனுமதிக்கப் படுகிறது எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப் பட்டிருந்தது. இந்த ஆணையின் பொருள், தோளுக்கு மேல் துண்டு அணிவது போலச் சல்லாத் துணியோ அல்லது வேறு எவ்வகைத் துணியோ அணியக்கூடாது என்பதுதான்.

இந்தக் காலக்கட்டத்தில் குமரி மாவட்டத்தில் சாமித்தோப்பு எனும் இடத்தில் நாடார் சமுதாயத்தில் தோன்றிய ‘முடிசூடும் பெருமாள்’ எனவும், ‘முத்துக் குட்டி சுவாமிகள்’ எனவும் அழைக்கப்படும் வைகுண்டர் எனும் சமூகச் சீர்திருத்தவாதி (1809 - 1851) சாதி பேதமின்றி ஊர்ப் பொதுக் கிணறுகளில் குளிப்பதற்கும், சேர்ந்து உணவருந்தவும் ஏற்பாடு செய்தார். மேலும் சாணார் சமூகப் பெண்கள் எக்காரணம் கொண்டும் திறந்த மார்போடு இருக்கக் கூடாது எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இவரின் மார்க்கம், நாடார் சமூகத்தினரிடையே பெரும் தாக்கத்தை உருவாக்கியது என்பது குறிப்பிடத் தக்கது.

இருப்பினும், சந்தை போன்ற பொது இடங்களில் ரவிக்கை அணிந்து, அதன் மேல் மெல்லிய துணியும் அணிந்து வந்த கிருத்துவ நாடார் பெண்களின் ரவிக்கையைக் கிழித்தும் , தாலியை அறுத்தும், நாயர் சமூகத்தினர் அவமானப்படுத்தத் தொடங்கினர். அப்படித் தாலி அறுக்கப்பட்ட அகத்தீசுவரத்திற்கு அருகிலுள்ள சந்தை, “தாலியறுத்தான் சந்தை” என்றே வழங்கப்படுகிறது.

இருப்பினும், சந்தை போன்ற பொது இடங்களில் ரவிக்கை அணிந்து, அதன் மேல் மெல்லிய துணியும் அணிந்து வந்த கிருத்துவ நாடார் பெண்களின் ரவிக்கையைக் கிழித்தும் , தாலியை அறுத்தும், நாயர் சமூகத்தினர் அவமானப்படுத்தத் தொடங்கினர். அப்படித் தாலி அறுக்கப்பட்ட அகத்தீசுவரத்திற்கு அருகிலுள்ள சந்தை, “தாலியறுத்தான் சந்தை” என்றே வழங்கப்படுகிறது.

இதன் பிறகு 1857-ஆம் ஆண்டில் வட இந்தியாவில் நடைபெற்ற “சிப்பாய்க் கலகம்” காரணமாக, இந்தியாவின் ஆட்சி, ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவனத்திலிருந்து இலண்டனில் உள்ள விக்டோரியா பேரரசியிடம் சென்று சேர்ந்தது. சிப்பாய்க் கலகம், மத உணர்வுகள் தொடர்பாகவே வெடித்தது என்பதைப் புரிந்து கொண்ட ஆங்கிலேய அரசு இந்தியக் குடிமக்களின் மத உணர்வுகளிலும், வழிபாட்டு முறைகளிலும், பண்பாட்டு மரபுகளிலும் தலையிடாது என்ற உறுதிமொழியை விக்டோரியா பேரரசி மூலம் அறிவித்தது. இது நாடெங்கும் மக்களிடையே பரவலாக விளம்பரப் படுத்தப் பட்டது. இதனால் நாயர் - வேளாளர் சமூகத்தினர் ஊக்கம் பெற்றனர். பிரித்தானிய அரசியின் அறிவிப்புத் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக அவர்கள் கருதினர்.

1859 டிசம்பர் 30ஆம் நாள் நாகர்கோயில் அருகே கிருத்துவ நாடார் சமூகப் பெண்டிர் தாக்குதலுக்கு ஆளாகி அவமானப்படுத்தப் பட்டனர். நாயர் - வேளாளர்கள் கூட்டுச் சேர்ந்து வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். காவல்துறை ஆய்வாளரும், அரசு ஊழியரும் இணைந்து நெய்யாற்றங்கரை அருகில் கிருத்துவ நாடார் குலப் பெண்களின் ஜாக்கெட்டைக் கிழித்து அகற்றி, மரத்தில் தொங்க விட்டனர்.

ஊர் ஊராகக் கலவரம் பரவியது. இதற்கு முன்னர் நிகழ்ந்தது போலன்றி இந்து / கிருத்துவ நாடாரின மக்கள், மதம் கடந்து ஒரணியில் திரண்டு வந்து, நாயர் - வேளாளர் கூட்டணியினருக்குச் சரியான பதிலடி கொடுத்தனர். இதனால் நாயர் - வேளாளர் சமூகத்தினருக்கு அச்சம் ஏற்பட்டுப் பின் வாங்கினர்.

தோள்சீலைச் சிக்கலில் தொடக்க நிலையிலேயே நாடார் சமூகத்தின் உயர் அடுக்குகளில் இருந்தவர்கள் ஈடுபாடு காட்டியிருந்தால், வெற்றி அப்பொழுதே கிட்டியிருக்கும். ஆனால் அப்படி நடக்காமல் போனது பேரிழப்பானது. இப்பொழுது நாடார் உயர் அடுக்கு / கடை அடுக்குகளில் இருந்தவர்களும், இந்து / கிருத்துவ நாடார் மக்களும் ஒற்றுமையோடு போராடியதால், அவர்களுக்கு வெற்றி கிட்டியது கருதத் தக்கதாகும்.

26/07/ 1859 அன்று திருவிதாங்கூரைச் சார்ந்த உத்தரம் திருநாள் அரசர், சாணார் சமூகப் பெண்கள் தோள்சீலை அணிவதை ஏற்றுக் கொண்டு, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தோள்சீலை குறித்த சிக்கல் அத்துடன் முடிவடைந்தது.

1865- ஆம் ஆண்டில் ஈழவர் போன்ற பிற சாதியினரைச் சேர்ந்த பெண்டிரும் இத்தகைய உடை உடுத்தும் முறையைப் பின்பற்றலாம் என இறுதியாகத் திருவிதாங்கூர் அரசர் ஆயில்யம் திருநாள் அறிவித்தார்.

தோள்சீலைப் போராட்டம், வேளாளர் - நாயர் குலத்தவர்களுக்கும், நாடார் குல மக்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டம். இது உயர் சாதியினருக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, ஈழவர், புலையர் போன்ற ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த பெண்களின் மானங்காத்த போராட்டமும் ஆகும்.

எனவே தோள்சீலைப் போராட்டம், வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனைப் போராட்டம் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

- கண.குறிஞ்சி

பதிவு keetru இணையதளத்தில் ...


தோள் சீலை அணிவதற்காக பெண்கள் போராடி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூறும் விதமாக நாகர்கோவிலில் தோள் சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு நினைவுநாள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில் 

எங்களுடன் இணைந்து இருங்கள்

Facebook | Twitter | Play Store 

பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 

Download Now 


Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்