பஞ்சமி நிலம் என்றால் என்ன..?

பதிவு 1

இதுவரை எழுதப்பட்ட வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்றார் மாமேதை மார்க்சு.

அண்மையில் அசுரன் என்றொரு திரைப்படம் வந்திருந்தது. தலித் அரசியலைப் பேசிய அப்படத்தில் தலித் மக்கள் பிரச்சனைகளாக இரண்டு கருத்துகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. ஒன்று பஞ்சமி நிலம்; மற்றொன்று கல்வி.

இப்படத்தைப் பார்த்துவிட்டு அசுரன் படம் அல்ல; பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதியச் சமூகத்தைச் சாடும் சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் என்று தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து சொல்லியிருந்தார்.

அதற்கு அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவகத்திற்காக வழக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என நம்புவோம்! என பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாசு பதில் சொல்லியிருந்தார். பிறகு இரண்டு பேருக்குமிடையே வழக்கமான வாக்கரசியல் நடந்து கொண்டிருக்கிறது.

பஞ்சமி நில விவகாரத்தில் இவர்கள் யோக்கியர்களாகவே இருக்கட்டும். மற்றுள்ள அரசியல் தலைவர்களும், அரசு உயரதிகாரிகளும் தொழிலதிபர்களும் கூட யோக்கியர்களாகவே இருக்கட்டும். மகிழ்ச்சி !

மனுதர்ம அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பிரமிடு கூம்பு வடிவ சமூக அமைப்பில் உச்சத்தில் பிராமணர்களும் அடுத்தடுத்த நிலைகளில் சத்திரியர்களும், வைசியர்களும் என்று மேலிருந்து கீழாக வைக்கப்பட்டு, மேற்குறிப்பிட்ட வர்ணத்தாருக்கு அடிமை வேலை பார்க்க நான்காவது நிலையில் சூத்திரர்களும் வைக்கப் பட்டுள்ளனர்.

இந்த நான்கு வர்ணத்தாருக்கும் கீழே ஐந்தாவதாக வைக்கப்பட்ட ஒரு சமூகப் பிரிவினர்தான் பஞ்சமர் என்று சொல்லப்படுகிறது. புத்தரின் பஞ்சசீலக் கொள்கையைக் கடைபிடிப்பதினால் இவர்களுக்குப் பஞ்சமர் என்று பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

எப்படியாகினும் இந்து மத தர்மத்தால் வெளியில் வைக்கப் பட்ட மக்கள்தான் பஞ்சமர்கள் என்பது விளங்கிக் கொள்ள முடிகிறது.

இம்மக்கள் மீது மற்ற நான்கு வர்ணத்தாரால் தீண்டாமை திணிக்கப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்நிலை தொடர்கிறது. ஆளும் வர்க்கத்தினராலும், ஆதிக்க வர்க்கத்தினராலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட நிலையிலே இவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இம்மக்களுக்கு உடமை என்பது கேள்விக்குறிதான். அதுவும் நிலவுடைமையைப் பொருத்தவரையில் தீண்டப்படாத மக்கள் பன்னெடுங்காலமாக வஞ்சிக்கப்பட்டே வந்திருக்கின்றனர்.

பிரிட்டிஷார் இந்திய நிலப்பரப்பைக் கைப்பற்றியபோது வளம் நிறைந்த நீர்ப் பாசனமுள்ள விளைநிலங்களெல்லாம் ஒரு சில பார்ப்பன, வெள்ளாளப் பண்ணைகளிடம் குவிந்திருந்தன. அப்பண்ணைகள் தங்கள் நிலங்களைப் பயிரிடப் பண்ணையடிமைகளாகப் பெரும்பாலும் பஞ்சமர்களைத்தான் வைத்திருந்தனர்.

வளமான பகுதிகளான செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருநெல்வேலி, போன்ற இடங்களில் இதுதான் நிலை.

பஞ்சமி நில வரவாற்றை நாம் கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம்;

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த கே.ஹெச்.ஏ. திரமென்ஹீர் ஹெரே என்பவர் 1891ல் அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு 17 பகுதிகள் கொண்ட நீண்டதொரு அறிக்கை அனுப்புகிறார்.

பஞ்சமர்கள் (பறையர்கள்) மனிதர்களாக நடத்தப்படவும், சுயமரியாதையுடன் சுய முன்னேற்றம் காணவும், வாழ்க்கைத் தரம் மேம்படவும் அவர்கள் நிலவுடைமையாளர்களாக இருக்க வேண்டியது கட்டாயம் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு முன்னதாகவே பல்வேறு அறிக்கைகள், மாநாடுகள், பத்திரிக்கைகள் மூலம் பலர் கோரிக்கைகள் வைத்திருந்தனர்.

அதில் முதன்மையானவர்களாக திராவிட மகாஜனசபை நிறுவனரும், மற்றும் ஒரு பைசா தமிழன் பத்திரிக்கை ஆசிரியருமான அயோத்திதாச பண்டிதர், கிருஸ்து மிஷனரி சபையைச் சேர்ந்த ஆடம் ஆண்ட்ரூ, மற்றும் வெஸ்லியன் சபையைச் சார்ந்த வில்லியம் கௌடி ஆகிய மூவரையும் குறிப்பிடலாம். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான விவாதத்தைத் தொடங்கி வைத்தவர்கள் இவர்கள்தான்.

செங்கல்பட்டு மாவட்ட நிலையைத் திரமென்ஹீர் விளக்கியது என்னவெனில், 1844ல் அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின்பும் அடிமைகளாக இருந்து பறையர்கள் படியாட்கள் என்ற முறையில் மீண்டும் அடிமைகளாக்கப் படுகின்றனர். இவர்கள் தாங்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காகத் தங்களயும் தங்கள் வாரிசுகளயும் மொத்தமாக அடிமைகளாக்கிக் கொள்கின்றனர். அதிலிருந்து விடுபட இவர்களுக்கு ஒரே வழிதான் இருந்தது. அதாவது மற்றொரு எஜமானனிடமிருந்து கடன் வாங்கிக் கொடுத்துவிட்டு புது எஜமானனிடம் மனித அடமானமாகப் போவதுதான் அந்த வழி. வேறு வழியில் விடுபட முயன்றாலும் பறையர்கள் கிராமம் அல்லது தாலுகா நீதிமன்றத்தில் உடன்பாட்டை மீறினார்கள் என்று உடன்பாட்டு மீறல் சட்டத்தின் கீழ் எஜமானர்கள் வழக்குத் தொடுத்துத் தண்டணை வாங்கிக் கொடுக்கிறார்கள்.

மிராசுதார்களாகப் பிராமணர்களும், வெள்ளாளர்களும் மட்டுமே இருக்கிறார்கள். இவர்கள் நிலங்கள் அனைத்தும் வைத்திருக்கிறார்கள். ஆனால் விளிம்பு நிலையிலுள்ள பறையர்கள் எல்லோருமே நிலமற்ற அடிமைகளாக இருக்கிறார்கள். அப்படியே பறையர்கள் புறம்போக்கு நிலத்திற்கு அரசிடம் விண்ணப்பம் செய்தாலும் அந்த நிலம் மிராசுதாருக்கு வேண்டுமா அல்லது வேண்டாமா என்று அரசு கேட்கும். மிராசுதாரர்கள் வேண்டாம் என்று சொல்வதும் கிடையாது. அடுத்து பட்டாதாரரிடம் அந்த நிலம் வேண்டுமா என்று அரசு கேட்கும். அவரும் வேண்டாம் என்று சொன்னால்தான் அந்தப் புறம்போக்கு நிலம் பறையர்களுக்குக் கிடைக்கும். ஆனால் பறையர்கள் நிலம் வைத்திருக்க விரும்பி அரசைக் கேட்டால் கொடுக்க மாட்டார்கள் என்று எண்ணி புறம்போக்கு நிலத்தை எடுத்து அதை கஷ்டப்பட்டு பண்படுத்தி விளை நிலமாக்கினால் அதுவரை அமைதியாய் இருக்கும் மிராசுகள் கடைசியில் அந்த நிலத்தை அபகரித்து விடுகின்றனர் என்று தெளிவாக விளக்குகிறார்.

மேலும் அந்த அறிக்கையில் அவரது ஆலோசனைகளாக சில குறிப்புகளைப் பட்டியிலிடுகிறார். அதாவது, மாகாணத்தில் நில விண்ணப்பச் சட்டத்தின்படி பட்டாதாரருக்கு உள்ள உரிமையைக் கிராமத்திலுள்ள அனைவருக்கும் கிடைக்கும்படி மேற்படி சட்டத்தைத் திருத்த வேண்டும்.

சாகுபடிக்கேற்ற புறம்போக்கு விவசாய நில பகிர்மானத் திட்டம் கிராமத்திலுள்ள பறையர்களுக்கும் பயன்படும்படி சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும். 1875-க்கு முன்பு வரி பாக்கிக்காக மிராசுதார் மற்றும் பட்டாதாரர்களிடமிருந்து அரசு கைப்பற்றிய நிலத்தைப் பறையர்களுக்கும் பயன்படும்படி சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.

தேவையில்லாமல் வனத்துறையுடன் சேர்க்கப்பட்ட விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களிலும் மிராசுதார் இல்லாத கிராமங்களில் அதிகமாக விவசாயத்திற்குப் பயன்படும் நிலம் உள்ள இடங்களில் பறையர்கள் குடியிருப்பை அமைக்க வேண்டும்

இத்தகைய குடியிருப்புகளில் உள்ள பறையர்களுக்கு விவாசயத்திற்கேற்ற மற்ற நிலத்தை அரசு கொடுக்க வேண்டும்.

சென்னை மாகாண குத்தகைச் சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் பறையர்களும் மற்ற விவசாயிகளும் மிராசுதாரர்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

பறையர்களுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் சார்பாக இருக்கும்படி சட்டம் திருத்தப் பட வேண்டும்.

கூலி விவசாயிகள் அடிமை முறைகளி லிருந்து விடுபடும் விதத்தில் உடன்படிக்கை மீறல் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். கூலி உடன்படிக்கையை ஒரு ஆண்டிற்கு உட்பட்டதாக ஆக்கப்பட வேண்டும்

பறையர்கள் வாழும் வீட்டிற்குப் பட்டா உரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

பறையர்கள் அரசு உதவியுடன் மற்ற நாட்டிற்குக் குடிபெயரும் நிலமை உருவாக்கப்பட வேண்டும்.

கள்ளு, சாராயக் கடைகள் அதிகமாகப் பறையர்களுக்கென்று இருப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பறையர்களுக்குக் கல்வியை அனுமதித்து அரசு தெளிவாகவும் நேரடியாகவும் அவர்களின் கல்விக்கு வழிவகுப்பது அரசின் கடமையாகும்.

பறையர்களின் சுகாதரத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

பறையர்கள் வீடுகளை மற்றவர்கள் உரிமை கொண்டாடுவதிலிருந்து விடுவிப்பது.

பறையர்களின் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பது.

சிறிது நிலம், சொந்தமான குடிசை, எழுதப்படிக்கத் தெரிந்திருத்தல், தனது உழைப்பில் சுதந்தரம், தன்மானம் ஆகியவற்றை அவர்களுக்குக் கொடுத்தல் பறையர்களின் வாழ்வு இப்போதிருக்கும் மகிழ்ச்சியற்ற அடிமை நிலையிலிருந்து மாறுபட்டதாக இருக்கும் என 1891 அக்டோபர் 5-ஆம் தேதி அரசுக்கு எழுதுகிறோம்.

இந்த அறிக்கை வெறும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் அவர் நேரில் கண்ட பாதிப்பில் எழுதியது. ஆனால் இந்தியா முழுக்க இந்த நிலையை நாம் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்

திரமென்ஹீர் அனுப்பிய இந்த ஆய்வறிக்கை பிரிட்டிஷ் தலைமையகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 1891 ஆம் ஆண்டு அங்கே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

இது, 30.9.1892ல் இந்த ஆய்வறிக்கையே செங்கல்பட்டுப் பறையர் மக்களைப் பற்றி குறிப்புகள் வருவாய் அரசாணையாக வெளியிடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டப் பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள் என்ற அறிக்கையின் தொடர் நடவடிக்கையாகத்தான் பஞ்சமி நிலம் வழக்கப்பட்டது என்றாலும், நிலவுரிமை மீது ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த ஆர்வமும், தேவையும்தான் அப்படியொரு நிலை உருவாக்கிடப் பின்புலமாக அமைந்தது என்று சொல்லலாம்.

இச்சட்டத்தின்படி பஞ்சமி நிலம் என்ற டி.சி. நிலம் என்ற பெயரிலும் மட்டும் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டபோது பிரிட்டிஷ் அரசு சில நிபந்தனைகளின் அடிப்படைலேயே வழங்கியது.

முதல் பத்தாண்டுகளில் யாருக்கும் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ கூடாது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு வேறு பட்டி யலின மக்களுக்கு மட்டுமே விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ அல்லது தேவைக்குத் தரவோ செய்யலாம்.

நிபந்தனை மீறிச் செய்யப்படும் உரிமை மாற்றங்கள் சட்டப்படி செல்லாது என்ற விதிமுறைகள விதித்தது. (பார்வை: வருவாய்த் துறை நிலையான ஆணை 15.9 மற்றும் அரசாணை 2217 நாள் 01.10.1941.)

இத்தகைய குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் நிலம் வழங்கப்பட்டதாக இவை டி.சி மற்றும் ஆதி திராவிடர் நிலங்கள் என்று இன்றளவும் வருவாய்த் துறை பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 05.10.1891-இல் திரமென்ஹீர் அவர்கள் சைதாப்பேட்டை, கலெக்டர் அலுவலகத்தில் உட்கார்ந்து அவர் எழுதிய நீண்ட அறிக்கையில் கடைசியில் ஒரு கருத்தைப் பதிவு செய்கிறார். தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஓரளவு நிலமும், சொந்தமான குடிசையும், எழுதப் படிக்கத் தெரிவதும், தன் உழைப்பைத் தான் விரும்புவதுபோல் பயன்படுத்தும் உரிமையும் இருந்தால் அவர்கள் சுயமரியாதை உள்ளவர்களாகி, மரியாதை எனும் திசை நோக்கி அடி எடுத்து வைப்பார்கள். அப்படி ஒரு நிலை ஏற்படும்போது அவர்கள் பட்டுழலும் ஆழ்ந்த துயரம் எப்படி என்னை எழுதிட கட்டாயப்படுத்தியதோ, அந்த மகிழ்ச்சியற்ற இக்காலக் கொடுமையை விட மாறுபட்ட எதிர்காலத்தை நோக்கி அவர்களால் அடி எடுத்து வைக்க முடியும். என்று மேதை அப்பேத்கர் பிறந்த அதே ஆண்டிலேயே பிறந்த ஒரு வெள்ளைக்கார கலெக்டர் இப்படி எழுதிருப்பது நம்மை மிகவும் நெகிழ வைக்கிறது.

சுரண்டுவதற்காக வந்த பிரிட்டிஷார் மூலமாக நிலவுரிமை விடுதலை கிடைத்தது. அதை அவர்கள் பன்னெடுங்காலமாக ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்திற்குச் சட்டப்பூர்வமாக ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை செய்து விட்டே சென்றுள்ளனர். சுயராஜ்ஜியம் எங்கள் பிறப்புரிமை என்ற முழக்கத்தோடு வெள்ளையரிடமிருந்து விடுதலை வாங்கியதாக சொல்லப்படும் இவர்கள் ஆட்சியிலே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆங்கிலேய ஆட்சியில் கிடைத்த பஞ்சமி நிலத்தின் நிலை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்;

தமிழகத்தில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் 12 லட்சத்து 61 ஆயிரத்து 13 ஏக்கர் நிலம்.

இதில் மாவட்டம் வாரியாக பார்ப்போம்; (ஏக்கரில்)

கோயம்புத்தூர் 1,838.00

கடலூர்            118.26

தர்மபுரி            4,253.81

திண்டுக்கல்      3,402.43

காஞ்சிபுரம்      507.80

கரூர்    545.72

கிருஷ்ணகிரி    5,749.34

மதுரை 3,096.15

நாகை  8.38

நாமக்கல்         8,060.01

சேலம்  4,504.74

சிவகங்கை       21.88

தஞ்சாவூர்        322.88

நீலகிரி 3,774.46

தேனி   1,010.10

திருச்சி 3,420.77

நெல்லை          2473.88

திருவள்ளூர்     662.04

திருவண்ணமலை         33,034.99

திருவாரூர்       24.08

வேலூர்            20,339.44

விழுப்புரம்       16,446.44

மொத்தம்         1,26,113.60

ஆனால் தற்போது தமிழகத்தில் 1 இலட்சத்து 26 ஆயிரத்து 13.6 ஏக்கர் நிலம்தான் இருப்பதாக நில நிர்வாகத் துறை கூறுகிறது. மீதியுள்ள 10 இலட்சத்து 73 ஆயிரத்து 887 ஏக்கர் நிலத்தை விழுங்கியது யார்?

தலித் மக்களிடமிருந்து மெல்ல மெல்லப் பறிக்கப்பட்ட இவ்வளவு நிலங்களும் இப்போது யார் யார் கையில் இருக்கிறது? இதை ஒரு அரசங்கத்தால் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் தானே; ஏன் அதற்கு நடவடிக்கை எடுக்க முடியவில்லை? பஞ்சமி நிலத்தை இழந்த தலித் மக்களுக்குப் பதில் என்ன? போன்ற கேள்விகளை முன்வைத்து 1994-ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் காரணை என்னும் இடத்தில் பஞ்சமி நில மீட்பு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவ்வேளையில் தாமஸ், ஏழுமலை என்கிற இரண்டு போராட்டக்காரர்களின் உயிரைக் குடித்தது அன்றைய ஆளும் அதிகார வர்க்கம்.

10 இலட்சம் ஏக்கருக்கு மேலான நிலங்களைச் சுருட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதனை மீட்டு பஞ்சமி நிலத்துக்கு உரியவர்களிடம் ஒப்படைக்க முடியாத அரசு, உரிமைக்காகப் போராடும் ஏழை தலித் மக்களைச் சுட்டுக் கொல்லுகிறது என்றால், இது யாருக்கான அரசு என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது. அப்படியானல் பஞ்சமி நிலங்களை அபகரித்தவர்களைப் பாதுகாக்கிறது என்றுதானே அர்த்தம்.

தமிழ்நாட்டில் இருக்கும் மத நிறுவனங்கள், பெரும் வணிக நிறுவனங்கள், அரசியல் கட்சிகளின் சொத்துகள் எல்லாமே பஞ்சமி நிலங்கள் மீதுதான் நிற்கின்றன. அதன் உள் புகுந்து ஆய்வு செய்ய வேண்டிய அரசு அதைச் செய்யாமல், நியாயம் கேட்கும் அப்பாவித் தலித் மக்களின் உயிரைக் குடிக்கிறது.

அர்ச்சகன் பொறுக்கித் தின்ன கோவில்; அதிகாரி பொறுக்கித் தின்ன அரசாங்கம்; அயோக்கியன் பொறுக்கித் தின்ன அரசியல். என்றார் பெரியார். சுரண்டுவதற்கும் இரத்தத்தைக் குடிப்பதற்கும் பொறுக்கித் தின்னுவதற்கும் இவர்களுக்குப் பட்டியலின மக்கள் தான் கிடைத்தார்களா?

எங்களிடம் நிலமே இல்லை. ஏனெனில் மற்றவர்கள் எங்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டார்கள் என்று மேதை அம்பேத்கர் சொன்னதை ஆளும் வர்க்கமும், ஆதிகார வர்க்கமும் திரும்பத் திரும்ப நம்மிடம் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறது.

தனியுடமைச் சமூகத்தில் முதன்மையான உடைமையாகக் கருதப்படுவது நிலம்தான். ஒருவர் நிலம் வைத்திருக்கும் அளவைப் பொருத்தே சமூகத்தில் அவரது தகுதியும் அளவிடப்படுகிறது. பஞ்சமி நில மீட்பு, இடஒதுக்கீட்டு உரிமை போன்றவற்றின் மூலமாக மட்டுமே விடுதலை கிடைத்துவிடும் என ஒருபோதும் எண்ணி விடக்கூடாது. இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே கெட்டியாகப் பாதுகாக்கப்படும் மனுநீதியால் இந்திய மக்கள் அனைவரும் குறுக்கு நெடுக்காக பிரிக்கப்பட்டுத்தான் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்து மதச் சட்டப்படி சிதறடிக்கப்பட்ட மக்களாகிய பட்டியலின மக்கள் அடிமைகளுக்கும் அடிமைகளாகவே வைக்கப் பட்டிருக்கிறார்கள். வர்ண, சாதிகள் ஒழிக்கப்படும் போதுதான் பெருவாரியான சூத்திர மக்களுக்கே விடுதலை கிடைக்கும். இடைப்பட்ட காலத்தில் ஆதி சூத்திரர்களுக்கு விடுதலை என்பது வெற்று முழக்கம்தான். ஆனால், அதுவரை, உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழும் தலித் மக்கள் அமைதியாக இருக்க முடியாது. தேர்தல் நேரங்களில் வாக்குப் போடுவதற்காக மட்டும் இம்மக்களை இயந்திர மனிதர்களாக வைத்திருக்கும் இந்த அரசை எதிர்க்காமல் இருக்கக்கூடாது.

இடஒதுக்கீட்டு போராட்டம், பஞ்சமி நில மீட்பு போராட்டம் இவைகளெல்லாம் இழந்த உரிமைகளுக்கான உரிமைக் குரல் தானே தவிர; பிச்சைக்காரன் குரல் அல்ல!



                                     பதிவு 2


பஞ்சமி நிலம் தலித் சமூக மக்களை தவிர மற்ற வர்களுக்கு உரிமை மாற்றம் செய்ய இயலாத இடம்

1892ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராய் இருந்த ஜே. எச். ஏ. திரமென்கீர் (Tremenheere) என்ற ஆங்கிலேயரின் பரிந்துரையின் பேரில் ஆங்கிலேய அரசு தலித் மக்களுக்கென இலவசமாக ஒதுக்கிய 12 லட்சம் ஏக்கர் நிலமே பஞ்சமி நிலம்.

காலனிய நில வருவாய்த் துறைக் கொள்கையைச் சீர்திருத்தம் செய்வதற்குரிய பரிந்துரைகளையும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தலித்துகளின் நிலைமையை ஆராய்ந்து சென்னை மாகாணம் முழுவதுமிருந்த அவர்களுடைய நிலையை மேம்படுத்தும் ஆலோசனைகளையும் திரமென்கீர் வழங்கினார். தலித் மக்களின் இந்நிலங்களைப் பிறர் வாங்கவோ விற்கவோ முடியாது என்ற முன்யோசனைமிக்க விதியையும் உருவாக்கினார்.

ஆனால் 12 லட்சம் ஏக்கரில் தலித் மக்களிடம் இன்றைக்கு மிஞ்சியிருப்பவை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 13.6 ஏக்கர் நிலம் மட்டுமே. இந்நிலங்களுக்கென உருவாக்கப்பட்ட விதிமுறைகளைத் ‘தாண்டி’ 10 லட்சத்து 73 ஆயிரத்து 887 ஏக்கர் நிலம் தலித் அல்லாத பிறரிடம் சட்டத்திற்குப் புறம்பாக முடங்கிக்கிடக்கிறது.

பஞ்சமர் நிலங்கள் வருவாய்த் துறைப் பதிவேட்டின்படி தலித் மக்களின் பெயரில் உள்ளதா என்பதை அறிய மாதமொருமுறை பார்வையிட்டு மண்டல வட்டாட்சியருக்குக் கிராம நிர்வாக அலுவலர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை ஜமாபந்தி நடைபெறும் போது வருவாய்க் கோட்டாட்சியர் அல்லது துணை கலெக்டர் பதவியில் உள்ள அதிகாரிகள் வருவாய்த் துறை ஆவணங்களைப் பார்வையிட்டுக் கையெழுத்திட வேண்டும். இவை எதுவுமே நடைபெறுவதில்லை. 1892ஆம் ஆண்டு யூடிஆர் (Updating Registration Scheme - UDR) சர்வே நடைபெற்றிருக்கிறது. அதற்குப் பிறகு 1984ஆம் ஆண்டு யூடிஆர் நடைபெற்றுள்ளது. அதில் கண்டுபிடிக்கப்பட்ட குறைகள் சரிசெய்யப்படாதது மட்டுமல்ல, அதற்குப் பிறகு சர்வே நடைபெறவேயில்லை.
இது தொடர்பாக உண்மை அறிய முற்படுகிறபோதெல்லாம் நிலநிர்வாகத் துறை அளிக்கும் விவரங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அளிக்கும் அறிக்கைக்கும் பெரும் முரண்பாடு இருப்பது வழக்கமாக இருக்கிறது.

DLM எனப்படும் இயக்கம் அரசாங்கம் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தி அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் தொண்டு நிறுவனக் கட்டடங்களும் அடங்கும். சான்றுக்காக அவற்றில் சில:
மதுரை

1. வாடிப்பட்டி வட்டம் சோழ வந்தான் அருகேயுள்ள தென்கரை கிராமத்தில் சர்வே எண்: 365/4Cஇல் உள்ள பஞ்சமி நிலத்தில் அரசு ஆரம்பப் பள்ளிக்கூடக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

2. வாடிப்பட்டி வட்டம் நாச்சிக்குளம் கிராமத்தில் அரசினர் ஆதிதிராவிடர் மேனிலைப் பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

3. வாடிப்பட்டி வட்டம் அலங்கா நல்லூர் ஒன்றியம் பாலமேடு கிராமத்தில் சர்வே எண்: 189/2இல் உள்ள பஞ்சமி நிலத்தைத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் (NGO) ஒன்று ஆக்கிரமித்துக் கட்டடம் கட்டியுள்ளது.

திருவண்ணாமலை

1. தண்டராம்பட்டு வட்டம் மலமஞ்சனூர் கிராமத்தில் சர்வே எண்: 282/3A1இல் தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக ஆக்கிரமித்துச் சாலையும் பயணியர் நிழற்குடையும் அமைக்கப்பட்டுள்ளன.

2. தண்டராம்பட்டு வட்டம் மலமஞ்சனூர் கிராம சர்வே எண்: 282/4A1இல் உள்ள பஞ்சமி நிலம் தமிழக அரசின் பொதுச்சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத் துறை இயக்குனர் சென்னை-6 என்னும் பெயரில் பத்திரப் பதிவுசெய்யப்பட்டு “அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம்” கட்டப்பட்டுள்ளது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் மாநகராட்சி 27ஆவது வார்டின் எல்லைக்குட்பட்ட அணைமேடு பெத்திசெட்டிபுரம் சர்வே எண்: 749இல் “தமிழக அரசின் திருப்பூர் ஆடிட்டர் அசோசியேசன்” சார்பாக அடுக்குமாடிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

1. பெரம்பலூர் மாவட்டத்தில் பாண்டக்கப்பட்டி கிராமத்தில் பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுப் பொதுப்பணித் துறையின் மூலம் ஏரியாக மாற்றப்பட்டுள்ளது.

2. பெரம்பலூர் மாவட்டத்தில் வாலிகண்டபுரத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் (அறக்கட்டளை) ஒன்று பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டடம் கட்டியுள்ளது.

3. பெரம்பலூர் மாவட்டம், நாகமங்கலம் வருவாய்க் கோட்டம் ரெட்டிபாளையம் கிராமத்தில் இரண்டு சிமெண்ட் ஆலைகள் கட்டப்பட்டுள்ளன.

கரூர்

கரூர் மாவட்டம், தேவர் மலைப் பகுதியில் (புலியூர்) பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து ஒரு சிமெண்ட் ஆலை கட்டப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் கள்ளி மந்தயம் வாகரையில் சர்வே எண்: 227, 228 மற்றும் 229இல் சுமார் 25 ஏக்கர் பஞ்சமி நிலத்தில் “கிளாஸிக் போலோ” என்ற மில் கட்டப்பட்டுள்ளது.

தேனி

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தைச் சார்ந்த தேவதானப் பட்டி கிராமத்தில் உள்ள பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு “காவல் துறையின் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நிலையம்” கட்டப்பட்டுள்ளது.

இங்கே தலித் அரசியல் பேசும் பல இயக்கங்கள் கூட வாயை மூடிக் கொண்டு வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருக்கிறது .

பஞ்சமி நிலம் மீட்கப்படுமா அல்லது அவர்கள் ஓட்டு வங்கிகளாக மட்டுமே பார்க்கப்படுமா என்பதை காத்திருந்து பார்ப்போம்.

பஞ்சமி நிலம் மீட்பு என்பது..    ?

தொடரும்...

சில பதிவுகளில் இருந்து .......


மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில் 

எங்களுடன் இணைந்து இருங்கள்

Facebook | Twitter | Play Store 

பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 

Download Now 

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை