இன்று தனியார் பள்ளிக்கூடங்களில் ஏழை எளிய மாணவர்களைச் சேர்ப்பது எட்டா கனியாகவே பெரும்பாலோனோருக்கு இருக்கிறது. அதை மாற்றும் வகையில் 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் “கட்டாய கல்வி உரிமைச் சட்டம் எனப்படுகிற RTE கல்வித் திட்டம்”.
இந்தத் திட்டத்தின்படி உங்கள் குழந்தைகளை அருகில் இருக்கும் தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் சேர்க்கலாம். இந்தத் திட்டத்தின்படி அரசாங்கமே உங்கள் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தைத் தனியார் பள்ளிகளில் செலுத்திவிடும். இந்தத் திட்டத்தில் 2023-24 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பிக்கும் தேதியை அறிவித்திருக்கிறது.
அதன்படி மார்ச் 20 முதல் ஏப்ரல் 20 வரை வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆக இந்தத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது? யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்கலாம் ? விண்ணப்பிக்க என்னென்ன சான்றிதழ் வேண்டும் ? என்பதை விரிவாக இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
RTE எனச் சொல்லப்படும் கட்டாய ஆரம்பக் கல்வித் திட்டம், L.K.G முதல் 8-ம் வகுப்பு வரை கல்வியைக் கட்டாயமாக எல்லா குழந்தைகளுக்கும் உறுதி செய்யக்கூடிய ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலமாக மெட்ரிகுலேஷன் மற்றும் CBSE தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். உதாரணத்திற்கு 100 இடங்கள் அவர்கள் பள்ளியிலிருந்தால் 25 இடங்களை இவர்களுக்குக் கட்டாயமாக ஒதுக்க வேண்டும். அப்படி தேர்வு செய்யப்படுகிற மாணவர்களுக்கான கல்வித் தொகையை அரசே செலுத்திவிடும்.
யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்கலாம்? எத்தனை பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் ?
இந்த வருடத்தில் L.K.G மற்றும் 1ஆம் வகுப்பு சேரக்கூடிய குழந்தைகளை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பள்ளிக்கூடம் 1 கிலோமீட்டர் பரப்பளவில் சுற்றியுள்ள பள்ளிகூடமாக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 5 பள்ளிக்கூடங்கள் வரை இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களாக 3 பிரிவுகளாகப் பிரித்து இருக்கிறார்கள். அதன்படி
1. நலிவடைந்த பிரிவினர்
2. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்
3. வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினர்
இதில் நலிவடைந்த பிரிவினரில் விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்தைவிட அதிகமாக இருக்கக்கூடாது.
வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் அனைத்து மதத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களான BC, MBC, SC, ST ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவில் ஆதரவற்றோர் , மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க என்னென்ன சான்றிதழ் வேண்டும் ?
நலிவடைந்த பிரிவினருக்கு வருமான சான்றிதழ்
1. குழந்தையுடைய சாதி சான்றிதழ்
2. குழந்தையின் ஆதார் அட்டை
3. குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
4. ரேஷன் கார்டு
5. இருப்பிடச் சான்றிதழ்
சிறப்புப் பிரிவில் விண்ணப்பிக்கக் கூடியவர்கள் அந்தந்த துறையில் அதற்கான சான்றிதழை வாங்க வேண்டும். உதாரணத்திற்கு மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளி சான்றிதழை அந்தத் துறையினரிடம் வாங்க வேண்டும்.
எங்கே எப்படி விண்ணப்பிப்பது ?
இதற்கு விண்ணப்பிக்கக் கூடிய இணையதளம் https://rte.tnschools.gov.in/ வருகிற 20ஆம் தேதி திறக்கப்பட்டும். இணையதளம் திறக்கப்பட்டவுடன் எப்படி விண்ணப்பிப்பது என்பதை விரிவாக இன்னொரு பதிவில் பார்க்கலாம். சென்ற வருடம் தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட 1,15,628 இடங்களில் வெறும் 60 சதவிகிதம் தான் நிரப்பப்பட்டிருக்கிறது. இதற்கு இந்தத் திட்டம் பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடத்தில் போய்ச் சேராததும், குறிப்பிட்ட நேரத்தில் சான்றிதழைச் சேர்க்க முடியாததும் காரணமாகக் கூறப்படுகிறது. ஆக இம்முறை உங்கள் குழந்தைகளைத் தனியார்ப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விருப்பப்படுவோர் இத்திட்டத்திற்குத் தேவையான அனைத்தையும் இப்போதே தயார் செய்யத் தொடங்கவும்.
மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு 14417 என்னும் இலவச எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தகவலைப் பெற்றுக்கொள்ளலாம்.
மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில்
எங்களுடன் இணைந்து இருங்கள்
Facebook | Twitter | Play Store
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்