ரிசர்வ் வங்கி வரலாறும், அம்பேத்கர் ஆலோசனை ஏன் முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது நாம் இதை அறிவோமா?

இன்று முட்டாள்கள் தினம், அறிவிலிகள் தினம் என சமூக ஊடகங்களில் நண்பர்களைக் கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், இன்று நாம் பெருமை கொள்ள வேண்டிய ஒரு தினம்; இந்திய பொருளாதாரம் இன்று ஓரளவேனும் ஸ்திரமாக இருக்க காரணமான தினமும்கூட. ஆம், இன்றுதான் இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டது.

இந்திய ரூபாய் - பிரச்னைகள், தீர்வுகள்...

டாக்டர் அம்பேத்கர் `இந்திய ரூபாய் - பிரச்னைகள், தீர்வுகள்' என்ற புத்தகத்தை எழுதி இருந்தார். இந்தப் புத்தகம் பொருளாதாரம் குறித்த அரிய பல ஆலோசனைகளை முன்வைத்தது. இது அப்போது ஆண்ட ஆங்கிலேயர்களை ஆச்சர்யப்படுத்தியது. இந்தப் புத்தகத்தின் சாரத்தை அதில் இடம்பெற்று இருந்த பரிந்துரைகளை, இந்திய கரன்சி மற்றும் நிதிக்கான ராயல் குழுவுக்கு 1925-ல் டாக்டர் அம்பேத்கர் சமர்ப்பித்தார்.

இதனை ஆராய்ந்த அக்குழு ஆச்சர்யப்பட்டது. அவர் முன்வைத்த அத்தனை பரிந்துரைகளையும் முழுமையாக அந்தக் குழு ஏற்றுக்கொண்டது. இதை அடிப்படையாக வைத்து `ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934'-ஐ அது உருவாக்கியது.

ஏப்ரல் ஒன்றும் ரிசர்வ் வங்கியும்

இதையடுத்து 1935 ஏப்ரல் 1 அன்று ரிசர்வ் வங்கி தொடங்கப் பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1949-ம் ஆண்டு இந்த வங்கி நாட்டுடைமை ஆக்கப்பட்டது.

அம்பேத்கர் வரையறுத்த வரைமுறைகள், சட்டதிட்டங்கள் மற்றும் நிர்வாக அமைப்பின்படிதான் இந்திய ரிசர்வ் வங்கி அமைக்கப் பட்டிருக்கிறது.

முதலில், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கி, தற்போது மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது, ரிசர்வ் வங்கி.

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், மேலும் இரண்டு நாடுகளுக்கு மத்திய வங்கியாகச் செயல்பட்டிருக்கிறது.

சரி, அதைத் தெரிந்துகொள்வதற்கு முன், இந்திய ரிசர்வ் வங்கியை நிர்வகிப்பது யார் எனத் தெரிந்துகொள்வோம்.

ஒரு ஆளுநர், 4 துணை ஆளுந‌ர்கள், நிதி அமைச்சகப் பிரதிநிதிகள் இருவர், அரசால் நியமிக்கப்படும் இயக்குந‌ர்கள் 10 பேர் மற்றும் நான்கு மண்டலங்களின் மூலம் 4 பேர். ஆக மொத்தம் 21 இயக்குந‌ர்கள் கொண்ட மத்திய வாரியம்தான் ரிசர்வ் வங்கியை இயக்குகிறது. இயக்குந‌ர்களின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகள்.

இந்தியாவின் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஜி.டி.பி மற்றும் பணவீக்கத்தைக் கண்காணிப்பது, மக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச்செய்வது, வாடிக்கையாளர் களுக்கு பேங்கிங் ஓம்புட்ஸ்மேன் போன்ற சேவைகளை வழங்குவது எனப் பல முக்கியப் பணிகளைச் செய்துவருகிறது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, வங்கிக் கடன்களைக் கட்டுப்படுத்துவது, வங்கிகளின் வட்டி விகிதங்களை நிர்ணயிப்பது, இந்திய ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பைத் தீர்மானித்து, மத்திய அரசிடம் கொடுத்து ஒப்புதல் வாங்கிய பின் அச்சிடுவது, இந்தியாவில் எந்த ரூபாய் நோட்டு செல்லும், செல்லாது என்று தீர்மானிப்பது போன்ற நாட்டின் நிதி சம்பந்தப்பட்ட சிக்கலான சேவைகளைச் செய்துவருகிறது.

புதிய வங்கிகளுக்கு அனுமதி வழங்குவது, இந்தியாவில் ஒட்டுமொத்த கடன் அளவு மற்றும் அதற்கான வட்டி விகிதங்களை நிர்ணயிப்பது, கே.ஒய்.சி விவரங்களைச் சரிபார்ப்பது மற்றும் நெறிப்படுத்துவது, வெளிநாட்டு வர்த்தகங்கள், அந்நியச் செலாவணிகள் போன்றவற்றையும் கவனிக்கிறது.

இரண்டு நாடுகள், ஒரு வங்கி

1937-ல் பர்மா, தனிநாடு ஆன போதிலும், 1947 ஏப்ரல் வரை, நம்முடைய ரிசர்வ் வங்கிதான் அவர்களுக்கும் மத்திய வங்கியாக இருந்தது. இடையில் 1942 முதல் 1945 வரை மூன்று ஆண்டுகள் மட்டும் பர்மா, ஜப்பானின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அந்த சமயம் நீங்கலாக, 7 ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கிதான் அவர்களுக்கு மத்திய வங்கி.

1947 ஆகஸ்ட் 14-ல் உதயமான பாகிஸ்தானுக்கு 1948 ஜூன் மாதம் `பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி' உருவாகும் வரை, இந்திய ரிசர்வ் வங்கிதான் மத்திய வங்கியாக விளங்கியது.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை