மார்க்சிய சமூகவிஞ்ஞானம் கண்டறிந்த சமூக வளர்ச்சியின் முடிவுகள் மனிதகுல வரலாற்றில் தவிர்க்க முடியாத பரிணாமத்தின் கட்டங்களாகும். பரிணாமம் என்பது மனிதனை மட்டுமே வளர்த்தெடுக்கவில்லை அவனின் பொருள் சார்ந்த வாழ்வியல் சூழலையும் வளர்த்தே வந்திருக்கிறது. அதுவே ஒவ்வொரு சமூகங்களின் தொடக்கமும் முடிவும் ஆகும். இதை அறிவியலின் துணை கொண்டு கண்டறிந்து முதன்முதலில் உலகிற்கு அறிவித்தது மார்க்சியம் மட்டுமே. அதனால் தான் மார்க்சியத்தை சமூக விஞ்ஞானம் என்கின்றோம்.
உற்பத்தியின் அடிப்படையிலான இந்த சமூகங்களின் வளர்ச்சி போக்கை முப்பெரும் பிரிவுகளாக பிரித்து ஆய்வு செய்கிறது மார்க்சியம்.
1, வர்க்கங்கள் தோன்றாத சமூகம்
2, வர்க்கச் சமூகங்கள்
3, எதிர்காலத்தில் அமையவுள்ள வர்க்கமற்ற பொதுவுடைமை சமூகம்
1. முதலில் வர்க்கங்கள் தோன்றாத சமூகம் பற்றி பார்ப்போம்.
மனிதகுலத்தின் தொன்மையான சமூகமான வர்க்கங்கள் தோன்றாத சமூகத்தை அதாவது, தனிச்சொத்துடைமை தோன்றாத சமூகத்தை ஆதிப் பொதுவுடைமை சமூகம் அல்லது புராதன பொதுவுடைமைச் சமூகம் என்று அழைக்கிறோம். இக்காலக்கட்டத்தில் மனிதர்களுக்குள் வர்க்கப்பிரிவு தோன்றியிருக்கவில்லை. அதாவது, உழைப்பவர்கள், பிறர் உழைப்பைச் சுரண்டுபவர்கள் என்கின்ற பிரிவு தோன்றியிருக்கவில்லை. தாய் தலைமையில் காடு சார்ந்த இயற்கை பொருட்களைச் சேகரித்து வாழ்ந்தார்கள். வேட்டை, கால்நடை வளர்ப்பு, விவசாயம் ஆகியன கரு வடிவில் தோன்றியிருந்தன. பல லட்சம் ஆண்டுகளாக மனிதர்கள் இத்தகைய வர்க்கமற்ற புராதன பொதுவுடைமை சமூகத்திலேயே வாழ்ந்தார்கள்.
புராதனப் பொதுவுடைமை சமூகமானது காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிக படிநிலையின் அடிப்படையில் தோன்றியதாகும். தொடர்ந்து வேட்டை நாகரிகமாகவும் வளர்ச்சி அடைந்தது. இது தாய் தலைமை சமூகமாகத் திகழ்ந்தது.
கருத்துக்களையும், கருவிகளையும் உருவாக்கிக்கொண்டு சகமனிதர்களாகக் கூடி உழைத்து பங்கிட்டு வாழ்கின்ற உயிரினமாக மனித இனம் புராதனப் பொதுவுடைமை சமூகத்தில் வளர்ந்து வந்தது.
புராதனப் பொதுவுடைமை சமூக மனிதர்கள் காடுகளிலும் மலைக் குகைகளிலும் வாழ்ந்தார்கள்.
நார், கூடை, முறம், கட்டை, எலும்பு, கல் ஆகியவற்றை கருவிகளாகக் கையாண்டார்கள்.
ஈட்டி, வேல் ஆகியன புராதன மனிதர்களின் மேன்மையான ஆயுதங்களாகத் திகழ்ந்தன.
காய், கனி, கொட்டை, கிழங்கு, இலை போன்ற காட்டுப் பொருட்களைச் சேகரிப்பதை முதன்மையானத் தொழிலாளகக் கொண்டிருந்தார்கள்.
வேட்டைத் தொழிலில் ஈடுபட்டு படிப்படியாக வளர்ச்சியடைந்தார்கள்.
தேவைக்கு அதிகமானப் பொருட்களைச் சேகரிக்க முடியாத வாழ்க்கையைப் புராதன மனிதர்கள் வாழ்ந்தார்கள்.
கூட்டத்தின் மூத்த தாய் புராதன மனிதர்களுக்கு வழிநடத்தும் தலைவராகத் திகழ்ந்தார்.
புராதன மனித சமூகத்தில் இரு வேறு இனக்குழுக்கள் சந்திக்க நேர்ந்ததால் போர்கள் மூண்டன. எதிரி குழு முற்றிலும் அழியும் வரையிலோ அல்லது தப்பித்து ஓடும் வரையிலோ போர்கள் நிகழ்ந்தது. ஒரு பகுதியில் வாழ்ந்துவந்த ஒரு இனக்குழு உணவு பற்றாக்குறையின் காரணமாக இடம் பெயர்ந்து செல்லும் போது அந்த பகுதியில் வாழும் இனக்குழுவோடு போர்களில் ஈடுபடுவது தவிர்க்கமுடியாத செயலாகிப் போனது. இதில் வலிமைபெற்ற குழு எதிர் குழுவை முற்றிலும் அழித்தொழித்தது அல்லது அந்த குழுவை கைதிகளாக தன்னோடு வைத்துக்கொண்டது. அதேவேளை கைதிகளாக அதாவது அடிமைகளாக பிடிபட்ட மனித குழுவின் மூலமாக தங்கள் குழுவின் உணவுத் தேவைகளையும் இன்னும் பிற வேலைகளையும் நிறைவேற்றிக் கொண்டது. இதன்காரணமாக உற்பத்தி பெருகி
தேவைக்கு அதிகமான சொத்துக்கள் படிப்படியாக உருவாகத் தொடங்கின. இதன் விளைவாக இனக்குழுக்களுக்கு இடையே கலவர போர்களும், ஒரு இனக்குழு இன்னொரு இனக்குழுவை அடிமையாக்குதலும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடுமையான வேலைகளிலும் போர்களிலும் பெரும்பாலும் ஆண்களே ஈடுபடுவதால் தாய் தலைமையானது சிறிது சிறிதாக தேய்ந்து பாலுறவு உரிமையின் மாற்றமாக தந்தையதிகார தலைமை ஆரம்பமானது. இப்போது சமூகத்தில் ஆணிற்கும் பெண்ணிற்குமான வேலைகள் வரையறை செய்யப்படுகிறது. இதைத்தான் ஆசான் ஏங்கெல்ஸ் இப்படி குறிப்பிடுகிறார் "ஆணிற்கும் பெண்ணிற்குமான வேலை பிரிவினையே பெண்ணின் மீதான முதல் ஒடுக்குமுறை" என்று. அடிமையாக்கப்பட்ட இன குழுவும் அடிமைச் செய்த இனக்குழுவுமாக வளர்ச்சியுற்று ஆண்டான் அடிமைச் சமூகம் தோன்றுகிறது. இப்போது உழைப்பவர்கள் பிறர் உழைப்பைச் சுரண்டுபவர்கள் என மனிதர்களுக்குள் வர்க்கச் சமூகம் உருவாக ஆரம்பித்து விடுகிறது.
ஆண்டான் அடிமை சமூகமே வர்க்கச் சமூகத்தின் தொடக்கமாக அமைந்தது.
2. வர்க்கச் சமூகங்கள்
மனிதர்களுக்குள் வர்க்கம் தோன்றி சில ஆயிரம் ஆண்டுகளே ஆகின்றன. தாய் தலைமையின் காடுசார்ந்த பொருட் சேகரிப்புமுறை முதன்மையிழந்தது. ஆண்களின் அதிகபட்ச உழைப்பில் புதிய கருவிகளின் வளர்ச்சியுடன் வேட்டைதொழிலும் கால்நடை மந்தை வளர்ப்பு தொழிலும் வளர்ச்சியடைந்தன. தேவைக்கதிகமான பொருட்கள் சொத்துக்களாகப் பெருகின. தாயின் பாரபட்சமற்ற தலைமையினால் சொத்துக்கள் சமச்சீர்நிலையில் இருந்தது அது இப்போது மாறத் துவங்கியது. சொத்து உருவாக்கத்தில் ஆண்களின் அதிகப்பட்ச உழைப்பும், குழந்தை உருவாக்கத்தில் ஆண்களின் பங்கும் கண்டறியப்பட்டன. ஆண்களில் ஒருபகுதியினர் தாய்தலைமையை எதிர்க்கத் தொடங்கினர். தாய்தலைமையிடமிருந்து சொத்துக்களின் பராமரிப்பை ஆண்கள் பறித்தனர். சொத்தின் மீதான தலைமைப் பண்பு அதிகாரமாக உருமாறியது. சொத்ததிகாரம் தோன்றியதால் தந்தை என்ற புதிய உறவு தோன்றியது. உழைப்பவர் உழைக்காதவர் என்ற வர்க்கப் பிரிவு தோன்றியது. சொத்ததிகாரம் தந்தை அதிகாரமாகச் செயல்படத் தொடங்கியது. பாலினச் சமத்துவத்தை அழித்து பெண்களை வெறும் சொத்துக்களாக உருமாற்றினர். ஆணதிகாரம் வர்க்கச் சமூகத்தின் அடையாளமாக நிலைப்பெற்றது.
வர்க்கச் சமூகங்கள் நான்கு வகைப்படும். கீழ் வரும் நான்கு சமூகங்களும் வர்க்கச் சமூகங்களே.
1.ஆண்டான்களின் சுகங்களுக்காக அடிமைகள் துன்புறுகின்ற அடிமை உழைப்பு முறை அல்லது ஆண்டான் அடிமை சமூகம். இந்தச் சமூக அமைப்பிலிருந்து பொதுச்சொத்து முறை மாறி தனிச்சொத்துமுறை நிலைக்கத் தொடங்கியது.
2.நிலத்தின் எஜமானர்களுக்காகப் பண்ணை அடிமைகள் பாடுபடுகின்ற பண்ணை அடிமை உழைப்பு முறை அல்லது நிலவுடைமைச் சமூகம்.
3.முதலாளிகளின் இலாபங்களுக்காகத் தொழிலாளர்கள் துயருறுகின்ற கூலி அடிமை உழைப்பு முறை அல்லது முதலாளித்துவச் சமூகம்.
4.உழைக்கும் மக்களின் அதிகார ஒற்றுமையால் இதுவரை சொகுசாக அடுத்தவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்தவர்களின் அரசை வீழ்த்தி கைப்பற்றுவது தான் மக்கள் தலைமை சமூகம் அல்லது சோசலிச சமூகம் எனப்படுகிறது. தனிச்சொத்துடைமையைப் பாதுகாக்க உருவான அரசு இயந்திரத்தில் சொகுசாக வாழ்ந்தவர்களின் அதிகாரம் இந்தச் சமூக அமைப்பினால் உடைத்தெறியப்படுகிறது. மனிதத்தோல் போர்த்தியுள்ள மிருகங்களிடமிருந்து அரசு இயந்திரத்தை உழைக்கும் மக்கள் பறித்தெடுக்கிறார்கள். பொதுவுடைமை இலட்சியத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டு முளைத்த அதிகாரமே இவர்களைச் சாதிக்க வைக்கிறது. எதிர்காலத்தில் அமையவுள்ள வர்க்கமற்ற சமூகத்திற்கு பாதையமைப்பதே மக்கள் தலைமைச் சமூகத்தின் அதாவது சோசலிச சமூகத்தின் இலட்சியமாகும்.
வர்க்கச் சமூகத்தைப்பற்றி ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக பார்ப்போம்.
1. ஆண்டான் அடிமைச் சமூகம்
ஆண்டான் அடிமைச் சமூகமானது கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிக படிநிலையில் தோன்றிய சமூகமாகும்.
இந்த சமூகத்தில் வர்க்கங்கள் தோன்றிவிட்டன. அதாவது, மனித இனத்தில் உழைப்பவர்கள், உழைப்பைச் சுரண்டுபவர்கள் என்ற பிரிவுகள் தோன்றிவிட்டது.
வர்க்க சமூகத்தில் ஆண்கள் உயர்ந்தவர்கள் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற பாலினப் பாகுபாடும் தோன்றிவிட்டது.
ஆண்களின் அதிகபட்ச உழைப்பால் தேவைக்கு அதிகமான சொத்துக்கள் உருவாகின.
கர்பக் காலங்களிலும் இரத்தப் போக்கு காலங்களிலும் பெண்களின் உழைப்பு குறைவாக இருந்தது. .
சொத்துக்களைத் தாய் தலைமையிடமிருந்து ஆண்கள் பறித்தார்கள்.
தாய்தலைமையால் பராமரிக்கப்பட்ட பொதுச்சொத்துக்கள் ஆணின் தனிச்சொத்துக்களாக உருமாறின
தனிச்சொத்தின் மீது அதிகாரம் பெற்ற ஆண் தந்தை எனப் போற்றப்பட்டான்.
தந்தையதிகாரம் வர்க்கச் சமூகத்தின் அடையாளமாக நிலைபெறத் தொடங்கியது.
சொத்துக்கள் மீது அதிகார உரிமை கொண்ட ஆண்களே ஆண்டான்களாக மாறினார்கள்.
போர் கைதிகளும் சொத்துக்களை இழந்தவர்களும் அடிமைகளாக்கப்பட்டார்கள்.
ஆண்டான்களின் முதன்மை சொத்துக்களாக அடிமைகளே திகழ்ந்தார்கள்.
சொத்துக்கள் மீதான முழு உரிமைகளும் ஆண்டான் வர்க்கத்திடம் இருந்தது.
உழைக்கும் அடிமைகளும், வெண்கலம், செம்பு, பித்தளை போன்ற உலோகங்களும் வலிமையானக் கருவிகளாகத் திகழ்ந்தன.
வில், அம்பு, கோல் ஆகியன ஆண்டான் அடிமை சமூகத்தின் மேன்மையான ஆயுதங்கள் ஆகும்.
வலிமையான வேட்டையும் மந்தை வளர்ப்பும் முதன்மைத் தொழில்களாக அமைந்தன.
விவசாயம் சிறிய அளவில் வளர்ச்சி பெற்றிருந்தது.
நாடோடி நிலை கடந்து ஓரிடத்தில் தங்கி வாழும் பண்பாடு உருவாகி வளர்ந்தது.
எந்த உரிமைகளும் சுதந்திரமும் இல்லாதவர்களாக அடிமைகள் வாழ்ந்தார்கள்.
ஆண்டான்களுக்கு வேலை செய்யும் இயந்திரங்களைப்போல அடிமைகளைப் பயன்படுத்தினார்கள்.
அடிமைகளை ஒடுக்கி ஆண்டான்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இங்குதான் “அரசு” என்ற சமூக நிறுவனம் முதன்முதலாக உருவெடுத்தது. இந்த அரசு அனைத்து வர்க்கச் சமூகங்களுக்கும் அச்சாணியாகத் திகழத் தொடங்கியது.
அரசின் மீதான முழு அதிகாரமும் ஆண்டான்களிடம் இருந்தது.
ஆண்டான்களுக்கு இடையிலான அதிகாரப் போரும் ஆண்டான்களுக்கு எதிரான அடிமைகளின் போரும் நிகழ்ந்துகொண்டிருந்தன.
ஆண்டான்களின் அரசுகளைச் சிதைத்த அடிமைகளின் போர்கள் நிலப்பிரபுத்துவ சமூகம் அதாவது நிலவுடைமைச் சமூகம் உருவாக வழியமைத்தன.
2. நிலப்பிரபுத்துவ சமூகம்
நிலவுடைமைச் சமூகமானது விவசாய நாகரிகப் படிநிலையில் தோன்றிய சமூகமாகும்.
உற்பத்தி மீதான வணிக நாகரிகமாகவும் வளர்ச்சி அடைந்தது.
நிலங்களே முதன்மையானச் சொத்துக்களாகத் திகழ்ந்தன.
நிலத்தை ஆள்பவர்களே நிலபிரபுக்கள் ஆவர்.
நிலப்பிரபுக்களின் நிலங்களில் சிறிதளவு நில உரிமையுடன் அடிமைகளாக உழைத்து வாழ்பவர்களே பண்ணை அடிமைகள் ஆவர்.
முதன்மைக் கருவிகள் அனைத்தும் இரும்பு உலோகத்தால் உருப்பெற்றன.
இரும்பினாலான வாள், வேல், வில் ஆகியன மேன்மையான ஆயுதங்களாகத் திகழ்ந்தன.
விவசாயமே முதன்மைத் தொழிலாகும்.
நீர்விசை ஆலை, காற்றுவிசை ஆலை, நவீன குதிரை சேணம் ஆகியன தொழில்நுட்ப மேம்பாடாகத் திகழ்ந்தன.
பண்ணை அடிமைகள் ஓரளவு சுதந்திரத்துடன் வாழ்ந்தார்கள்.
அரசின் மீதான முழு அதிகாரமும் நில பிரபுக்களிடமே இருந்தது.
பண்ணை அடிமைகளை ஒடுக்கி நிலப்பிரபுக்களின் நலன்களைப் பாதுகாப்பதே அரசின் அதிகாரப் பணியாகத் திகழ்ந்தது.
ஓரிடத்தில் தங்கி வாழ்வது முதன்மையானப் பண்பாடாக உருப்பெற்றது. விவசாயத்தை முதன்மையாகக் கொண்டு கிளைத் தொழில்கள் வளர்ந்தன.
வெவ்வேறு நிலப்பிரதேசங்களில் உற்பத்தியாகும் பொருட்களைப் பரிமாற்றுகின்ற வர்க்கமாக வணிகர்கள் தோன்றினார்கள்.
நாணய பயன்பாடும் அடிமை வாணிகமும் வளர்ந்தன.
கடன், வட்டி முறைகள் தோன்றின.
சொத்துக்கள் மீதான அதிகார உறவு நிலப்பிரபுக்களிடமே இருந்தது.
நிலப்பிரபுத்துவ அரசர்களுக்கு இடையிலான அதிகாரப் போரும், நிலப்பிரபுக்களுக்கு எதிரான பண்ணை அடிமைகளின் போரும் நிகழ்ந்துகொண்டிருந்தன.
நிலப்பிரபுத்துவ அரசுகளைச் சிதைத்த பண்ணை அடிமைகளின் போர்கள் முதலாளித்துவ சமூகம் உருவாக வழியமைத்தன.
3. முதலாளித்துவ சமூகம்
முதலாளித்துவ சமூகமானது வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் படிநிலையில் தோன்றிய சமூகமாகும்.
நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூக உற்பத்தியை ஆதிக்கம் செய்தலாகவும் வளர்ச்சி அடைந்தது.
நிதி மூலதனப் பிரிவு என்பது தொழிற்சாலை, வங்கி, அரசு ஆகிய மூன்றும் இலாப வெறியுடன் ஒன்றிணைவது ஆகும்.
இயந்திரங்களும் தொழிற்சாலைகளுமே முதலாளித்துவ சமூகத்தின் முதன்மையானச் சொத்துக்கள்.
முதலாளியின் தொழிற்சாலைகளில் உழைப்பை விற்பவர்களே தொழிலாளர்கள்.
இலாப வெறியைக் கூர்மைப்படுத்துகின்ற நவீன விஞ்ஞானக் கருவிகளே முதன்மையானக் கருவிகளாகத் திகழ்கின்றன.
துப்பாக்கி, வெடிகுண்டு, அணுஆயுதம், செயற்கை நுண் கிருமிகள், மனித இயந்திரங்கள் ஆகியன மேன்மையான ஆயுதங்களாகத் திகழ்கின்றன.
நீராவி இயந்திரம், மின் இயந்திரம், மீப்பெரும் தகவல் மையம், செயற்கை நுண்ணறிவு கணினி, மனித இயந்திரம், அணுசக்தி ஆகியன தொழில் நுட்ப மேம்பாடாகத் திகழ்கின்றன.
தொழிற்சாலையில் பணி செய்தலே முதன்மையானத் தொழிலாகும்.
கூலி அடிமைகள் என்ற பாட்டாளி வர்க்கம் தோன்றுகிறார்கள்.
அரசின் மீதான முழு அதிகாரமும் முதலாளிகளிடம் இருக்கின்றது.
தொழிலாளிகளை ஒடுக்கி முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதே அரசின் அதிகாரப் பணியாகத் திகழ்கின்றது.
தனிமனித உரிமை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன நடைமுறைக்கு பொருத்தமற்ற வெற்று முழக்கங்களாகத் திகழ்கின்றன.
மனிதர்களின் வாழ்க்கை தொழிற்சாலைகளை மையமிட்டதாக அமைகின்றது.
அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் வளர்ச்சியடைகின்றன.
நடுத்தர வர்க்கங்கள், குட்டி முதலாளித்துவ வர்க்கங்கள் தோன்றுகின்றன.
வட்டித் தொழிலே வங்கி நிறுவனமாக உருவெடுக்கின்றது.
வணிகக் கடன்கள் வளர்ச்சியடைகின்றன.
சொத்துக்கள் மீதான அதிகார உறவு முதலாளித்துவ வர்க்கத்திடம் இருக்கின்றது.
முதலாளித்துவ வளர்ச்சியின் முதுமை பருவத்தில் அரசு, வங்கி, தொழில் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து ஏகாதிபத்தியமாக உருவெடுக்கின்றது.
சரியான பொதுவுடைமை கட்சியின் தலைமையில் தொழிலாளர்களை முதன்மைப்படுத்தி சோசலிச சமூகத்தைப் படைப்பதற்கான திட்டமிட்ட அறிவியல்பூர்வமான நடவடிக்கைகள் வளர்ச்சியடைகின்றன.
முதலாளித்துவ முதிர்ச்சிக்கும் சோசலிச முயற்சிகளுக்கும் இடையிலான உலகளாவிய போர்கள் நிகழ்கின்றன.
கருவிகள், ஆயுதங்கள் போன்ற உற்பத்தி சக்திகள் நவீனமடைதலில் பலவீனம் இருக்கும்வரை தேசிய இனவெறி, மதவெறி போன்ற பேரழிவு நடவடிக்கைகளைக் கையாள்வதன் வழியாக முதலாளித்துவம் உயிர் பிழைத்திருக்கும்.
முதலாளித்துவம் தனது உயிர் பிழைத்தல் நடவடிக்கைக்காக கையாள்கின்ற பேரழிவு நடவடிக்கைகளே பாசிசம் ஆகும்.
முசோலினியின் பாசிசம், ஹிட்லரின் நாசிசம், மோடியின் இந்துத்துவம் ஆகியன முதலாளித்துவம் கையாள்கின்ற பாசிச நடவடிக்கைகள் ஆகும்.
உற்பத்தி சக்தியின் வளர்ச்சியின் விளைவாக முதலாளித்துவத்தின் பாசிச நடவடிக்கைகள் முடக்கப்படும்.
முதலாளிகளுக்கு இடையிலான அதிகாரப் போர்களும், முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர்களின் போர்களும் நிகழ்கின்றன.
முதலாளித்துவ அரசுகளைச் சிதைக்கின்ற தொழிலாளர்களின் போர்கள் சோசலிச சமூகம் உருவாக வழியமைக்கும்.
4. சோசலிச சமூகம்
சோசலிச சமூகம் என்பது மக்கள் தலைமையின் கட்டுப்பாட்டில் சமூக உற்பத்தியைக் கட்டமைத்தல் படிநிலையில் தோன்றிய சமூகமாகும்.
சோசலிச சமூகத்தில் நிலங்கள், தொழிற்சாலைகள், முதலாளிகளுக்கு வரையறுக்கப்பட்ட தனிச்சொத்துக்கள் உட்பட அனைத்து வகையான உற்பத்தி சாதனங்களும் சோசலிச அரசுக்கு கட்டுப்பட்டதாக அமையும்.
அரசின் மீதான செல்வாக்கு பாட்டாளி வர்க்கத்துக்கே உண்டு.
சொத்துக்கள் மீதான அதிகார உறவு பாட்டாளி வர்க்கத்திடமே இருக்கும்.
சோசலிச சமூகம் முதலாளித்துவ மீட்சியிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கும், உலகளாவிய நிலையில் பொதுவுடைமை சமூகத்தை எட்டுவதற்கும் சோசலிச அரசு பொறுப்பேற்கும்.
உலகம் முழுதும் சோசலிச நாடுகளைக் கட்டமைக்க துணை செய்யும்.
முதலாளித்துவவாதிகள் மீது சர்வாதிகாரமும், பாட்டாளிவர்க்கம் சார்ந்த பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயகமும் நடைமுறையில் இருக்கும்.
முதலாளித்துவத்தை ஒடுக்கி பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதே சோசலிச அரசதிகாரத்தின் பணியாகத் திகழ்கின்றது.
சமூகப் பொருளுற்பத்தியை மேன்மைப்படுத்துகின்ற நவீன விஞ்ஞானக் கருவிகளே முதன்மையானக் கருவிகளாகத் திகழ்கின்றன.
மேன்படுகின்ற சமூகப் பொருளுற்பத்தியைத் தற்காக்கும் ஆற்றலுடைய ஆயுதங்களே மேன்மையான ஆயுதங்களாகத் திகழ்கின்றன.
சமூகப் பொருளுற்பத்திற்குத் தேவையான மிகை உற்பத்திக்குப் பங்காற்றுகின்ற அனைத்து தொழில்களும் முதன்மையானத் தொழில்களே.
சோசலிச சமூகத்தில் வாழும் மனிதர்களுக்கு திறமைக்கேற்ற வேலையும் தகுதிக்கேற்ற கூலியும் கிடைக்கும்.
அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் சமூகத் தேவையின் அடிப்படையில் விரிவடைகின்றன.
மனிதர்களின் ஆழ்மனம் முதல் கருத்துநிலைவரை பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை வீரியப்படுத்தும்.
இயற்கையின் நலன்களையும் சமூக மேன்மையையும் பொறுப்பேற்று பாதுகாக்கும்.
மனிதர்களின் தனித்துவமான வேற்றுமைகளுக்கு இடையிலான அனைத்துவிதமான கருத்தியல் ஏற்றத்தாழ்வுகளும் ஒழிக்கப்படும்.
பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான பாலினச் சமத்துவம் உறுதிசெய்யப்படும்.
உடல் உழைப்பாளர்களுக்கும் மூளை உழைப்பாளர்களுக்கும் இடையிலான உழைப்பின் சமத்துவம் உறுதிசெய்யப்படும்.
தாய்மொழிகளுக்கு இடையிலான சமத்துவம் உறுதி செய்யப்படும். அறிவியல் தத்துவத்தின் அடிப்படையில் வாழ்வதற்கான கல்விமுறை விரிவுபடுத்தப்படும்.
பொதுவுடைமை இலக்கை அடைவதற்கு ஏற்றவாறு, மனித உணர்வுகளில் சமூக மேன்மை விருப்பத்தை முதன்மைப்படுத்தி சுயநல விருப்பத்தைக் கீழ்மைப்படுத்துகின்ற உள்ளத்தியல் கட்டமைக்கப்படும்.
சோசலிச சமூக மனிதர்கள் உடலாலும் உள்ளத்தாலும் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான நடைமுறைகள் உறுதிசெய்யப்படும்.
குழந்தைகள் வளர்வதற்கும் எதிர்காலத்தில் உழைப்பதற்கும் தேவையான கடமைகளைச் சோசலிச அரசு பொறுப்பேற்று செயல்படுத்தும்.
உழைப்பில் ஈடுபட முடியாதவர்கள், முதியவர்களைப் பாதுகாத்து பராமரிக்கும் பொறுப்பை சோசலிச அரசே ஏற்கும்.
தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை பாதுகாக்கப்படும்.
சோசலிச நாடுகள் விரிவடைவதற்கும் ஏகாதிபத்தியம் நிலைபெறுவதற்கும் இடையிலான அதிகாரப் போர் நிகழும்.
சோசலிச அரசு உறுதிப்படுவதற்கும் முதலாளித்துவ அரசு மீட்சியடைவதற்கும் இடையிலான விடுதலை போர் நிகழும்.
உலக ஏகாதிபத்திய அரசுகளை வீழ்த்தும் சோசலிச நாடுகளின் போர்கள் பொதுவுடைமை சமூகம் உருவாக வழியமைக்கும்.
இதன் தொடர்ச்சியாக எதிர்கால பொதுவுடைமைச் சமூகம் எப்படி இருக்கும் என பார்ப்போம்.
எதிர்காலத்தில் அமையவுள்ள வர்க்கமற்றச் சமூகமான
பொதுவுடைமைச் சமூகத்தில்
புதிய சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப நவீன இயந்திரக் கருவிகள் மேன்மையடைந்திருக்கும்.
இரும்பு, செப்பு, பித்தளை, கல், எலும்பு, மரம், கட்டை, முறம், கூடை, நார் ஆகியன முதன்மையற்ற கருவிகளாக இருக்கும்.
சமூக உற்பத்தி முறையின் மேன்மையை தற்காப்பதற்கும் இயற்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உரிய மேன்மையான ஆயுதங்கள் இயல்பாகவே இருக்கும்.
உடைமை அதிகாரமின்றி உற்பத்தி சாதனங்கள் இயக்கப்படுதல் இயல்பாக இருக்கும்.
சமூகத் தேவையின் அடிப்படையில் திறமைக்கேற்ற வேலை இயல்பாக இருக்கும்.
சமூகத் தேவையின் அடிப்படையில் தேவைக்கேற்ற கூலி இயல்பாக இருக்கும்.
சொத்துடைமை பண்பற்ற வாழ்க்கை இயல்பாக இருக்கும்.
அரசு நிறுவனமற்ற சமூக வாழ்க்கை இயல்பாக இருக்கும்.
தொழில் நிறுவனங்களை மேன்மைப்படுத்தி வாழ்தல் இயல்பாக இருக்கும்.
வர்க்க உறவுகளின் அதிகாரமின்றி சமூக நிறுவனங்களின் தலைமையில் சமச்சீர் பண்புடன் சொத்துக்கள் இயல்பாக இருக்கும்.
அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் இயல்பாக இருக்கும்.
அறிவியல் தத்துவக் கண்ணோட்டத்துடன் வாழ்கின்ற பண்பு இயல்பாக இருக்கும்.
பாட்டாளி வர்க்க பண்புகள் மட்டுமே மனித இயல்பாக இருக்கும்.
மனித சமூக மேன்மைகள் இயற்கை சூழலின் அங்கமாக இயங்கும் நிலை இயல்பாக இருக்கும்.
வர்க்க முரண்களின் போர்களற்ற புதிய முரண்பாடுகளுடைய சமூகமாக இயங்கும் நிலை இயல்பாக இருக்கும்.
புதிய சமூகத்தின் தேவைகளுக்கேற்ப புதிய பண்பாடுகளுடன் வாழும் நிலை இயல்பாக இருக்கும்.
பழைய வர்க்கச் சமூகங்களின் சகிக்க முடியாத பண்புகளிலிருந்து விடுபட்டு, புதிய வர்க்கமற்றச் சமூகத்தின் மேன்மைமிக்க பண்புகளுடன் மனித வாழ்க்கை இயல்பாக இருக்கும்.
இந்த வர்க்கமற்ற பொதுவுடமைச் சமூகத்தின் அமைவிற்கு சமூகவிஞ்ஞானம் நல்கும் உத்திரவாதத்தை இக்குறிப்புகளுக்கு நல்க முடியும் என்று யாராலும் உறுதியளிக்க முடியாது.
இலாபவெறி பிடித்த முதலாளித்துவ உற்பத்தி என்பது ஒரு கொடூரமான மிருகம். தனியுடைமை சமூகத்தின் முதிர்ந்த பருவம். வயது முதிர்ந்த இந்தக் கிழட்டு மிருகம் மரணிக்கும்வரை உலகை கொல்லும். கொல்லப்படுவது மனிதகுலம் மட்டுமல்ல, உலக உயிர்களையும் இயற்கை வளங்களையும் சேர்த்து தான். அந்த மிருகத்தின் இலக்கு என்பது தனது அழிவினை உலகையே கொல்லும் பேரழிவாக உறுதிப்படுத்துவதாகும்.
இந்த மிருகத்திற்குச் சவாலாக இருப்பதும் உலகின் வாழ்வை காப்பாற்றும் ஆற்றல் பொதுவுடைமையை படைக்க முயல்கின்ற மார்க்சிய சமூகவிஞ்ஞானிகளுக்கு மட்டுமே இருக்கின்றது. ஏனெனில் இந்த மிருகத்தை கோடிக் கரங்களுடைய மக்கள் தேவதையைக் கொண்டு ஒரேயடியாக வீழ்த்தும் ஆற்றல் நேர்மையான பொதுவுடைமை கட்சிக்கு மட்டுமே உண்டு.
தனியுடைமை என்பது செயற்கையின் ஆக்கமாக மனிதகுலத்தை இயக்குகிறது. பொதுவுடைமை என்பது இயற்கையின் அங்கமாக மனிதகுலத்தை இயக்குகிறது. தனியுடைமைக்கும் பொதுவுடைமைக்கும் இடையிலான மனிதகுலத்தின் போர் ஒட்டுமொத்த உலகிற்கும் வாழ்வா? சாவா? பிரச்சனையாகும். தனியுடைமைக்கு உலகப் பெருமுதலாளிகளும், பொதுவுடைமைக்கு உலகின் மார்க்சிய சமூகவிஞ்ஞானிகளும் தலைமையேற்று போரிடுகிறார்கள். இந்தப் போரில் மார்க்சிய சமூகவிஞ்ஞானிகள் வென்றால் உலகும் இயற்கையின் அங்கமாக மனிதகுலமும் மேன்மையான வாழ்வை அடையும். தோற்றால் உலகம் முற்றிலும் அழிந்து வேறொரு இயக்க வடிவை எட்டும். இரண்டில் எந்த ஒன்றும் நிகழ வாய்ப்பிருக்கின்றது. எனினும் பொதுவுடைமை சமூகம் பற்றிய இத்தகைய முடிவுகள் மார்க்சிய சமூகவிஞ்ஞானிகளின் சிந்தனை வெளிச்சத்தில் தவிர்க்க முடியாதவை. ஆதிமனிதர்கள் வாழ்ந்த பொதுவுடைமைச் சமூகமே வர்க்கச் சமூகம் முளைப்பதற்குரிய விதையாக இருந்தது. எனவே இந்த விதை இயக்கவியலின் மூலமாக நான்காம் தன்மையை அடையும். அதாவது, பொதுவுடைமை சமூகமாக உயர்ந்த நிலையைச் சந்திப்பது உறுதி. எனவே மனிதகுலம் நீடித்தால் எதிர்காலத்தில் பொதுவுடைமை சமூகம் தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்தேறும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.