- ரேசன் கடை முகாம்களில் பெண்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் கூட்டமாக திரள்வதை தவிர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பெண்கள், தங்கள் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் தான் உரிமை தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும்.
சென்னை:
தி.மு.க. தேர்தல் அறிவிப்பு பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், வயல்வெளிகளில் வேளாண் பணிகளில் ஈடுபடும் தாய்மார்கள், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் பெண்கள், சிறிய கடைகள் மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களில் குறைந்த சம்பளத்துக்குப் பணிபுரியும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் அத்தகைய திட்டம் அமல்படுத்தப்படவில்லை. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடி திட்டமாக இந்த திட்டம் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த திட்டத்துக்கு "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்" என்ற பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி இந்த திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து உள்ளார். இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மாதம் ரூ.1000 உரிமைத் தொகை பெறும் பெண் பயனாளிகளை கண்டறிவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்து வெளியிடுகிறது. அதில் பெண்கள், தங்கள் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் தான் உரிமை தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக தனியாக வருமான சான்றிதழ் பெற தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பல்வேறு பொருளாதார தகுதிகளும் வரையறுத்து வெளியிடப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்காக நடப்பு நிதி ஆண்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர்கள் அதற்கான பணிகளை தொடங்கினார்கள். ஒவ்வொரு ரேசன் கடைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்களில் எத்தனை பயனாளிகள் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியானவர்கள் என்பதை ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
இதற்காக கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒவ்வொரு குடும்பத்தின் ரேசன் கார்டுகளை ஆய்வு செய்து தனி பட்டியல் தயாரிக்கின்றனர். அதன் மூலம் எளிதாக தகுதியான பயனாளிகளை கண்டுபிடிக்க முடியும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் கேட்டபோது அவர் கூறியது:-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனி எண்களுடன் விண்ணப்பம் தயாரித்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
விண்ணப்ப படிவங்கள் அச்சடித்து முடித்ததும் அவை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு அவர்கள் அந்த விண்ணப்ப படிவங்களை சரி பார்த்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் தனியாக பிரிப்பார்கள்.
பின்னர் அந்த விண்ணப்ப படிவங்களுக்கு வீடு வீடாக வழங்கப்படும். இதற்கான குழுக்கள் அமைக்கப்படும். பொதுவாக ஒவ்வொரு ரேசன் கடைக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 600 முதல் 1000 ரேசன் கார்டுகள் இருக்கும். அவை அனைத்துக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படுவது இருக்காது.
ஏனெனில் சிலர் ரேசன் கடைகளில் எந்த பொருளும் வேண்டாம் என்று எழுதி கொடுத்திருப்பார்கள். வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படாது. மற்ற கார்டுதாரர்களுக்கு வீடு தேடி சென்று விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்படும்.
அந்த விண்ணப்பத்தில் ரேசன் கார்டு எண்களும் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதோடு டோக்கன் ஒன்றும் வழங்கப்படும். அதில் எந்த தேதியில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து திருப்பி கொடுக்க வேண்டும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
ரேசன் கடை முகாம்களில் பெண்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் கூட்டமாக திரள்வதை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பெண்கள் ரேசன் கடைகளுக்கு கூட்டமாக வந்து விண்ணப்பங்களை கொடுக்க வேண்டியது இல்லை. குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து திருப்பி கொடுக்க வேண்டும்.
பெண்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யும் போதே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெறுவதற்கு தகுதி உள்ளதா? இல்லையா என்பதை தெரிந்து கொள்ள முடியும். எனவே விண்ணப் படிவங்கள் பெற்றதும் அதை குடும்ப தலைவர்கள் கவனமாக படித்து பார்த்து பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் பெறப்பட்டது அவை ஆய்வு செய்யப்படும். மாத உரிமைத் தொகை பெற எந்தெந்த விண்ணப்பதாரர்களுக்கு தகுதி இருக்கிறது என்பது அதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் விண்ணப்பத்தை மற்ற பெண் பயனாளிகள் பயன்படுத்த முடியாது. ஏனெனில் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஒரு எண் வழங்கப்படுகிறது. எனவே ஒரு விண்ணப்பத்தை ஜெராக்ஸ் எடுத்து அதை மற்றவர்கள் பயன்படுத்த இயலாது.
எந்தப் பொருளும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்திருப்பவர்களிடம் யாராவது உரிமைத் தொகை பெற விரும்பினால் அவர்களும் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். அந்த விண்ணப்பமும் ஆய்வு செய்யப்படும்.
இன்று ஒரு வாரத்திற்குள் இந்த நடைமுறைகள் தொடங்கப்படும். விண்ணப்பிக்க உரிய அவகாசம் இருப்பதால் யாரும் அவசரப்பட்டு ரேசன் கடைகளுக்கு கும்பலாக வர தேவையில்லை.
இவ்வாறு காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.
மாதம் ரூ.1000 உரிமைத் தொகை பெற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் குடும்ப தலைவர்களில் பலரும் இதற்கான தகுதி வரையறைக்குள் வர மாட்டார்கள். எனவே வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் பெண்கள் இந்த வாய்ப்பை மிக எளிதாக பெற முடியும்.
விண்ணப்பங்கள் கையில் கிடைத்ததும் அவற்றை சரியாக பூர்த்தி செய்து வழங்கும் பட்சத்தில் ரேசன் கடை ஊழியர்களுக்கும் கலெக்டர்கள் தலைமையிலான குழுவினருக்கும் உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி அரசே ஒவ்வொரு வீட்டுக்கும் விண்ணப்பம் அச்சடித்து கொடுப்பதால் இதில் இடைத்தரகர்களுக்கு வாய்ப்பே கிடையாது.
விண்ணப்பம் எழுதி தருகிறேன். அல்லது விண்ணப்பம் வாங்கி தருகிறேன் என்றெல்லாம் இடைத்தரகர்கள் புகுந்து அப்பாவி பெண்களை ஏமாற்றுவதற்கு இந்த திட்டத்தில் வாய்ப்பே இல்லை. இதன் மூலம் உண்மையான பயனாளிகள் பயன் பெறுவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது.
தொடக்கத்திலேயே சிறு சிறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதால் இந்த திட்டம் இந்தியாவின் மிக முக்கியமான முன்னோடி திட்டமாக மாற வழிவகை செய்யப்பட்டுள்ளது.