வீட்டை இடிக்காமல் 5 அடி உயா்த்தும் பணி: நாமக்கல்லில் புதிய முயற்சி

 
லாரி உரிமையாளர் ஒருவர் நவீன தொழில்நுட்ப உதவியுடன்தனது வீட்டை இடிக்காமல் அப்படியே 5 அடி உயர்த்தும் பணியை மேற்கொண்டுள்ளார். இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர்.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலை கொங்குநகர் 3ஆவது தெருவை சேர்ந்தவர் வீரமணி(50). லாரி உரிமையாளரான இவர் கடந்த 1985ஆம் ஆண்டு அங்கு வீடு கட்டினார். அதன்பின்னர் நகராட்சி சார்பில் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது சாலை சுமார் 5 அடி வரை உயர்த்தப்பட்டதால், இவரது வீடு உள்ள பகுதி பள்ளமானது.

இதனால் மழை காலங்களில் தண்ணீர் வீட்டிற்குள் புகுந்து மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டை இடிக்காமல், வாகனங்களுக்கு டயர் மாற்ற பயன்படுத்தப்படும் ஜாக்கிகளை பயன்படுத்தி, தேவையான உயரத்திற்கு தூக்கி வைக்கும் நவீன தொழில்நுட்பம் குறித்து கேள்விபட்ட அவர், இதற்காக ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை அணுகினார்.

இதைத்தொடர்ந்து அரியானா மாநிலத்தை சேர்ந்த 12 தொழிலாளர்கள் வீட்டின் உயரத்தை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் வீரமணி கூறியது: எனது வீடு 1,300 சதுர அடியில் கட்டப்பட்டது. தற்போது இதுபோன்ற வீட்டை புதிதாக கட்டுவதற்கு சுமார் ரூ.40 லட்சம் வரை செலவாகும். ஆனால் இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சுமார் ரூ.10 லட்சம் செலவில் வீட்டின் உயரத்தை 5 அடி உயர்த்தி வருகிறேன்.

இப்பணி முழுமையாக முடிவடைந்த பிறகு 2 தளங்கள் கூட கட்டிக்கொள்ள முடியும் என்றார். இப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வீட்டை பெயர்த்து, 300 ஜாக்கிகள் மூலம் தூக்கி வைத்துள்ளனர். இப்பணிகள் இன்னும் 15 நாட்களில் பணிகள் முடிவடையும் என தெரிவித்தனர். சுமார் 40 டன் எடை கொண்ட வீட்டை ஜாக்கிகள் மூலம் தூக்கி, 5 அடிக்கு உயர்த்தும் இப்பணியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

சென்னை போன்ற பெரிய நகரங்களில் இதுபோன்ற பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தாலும், நாமக்கல்லில் இதுபோன்ற தொழில்நுட்பத்தில் வீட்டின் உயரத்தை அதிகப்படுத்தும் பணி முதல் முறையாக இங்கு தான் நடைபெறுகிறது என தொழிலாளர்கள் தெரிவித்தனர்
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்