சிம்லா
இமாசல பிரதேச பாஜக அரசு சிம்லா நகரை சியாமளா என பெயர் மாற்றம் செய்ய ஆலோசித்து வருகிறது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே கோடைக்கால சுற்றுலாத்தலமாக விளங்கும் சிம்லா இமாசலப்பிரதேச மாநில தலைநகர் ஆகும். இந்த நகருக்கு பெயர் மாற்ற வேண்டும் என கடந்த பல வருடங்களாக விஸ்வ இந்து பரிஷத் கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் கடந்த 2016 ஆம் வருடம் அப்போதைய முதல்வர் வீர்பத்ர சிங் இந்த கோரிக்கையை மறுத்தார். சிம்லா என்பது உலகறிந்த சுற்றுலாத் தலம் என்பதால் அதன் பெயரை மாற்றுவது சரி இல்லை என அவர் தெரிவித்தார்.
அதற்கு விஸ்வ இந்து பரிஷத் மாநிலத் தலைவர் அமன் பூரி, “அடிமைத்தனம் என்பது உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக அல்லது கலாசார ரீதியாக இருக்கும். வெளிநாட்டினர் மாற்றிய பெயரை தொடர்வது மன ரீதியான அடிமைத்தனம். அதிலிருந்து மீள நகரின் பெயரை மாற்றுவது முதல் படியாகும்.
ஆங்கிலேயர் வெளியாகி பல வருடங்கள் ஆகியும் அவர்கள் வைத்த பெயரை நாமும் பின்பற்றுவது நாம் இன்னும் காலனி ஆதிக்கத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்வதாகும். ஆங்கிலேயர்களால் சியாமளா என்னும் பெயரை உச்சரிக்க முடியாததால் அதை சிம்லா என அழைத்தனர்.
அது மட்டுமின்றி ஒரு காலத்தில் பிரிட்டனின் கவர்னர் ஜெனரல்கள் தங்கி தற்போது ஓட்டலாக மாற்றப்பட்டுள்ள ஹோட்டல் பீட்டர் ஹாஃப் என்னும் பெயரை ராமாயணத்தை எழுதிய வால்மீகி பெயராக மாற்ற வேண்டும். அத்துடன் டல்ஹவுசி மாளிகையின் பெயரை சுபாஷ் சந்திர போஸ் மாளிகையாக மாற்ற வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
தற்போதைய இமாசல பிரதேச பாஜக முதல்வர் ஜெயராம் தாகுர் தசரா விழா கொண்டாட்டத்தில், “ஆங்கிலேயர்கள் வரும் முன்பு சிம்லா நகரத்தின் பெயர் சியாமளா என இருந்தது. மக்களின் விருப்பத்துக்கு இணங்க அந்த பெயரை மீண்டும் வைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்க எண்ணி உள்ளோம். “ என தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மாநில செயலர் நரேஷ் சௌகான், “இது போல பெயர் மாற்றுவது கேலிக்குரியதாகும். நகரின் பெயரை மாற்றுவதை விட நகரின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். அதுவே மக்களுக்கு நன்மை பயக்கும்