ரஜினி - ஷங்கரின் ‘2.0’ - திரை விமரிசனம்

அச்சுப் பிசகாமல் ஷங்கரின் பாணியில் உருவாகியிருக்கும் திரைப்படம். ஓர் ஆதாரமான சமூகப் பிரச்னை. அதையொட்டி நிகழும் சில தீமைகள், அதற்கொரு பின்னணி, இறுதியில் நிகழும் போரில் தீமை அழிக்கப்படுவதால் ஏற்படும் சுபம். அசுரனுக்கும் அவதாரத்திற்கும் நிகழும் புராணக் கதையாடலையொட்டி நவீன நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் திரைக்கதை இது.
இந்திய சினிமா அதன் வணிகத்திலும் தொழில்நுட்பத்திலும் கதைசொல்லல் முறையிலும் ஒரு புதிய திசையை நோக்கி நகர்கிறது என்பதற்கான துவக்க அடையாளமாக 2.0 படத்தைச் சொல்லலாம். ஹாலிவுட்டில் அனிமேஷன் திரைப்படங்களுக்கும் சூப்பர் ஹீரோக்களுக்கும் தனி ரசிகர் வட்டமே உண்டு. அந்தப் போக்கை இந்திய சினிமாவில் உருவாக்க முயற்சிக்கத் துவங்கியிருக்கும் திரைப்படமாக இதைச் சுட்ட முடியும். தமிழில் உருவான ஒரு திரைப்படம் இதன் துவக்கப் புள்ளியாக இருப்பதில் நாம் பெருமையும் கொள்ளலாம்.
இந்தியாவில் இதுவரை உருவான திரைப்படங்களின் உச்சக்கட்ட நுட்பச் சாதனை என்று இந்த திரைப்படத்தைச் சொல்ல முடியும். தமிழ் என்றல்ல, இதர மொழிகளில் உருவாகும் அறிபுனைவு திரைப்படங்கள் என்றால், டூயட், சண்டை, காமெடி, சென்ட்டிமென்ட் என்று இந்தியச் சினிமாவின் சில அடிப்படையான அம்சங்களை கைவிட மாட்டார்கள். இந்தப் பாணியில் அமைந்த திரைப்படங்கள் அறிபுனைவு வகைத் திரைப்படமாகவும் இல்லாமல் சராசரித் திரைப்படமாகவும் இல்லாமல் இரண்டும் கெட்ட கலவையில் அசட்டுத்தனமாக இருக்கும். ஆனால் துவக்க காட்சி முதல் மையத்திலிருந்து எங்கும் விலகாமல் நேர்மையாகப் பயணிக்கும் நேர்மைக்காகவே 2.0-ஐ பாராட்டலாம்.
காட்சிகளை முப்பரிமாணத் தோற்றத்தில் நேரடியாகப் பதிவு செய்த முதல் இந்தியத் திரைப்படம்  என்று சொல்லப்படுகிறது. இந்த நோக்கில் இதில் வரும் சில காட்சிகளின் அருகாமைத் தோற்றங்கள் பிரமிக்க வைக்கின்றன. குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களையும் இது குதூகலத்தில் ஆழ்த்தும்.
**
செல்போன் டவரில் ஏறி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் காட்சியோடு படம் துவங்குகிறது. நகரத்து மனிதர்கள் உபயோகிக்கும் செல்போன்கள் திடீரென்று வானத்தை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து செல்போன் நிறுவனத்தின் உரிமையாளர், வியாபாரி, அரசியல்வாதி ஆகியோர் விநோதமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அவர்களைக் கொல்வது மனிதர் அல்லர், திரளாகப் பெருகி வரும் கைப்பேசிகளே.
அயல்கிரகத்தினர் செய்யும் நாசவேலையாக இருக்கலாமோ என்று முதலில் சந்தேகிக்கிறார்கள். இதைப் பற்றி ஆராய்கிறார் டாக்டர் வசீகரன். பூமியில் உள்ள ஒரு பிரம்மாண்ட சக்திதான் இதைச் செயல்படுத்துகிறது என்பதைக் கண்டுபிடிக்கிறார். அதை எதிர்கொள்ள ரோபாவான சிட்டியை உயிர்ப்பிக்க வேண்டும் என்று அரசிற்கு வேண்டுகோள் வைக்கிறார். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் நிலைமையின் விபரீதங்கள் மேலும் தொடரவே அனுமதியளிக்கப்படுகிறது.
டாக்டர் வசீகரனின் வழிகாட்டுதல் மூலம் சிட்டிக்கும் அந்த விநோதமான பறவை சக்திக்கும் இடையே நிகழும் போராட்டங்கள்தான் 2.0
டாக்டர் வசீகரன், ரோபோ சிட்டி, ரெட் சிப் ரோபோ ஆகியவற்றைத் தொடர்ந்து இன்னொரு ‘குட்டி’ ஆச்சரியமும் ரஜினிகாந்த்தின் வடிவத்தில் வருகிறது. பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் பிடித்த ஆச்சரியமாக அது இருக்கும். வசீகரனை விடவும் சிட்டியே பார்வையாளர்களை அதிகம் வசீகரிக்கிறான் என்பது அரங்கத்தில் இருந்து வரும் ஆரவாரமான எதிர்வினையில் இருந்து தெரிகிறது. பழைய நண்பனை நீண்டநாள் கழித்துப் பார்க்கும் சந்தோஷத்தைப் பார்வையாளர்கள் பிரதிபலிக்கிறார்கள். சிட்டியின் சாகசங்களோடு ரெட்சிப் சிட்டி, 3.0 ஆகியவற்றின் சாகசங்களும் இதில் இணைகின்றன.
இதன் கூடவே நிலா என்கிற க்யூட்டான ரோபோவின் (எமி ஜாக்சன்) டைமிங்கான நகைச்சுவை வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. அரசாங்கத்திற்குத் தெரியாமல் சிட்டியை திருடும் நோக்கத்தில் அதை ஹேக் செய்ய வசீகரன் உத்தரவிட முதலில் மறுக்கும் நிலா, பிறகு ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை’ என்று சினிமா வசனத்தை மேற்கோள் காட்டுவது ரகளை. சிட்டியின் காலை உடைத்தெடுக்கும் வில்லன் ‘your call is disconnected” என்பது போன்ற சிலேடை வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. (வசனம்: ஜெயமோகன், உதவி: மதன் கார்க்கி).
பறவைகளின் ராஜாவாகக் கருதப்படும் கழுகை வில்லனின் குறியீடாக வைத்திருப்பது, பக்ஷிராஜன் என்கிற பாத்திரப் பெயர், பறவையியல் நிபுணர் சலீம் அலியை நினைவுப்படுத்தும் அக்‌ஷய் குமாரின் தோற்றம், ஐதீகப் பின்னணி கொண்ட திருக்கழுக்குன்றத்தில் நிகழும் சம்பவங்கள் என்பன போன்று படத்தின் மையத்தோடு தொடர்புடைய பல நுண்விவரங்கள் திறமையாகத் திட்டமிடப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டிருக்கின்றன. அறிவியல் விஷயங்களின் அடர்த்தி குறையாமலும் அதே சமயத்தில் சராசரி பார்வையாளருக்கும் புரியும் வகையில் எளிமையாக விளக்குவதிலும் இயக்குநருக்குள்ள கவனம் பாராட்ட வைக்கிறது. திரைக்கதையின் வேகத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் பாடல்களைப் பொருத்தியிருப்பதற்குப் பாராட்டு.
இந்திய சினிமாவின் சம்பிரதாயமான விஷயங்கள் இல்லாமல் ஹாலிவுட் பாணியைப் போல் நகரும் இந்தத் திரைப்படம் எந்தவொரு இடத்திலும் சலிப்பூட்டாமல் நகர்வதால் சுவாரசியமாக ஒன்ற முடிகிறது. செல்போன் டவர்களிலிருந்து பாயும் கதிர்வீச்சுகளால் சிட்டுக்குருவி என்கிற பறவையினம் பெரும்பாலும் அழிந்து விட்டது என்கிற ஒற்றை வரித் தகவலை வைத்துக் கொண்டு இந்தப் பிரம்மாண்டமான படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். குறிப்பிட்ட தகவல் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதும் இடையில் சொல்லப்படுகிறது.
பூமிப்பந்து என்பது மனித குலத்திற்காக மட்டுமல்லாது இதர உயிரினங்கள் வாழ்வதற்கும்தான் என்பதும் மனிதனின் செளகரியங்களுக்காகப் பெருகும் நுட்பங்களும் அதன் மூலம் உருவாகும் சுற்றுச்சூழல் கேடுகளும் உயிர் சுழற்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயம் மிக வலுவாக சொல்லப்படுகிறது. இங்கு செல்போன் என்பது ஒரு குறியீடு மட்டுமே.
அக்‌ஷய் குமாரின் பின்னணி தொடர்பான காட்சிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் பின்னணி தெரிந்த பிறகு அந்தப் பாத்திரத்தின் மீது அனுதாபம் கூடுகிறது. அது அழிக்கப்படுவதில் பார்வையாளனின் மனம் ஒன்றிணைய மறுக்கும் முரணை இயக்குநர் கவனித்திருக்கலாம். அக்‌ஷய் குமாருக்குப் பறவைகளின் மீதுள்ள பிரியத்தை வைத்துக்கொண்டே மடக்குவதும் நெருடலாக உள்ளது. மனிதர்களுக்கு உள்ள ஒளிவட்டம் பறவைகளின் ஒளிவட்டத்தோடு இணைவது வில்லனின் பின்னணிக்கு காரணமாகச் சொன்னாலும், செல்போன்கள் எவ்வாறு ஈர்க்கப்படுகின்றன என்பது உள்ளிட்டு எழும் பல கேள்விகளினால் நம்பகத்தன்மை சிதைகிறது.
செல்போன் உற்பத்தியை பின்னணியாகக் கொண்ட தயாரிப்பு நிறுவனம், இப்படியொரு கருப்பொருளைக் கொண்ட திரைப்படத்தை உருவாக்கியிருப்பது சுவாரசியமான நகைமுரண். காட்சிகளின் விறுவிறுப்பிற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை உதவியிருக்கிறது. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, ரோபோக்களின் அரங்கம் உள்ளிட்ட பல விஷயங்களைச் சாதித்திருக்கும் கலை இயக்குநர் குழு, கோர்வையாகவும் விறுவிறுப்பாகவும் படத்தை எடிட் செய்திருக்கும் ஆண்டனி என்று இந்தத் திரைப்படத்தின் தொழில்நுட்பக் கூட்டணி ஒரு புதிய உயரத்தை தொட்டிருக்கிறது. குறிப்பாக விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட மாய்மாலங்கள் இந்திய சினிமாவிற்கு நுட்பங்களின் புதிய வாசல்களைத் திறக்கின்றன.
குழந்தைகள், பெரியவர்கள் என்கிற வித்தியாசமில்லாமல் அனைவரும் கண்டுகளிக்கக்கூடிய ஒரு ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படம் 2.0.
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்