1 மணி நேரத்துக்கு 5 லட்சம் டவுன்லோட்கள் பெறும் ShareChat

இந்தியா – சீனா எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சீன நிறுவனங்களுக்குச் சொந்தமான 59 செயலிகளை இந்தியாவில் தடைசெய்ய இந்திய அரசாங்கம் உத்தரவிட்டது. இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாகவும் ஊறுவிளைவிப்பதாகவும் இருக்கும் என்பதால் இந்தச் செயலிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய சமூக ஊடக தளமான ‘ShareChat' அதிவேகமாக வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. இந்தத் தளம் ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் என்கிற அளவில் பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சி குறித்து ஷேர்சாட் நிறுவனத்தின் சிஓஓ மற்றும் இணை நிறுவனர் ஃபரித் ஆசன் கூறும்போது,

சீன செயலிகள் தடை செய்யப்பட்டதற்கு ஆதரவாக ஏற்கெனவே இந்தத் தளத்தில் ஒரு லட்சம் பதிவுகள் இடப்பட்டுள்ளன. இந்தப் பதிவுகளுக்கு பத்து லட்சம் பயனர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். வாட்ஸ் அப்’பில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமாக பகிரப்பட்டுள்ளன. இதனிடையே My Gov India ஷேர்சாட் உடன் இணைந்து செயல்படப் போவதாகவும் ஷேர்சாட் அறிவித்துள்ளது. இதனால் My Gov 60 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை 15 இந்திய மொழிகளில் இந்தத் தளத்துடன் இணைக்க உள்ளது. அடுத்தகட்டமாக இணைய உள்ள பயனர்கள் இணையத்துடன் தொடர்பில் இருக்கும் விதத்தை ஷேர்சாட்டை மாற்றியமைக்கிறது. ஒரு பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர வாட்ஸ் அப் ஷேர்களுடன் இன்றைய பயனர்கள் தினமும் 25 நிமிடங்களுக்கும் மேலாக இந்தத் தளத்தில் நேரம் செலவிடுகின்றனர். ஷேர்சாட்டில் 15-க்கும் அதிகமான இந்திய மொழிகளில் 150 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களும் 60 மில்லியன் மாதாந்திர ஆக்டிவ் பயனர்கள் இருப்பதாகவும் சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

புதியது பழையவை