இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டர் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்த இரண்டு மாதங்களில் சும்மா லெஃப்ட், ரைட்டு, சென்டர்னு எல்லா பக்கத்திலிருந்தும் டாலர்களை வருவாயாக ஈட்டியுள்ளது. கையில் உள்ள வருவாயை வைத்து நிறுவனம் ஏதேனும் புதிதாகச் செய்யப் போகிறதோ என்று நினைத்தவர்களுக்குப் பெரிய ஏமாற்றம் தான். ஜியோ நிறுவனம் தற்பொழுது தன்னை ஸ்டைலாக மாற்றி வருகிறது.
'ஈ அடிச்சான் காப்பி'
ஜியோ நிறுவனம் தற்பொழுது மீண்டும் அதன் குளோனிங் ஆர்வத்தை ஜியோசாட் மூலமாகக் களமிறக்கியுள்ளது. இம்முறை 'ஈ அடிச்சான் காப்பி' போல, அச்சு அசலாகத் தனது ஜியோசாட் பயன்பாட்டை வாட்ஸ்அப் பயன்பாடு போலவே மாற்றம் செய்துள்ளது. இப்பொழுது இரண்டு பயன்பாடுகளையும் ஓபன் செய்து அருகில் வைத்துப் பார்த்தால் எதோ ஜெராக்ஸ் காப்பி எடுத்தது போலத் தோற்றமளிக்கிறது என்று நெட்டிசன்ஸ்கள் கிண்டல் செய்துள்ளனர்.
புதிய ஸ்டைலில் சில மாற்றங்கள்
ஜியோவின் மிகப்பெரிய போர்ட்ஃபோலியோவில் ஜியோசாட் ஒன்றும் புதிய பயன்பாடு இல்லை, உண்மையில், ஜியோசாட் ஜியோவின் ஆரம்ப நாட்களிலிருந்தே இருந்து வருகிறது. ஆனால், தற்பொழுது வாட்ஸ்அப் போன்ற தோற்றத்துடன் புதிய ஸ்டைலில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. தற்பொழுது ஜியோசாட் அப்படியே வாட்ஸ்அப்பில் உள்ள பச்சை நிறத்தில், அதில் உள்ளது போன்ற டேப்களுடன் காட்சியளிக்கிறது.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சேனல் டேப்
இரண்டு பயன்பாடுகளையும் அருகில் வைத்து செக் செய்து பார்த்தால் விஷயம் உங்களுக்கே புரியும். ஜியோசாட்டில் உள்ள டேப்கள், கேமரா ஐகான் மற்றும் இடதுபுறத்தில் உள்ள பயன்பாட்டுப் பெயர் மற்றும் வலதுபுறத்தில் எலிப்சிஸ் ட்ராப்டௌன் மெனு உள்ளிட்ட அனைத்தும் வாட்ஸ்அப் உடன் ஒத்ததாக இருக்கிறது.
வாட்ஸ்அப்பின் பச்சை நிறம்
ஜியோசாட்டில் மட்டும் கூடுதலாக 'சேனல்கள்' என்ற டேப் சேர்க்கப்பட்டுள்ளது. இது அதன் பயனர்கள் பின்பற்ற வேண்டிய பிராண்டட் கணக்குகளின் தொகுப்பைப் பட்டியலிடுகிறது. இதற்கு முன்பு ஜியோவின் இந்த ஜியோசாட் பயன்பாடு ப்ளூ நிறத்தில் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஜியோசாட் வாட்ஸ்அப்பின் பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
என்ன சூட்சுமம் ஒளிந்திருக்கிறதோ?
ஜியோசாட்டின் டீஃபால்ட் செட்டிங்காக இந்த நிறம் தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு பிரபலமான ஆப்களின் ஸ்டைலை அம்பானி ஏன் காப்பி அடிக்கிறார், இதற்குப் பின்னால் என்ன சூட்சுமம் உள்ளதென்று மக்கள் யோசிக்கத்துவங்கியுள்ளனர்.