நவம்பர் 3 - அமைப்பு தினம்

 எமது புரட்சி வீரர்கள், இம்மண்ணில் சிந்திய, செங்குருதி காய்ந்திருக்கலாம், ஆயினும் அதன் நினைவு - சீனக்கவிதை


ஆம். நமது நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாக நினைவுகள் இன்னும் இளைஞர்களின் நெஞ்சில் நீடித்து வளர்ந்து வருவதற்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மகத்தான பணியாற்றி வருகிறது. 1980ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் லூதி

யானாவில் நடைபெற்ற முதல் மாநாட்டில் எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை என்கிற உயரிய லட்சியத்தோடு துவக்கப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இன்றைக்கு அலை ஓசை சத்தமிடும் குமரி முதல் பனிபடர்ந்த காஷ்மீர் வரை என தேசத்தின் எல்லைகள் வரை துடிப்போடு செயலாற்றி வருகிறது.


1919 ஏப்ரல் 13ஆம் தேதி ஜாலியன் வாலாபாக்கில், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு ஜெனரல் டயரை ஏவி விட்டு 1600 ரவுண்டு, இந்திய மக்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியது. இக்கொடூரமான அடக்குமுறையில் 1565க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில், 12 வயது நிரம்பிய பகத்சிங் இரத்தம் படிந்த மண்ணை எடுத்துக்கொண்டு மனதில் கேள்விகளோடு வீடு நோக்கி பயணித்தான். அந்த இளைஞன் தேசவிடுதலையோடு மனிதகுல விடுதலைக்கும் தன்னை அர்ப்பணித்தான்.

“பாலுக்கு அழும் குழந்தை, கல்விக்கு ஏங்கும் மாணவன், வேலைக்கு அலையும் இளைஞன், பட்டினியால் வாடும் தாய் இவர்கள் இல்லாத இந்தியாவே சுதந்திர இந்தியா” என வீர இளைஞன் பகத்சிங் கண்ட கனவுகளை மனதில் கொண்டு, பகத்சிங் தூக்கில் ஏற்றப்பட்ட போது தன் வயது காரணமாக மறுக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்காக சிறைதண்டனை அனுபவித்த பண்டிட் கிஸோரிலால் ஷர்மாவால் வாழ்த்தி, துவக்கி வைக்கப்பட்ட வாலிபர் சங்கத்தின் உயரிய லட்சியப் பயணம் வீறுநடை போடுகிறது.

கல் தடுக்கியதால் காலில் வரும் இரத்தம் பார்த்து மயங்கி விழும் சினிமாக்களுக்கு மத்தியில், பிறர் இரத்தத்தை அட்டையைப் போல் உறிஞ்சி வாழத்துடிக்கும் நாட்டில் மாவீரன் பகத்சிங் பிறந்த நூற்றாண்டு விழாவில் லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரத்த தானம் செய்து மனித உயிர்களைக் காக்கும் உயரிய சேவையினை ஆற்றிய அமைப்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இருக்கிறது.

தியாகி குட்டி ஜெயப்பிரகாஷில் துவங்கி சந்துரு, குமார், ஆனந்தன், அமல்ராஜ், லீலாவதி என வாலிபர் சங்க ஊழியர்கள் 23க்கும் மேற்பட்ட உயிர்களை தமிழக மக்களின் வாழ்வு முன்னேற களப்பலி தந்த ஒரே இளைஞர் அமைப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். தியாகிகள் உயர்த்திய வெண்பதாகையை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லவும், இன்றைக்கும் நீடிக்கும் தீண்டாமைக் கொடுமை, சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக தேசவிடுதலையை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்படுத்த முயற்சிக்கும் கும்பலுக்கு மத்தியில் இந்திய இறையாண்மையைப் பாதுகாக்கவும், மக்கள் வளர்ச்சிக்கான கல்வி, சமூகப் பாதுகாப்புடனான வேலையை வென்றெடுக்கவும், ஆண்,பெண் பாலின சமத்துவத்தை அடைவதற்கும், மனிதநேயத்தை மறுக்கும் மதவெறிக்கு எதிராகவும் தீரமிக்க போராட்டங்களை நடத்தி வருகிறது.

தோல்வி அடைய ஒருபோதும் நமக்கு அனுமதியில்லை எனும் பிடல்காஸ்ட்ரோவின் வார்த்தை நம்மை வேகப்படுத்த வருகிறது வாலிபர் சங்க அமைப்பு தினமான நவம்பர் 3. தமிழகத்தின் தொழில்வளர்ச்சிக்கான போராட்டம், உழைப்பு தானம், இரத்த தானம், கண் தானம், கலைவிழா, கருத்தரங்கம், பண்பாட்டு நிகழ்வுகள், பொங்கல் விழா, இரவு பாடசாலை, நிவாரணப் பணிகள் என ஆற்றிய பணிகள் ஏராளமாய் இருப்பினும் நாம் நமக்கான லட்சியத்தை அடைவதற்கான போராட்டம் தீவிரமாகி வருகிறது.

உலக முதலாளித்துவ நெருக்கடி முற்றுவதும், அதற்கு எதிரான மாற்று முயற்சிகள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் வளர்ச்சி, மதச்சார்பின்மை, சோசலிசம் என சென்னை அகில இந்திய மாநாடு முன்வைத்த கொள்கை முழக்கம் நமக்கான சரியான திசைவழியைக் காட்டுகிறது.
வெங்கொடுமைகள் தாமாய் மறைவதில்லை. போர்க்கோலம் கொள்வதில் தவறு இல்லை, ஓர் புரட்சி வராமல் இனிமை இல்லை. ஒன்றாய்த் திரண்டெழாமல் வெற்றி இல்லை! நாம், திரண்டெழுந்தால் மண்ணில் எதிரியில்லை என்பதால் நவம்பர் 3 அமைப்பு தினம் அன்று வீதிகள் தோறும், கிளைகள் தோறும் கொள்கை உறுதிமிக்க, தியாகப் பாரம்பரியத்தில் நனைந்த வெண்கொடிகள் உயரட்டும், ஆயிரமாயிரம் ஆயிரமாய் உயரட்டும் நம் வெண்கொடி.
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்