தொழில் தொடங்க 50 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுவது எப்படி?

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் விதமாக 'பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்' என்ற திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டம் மூலம் ஒரு லட்சம் முதல் 50 லட்சம் வரை அரசு கடன் வழங்குகிறது.

மேலும், இந்த கடனில் 35 சதவிகிதம்வரை அரசு மானியம் வழங்குகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பது முதல் தேர்வு செய்யப்படுவதுவரை அனைத்து செயல்பாடுகளும் எந்தவித இடைத்தரகர் இன்றி ஆன்லைன் வழியாகவே நடக்கிறது.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்றால் என்ன, இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, அதற்கான தகுதிகள் என்ன, இந்த திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ன ஆகியவை குறித்து விரிவாகப் பார்ப்போம்.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்பது இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும்.


கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பிரதான் மந்திரி ரோஸ்கர் யோஜனா மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களை இணைத்து இந்தத் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் மேற்பார்வையில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திட்டத்தின் நோக்கம்

கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களை அமைப்பதன் மூலம் வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.


கிராமங்கள் மற்றும் நகரங்களில் வேலை இழந்த இளைஞர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகள் ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடையச் செய்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்.

சொந்த பகுதிகளிலேயே நிலையான வேலை வாய்ப்புகளை வழங்கி, மற்ற பகுதிகளுக்கு இடம்பெயர்வதை தடுத்தல்.

எதற்கு கடன் கொடுக்கப்படும்?

புதிதாக தொடங்கப்படும் சிறு, குறு மற்றும் குடிசைத் தொழில்களுக்கு கடன்கள் வழங்கப்படும்.

ஆனால் இந்த திட்டத்தின்கீழ் தொழில் விரிவாக்கத்திற்கும், நவீனமயமாக்கலுக்கும் கடன் வழங்கப்படாது.

எதிர்மறைத் தொழில்கள் பட்டியலில் உள்ள தொழில்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படாது.

இந்த திட்டத்தை 2026வரை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், 2021-2022 முதல் 2025-2026 வரையிலான காலகட்டத்திற்கு ரூ.13,554.42 கோடிகளை 15வது நிதி ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

எவ்வளவு கடன் பெறலாம்?

உற்பத்தி சார்ந்த புதிய தொழில்களுக்கு ரூ. 50 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

முன்னதாக, அதிகபட்சம் 25 லட்சம்வரை மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், தற்போது வேலையில்லா இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கத்தில் இந்தக் கடன் வரம்பை ரூ.50 லட்சம் வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

பொதுப்பிரிவினர் தாங்கள் தொடங்கும் தொழிலின் மொத்த மதிப்பீட்டில் 10 சதவிகிதத்தை சொந்தமாக முதலீடு செய்ய வேண்டும்.

பெண்கள், எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை சமூகத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகிய பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் 5 சதவிகிதத்தை சொந்தமாக முதலீடு செய்ய வேண்டும்.

மீதமுள்ள முதலீட்டிற்கான பணம் வங்கிகளால் கடனாக வழங்கப்படும்.

கடன் மானியம் யாருக்கு கிடைக்கும்?

கிராமப் புறங்களில் தொழில் தொடங்குபவர்களுக்கு அதிகபட்சமாக 35 சதவிகிதம் வரையும், நகர்ப்புறங்களில் தொழில் தொடங்குபவர்களுக்கு அதிகபட்சமாக 25 சதவிகிதம் வரையும் கடன் மானியம் கிடைக்கும். இது பெண்கள், எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை சமூகத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு மட்டுமே பொருந்தும்.

பொதுப்பிரிவினர் கிராமப்புறங்களில் தொழில் தொடங்கினால் 25 சதவிகிதம் வரையும், நகர்ப்புறங்களில் தொழில் தொடங்கினால் 15 சதவிகிதம் வரையும் கடன் மானியம் வழங்கப்படும்.

எப்படி, எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

இந்த திட்டத்தின் விண்ணப்பம் முதல் தேர்வு செயல்முறை வரை அனைத்து செயல்பாடுகளும் ஆன்லைன் வழியாகவே நடைபெறும்.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க www.kviconline.gov.in. என்ற தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

உங்களுக்கென தனி பயனர் முகவரி மற்றும் கடவுச்சொல் உருவாக்கி தளத்திற்குள் நுழைய வேண்டும். பின்னர், ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.

விண்ணப்பம் சமர்பிக்கப்பட்ட 10 முதல் 15 நாட்களுக்குள் அரசு தரப்பில் இருந்து உங்களுக்கு பதில் வரும்.

அதன் பிறகு உங்கள் திட்டத்திற்கான அனுமதி தொடர்பான பணிகள் தொடங்கும்.

நீங்கள் தொடங்கும் தொழில் தொடர்பாக உங்களுக்கு மத்திய அரசின் ஒரு மாத பயிற்சி அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சி ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ நடைபெறும்.

இத்திட்டத்தின் கீழ் கடன்பெற ஒரு மாத பயிற்சி கட்டாயம்.

பயிற்சி முடிந்ததும் உங்கள் கடனின் முதல் தவணை உங்களுக்கு வழங்கப்படும்.ஆனால், மானியம் உடனடியாக வழங்கப்படாது.

கடன் பெற்றதும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீங்கள் வங்கிக்கு தவணை செலுத்த வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு உங்களுக்கு மானியம் வழங்கும்.

தேவையான தகுதிகள்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே இந்தத் திட்டத்தின் கீழ் கடன்பெற தகுதியானவர்கள்.

குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் உட்பட வேறு எந்தத் திட்டங்களின் கீழும் பலன் பெறாதவராக இருக்க வேண்டும்.

ஒரு குடும்பத்திலிருந்து ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.

வங்கியின் வேலை என்ன?

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு கடன் வழங்கும்.

இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனுக்கு ஒவ்வொரு வங்கியும் வெவ்வேறு சதவிகிதத்தில் வட்டி வசூலிக்கின்றன. 7 முதல் 10 சதவிகித வட்டி பொதுவானது. சில வங்கிகளில் இதைவிட அதிகமாகவும் இருக்கலாம்.

முதல் கடனை அடைத்தவர்களுக்கு தேவைப்பட்டால் இரண்டாவது கடனும் வழங்கப்படும்.

இரண்டாவது முறை கடன் பெறும்போது ரூ.1 கோடிவரை பெறலாம். இந்தக் கடனில் மத்திய அரசிடம் இருந்து 15 முதல் 25 சதவிகிதம் மானியமும் பெறலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க எந்தவித வருமான வரம்பும் இல்லை.

என்ன தொழில் தொடங்க வேண்டும்?

https://www.kviconline.gov.in/pmegp/pmegpweb/docs/jsp/newprojectReports.jsp

என்ற தளத்தில் பல்வேறு துறைகளில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்த விவரங்கள் உள்ளன.

விவசாயம் சார்ந்த உணவு பதப்படுத்துதல், சிமெண்ட் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள், பால் மற்றும் பால் பொருட்கள், மின்னணு மற்றும் மின் சாதனங்கள், காகிதம் மற்றும் அது சார்ந்த பொருட்கள், பிளாஸ்டிக் மற்றும் அது சார்ந்த சேவைகள், சேவைத் துறை, சிறு வணிக மாதிரிகள், கழிவு மேலாண்மை உட்பட பல தொழில் வாய்ப்புகள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன.

கடன் பெற தேவையான ஆவணங்கள்

பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்

நீங்கள் தொடங்க இருக்கும் தொழிலுக்கான திட்ட அறிக்கை

அடையாள அட்டை மற்றும் முகவரி சான்று

பான் மற்றும் ஆதார் கார்டு

தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் உங்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி குறித்த மத்திய அரசு வழங்கிய சான்றிதழ்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கான சான்றிதழ்

கல்வித் தகுதிகள், தொழில்நுட்பத் தகுதிக்கான சான்றிதழ்

இவை தவிர வங்கிகள் கேட்கும் மற்ற ஆவணங்கள்

எந்தத் தொழிலுக்கு கடன் கிடைக்காது?

இறைச்சி தொடர்பான தொழில்கள்

சிகரெட், பீடி, பான் பொருட்கள் உற்பத்தி தொழில்கள்

ஹோட்டல்கள், மது விற்பனை மற்றும் விநியோகம்

தேயிலை, காபி, ரப்பர் போன்ற பயிர் பொருட்கள் சாகுபடி தொடர்பான தொழில்கள்

20 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பாலித்தீன் கவர்கள் தயாரிக்கும் தொழில்

மேற்கண்ட தொழில்கள் உட்பட காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையத்தால் பாதகமான தொழில்கள் என பட்டியலிடப்பட்ட தொழில்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கடன்பெற முடியாது.

Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்