இந்தியாவில் யுபிஐ ஆப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 20 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளைக்கு 20 கோடி பேர் யுபிஐ ஆப்கள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்கிறார்கள் என்றால், அது எந்த அளவிற்கு எளிதாக இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை.. எந்த விஷயத்தையும் இதற்காக மெனக்கெட தேவையில்லை ஜஸ்ட் போன் நம்பர் போதும். பணம் போய்விடும். இந்த முறை காரணமாக படிக்காதவர்கள் கூட எளிதாக பணத்தை வேண்டியவர்களுக்கு அனுப்பிவிடுகிறார்கள்.
அதேநேரம் யுபிஐ ஆப் பயன்படுத்த எளிது என்றாலும் நிறைய தவறான பரிவர்த்தனைகளும் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. போன் நம்பரில் ஒரு நம்பரை தவறாக போடும் போதோ, மறதி குறைவாக ஏதேனும் தவறுதலாக உங்கள் கான்டெக்டில் ஒரே பெயரில் உள்ள இருவரில் வேறு ஒருவருக்கு பணம் போகவும் வாய்ப்பு உள்ளது.
அப்படி ஒருவேளை நீங்கள் வேறு ஒருவருக்கு தவறுதலாக யுபிஐ பரிவர்த்தனை செய்துவிட்டால் அதனைத் திரும்ப பெற முடியும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
முதலில் எந்த யுபிஐ சேவை வழங்குனர் (ஜிபே, பேடிஎம், போன்பே) வழியாக பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதோ அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளியுங்கள். அதிகப்பட்சம் 24 - 48 மணிநேரத்திற்குள் பரிவர்த்தனை நீக்கப்பட்டு உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்க வழி செய்யப்பட்டுவிடும்.
ஒருவேளை யுபிஐ சேவை வழங்குனர் தீர்க்கப்படாத கோரிக்கைகளை இந்திய தேசிய பண செலுத்துகை நிறுவனத்தின் (என்.பி.சி.ஐ.) இணையத்தளத்தில் புகார் அளிக்கலாம். நீங்கள் இங்கு புகார் அளிக்கும் போது பரிவர்த்தனைக்கான ஆதாரங்களை கண்டிப்பாக ஆன்லைனில் இணைக்க வேண்டும். பரிவர்த்தனை வகை, வங்கி பெயர், யுபிஐ ஐடி, மெயில் ஐடி, செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களை வழங்க வேண்டும். அதன்பின்னர் என்.பி.சி.ஐ. சார்பில் உங்களைத் தொடர்பு கொண்டு புகாரை நிவர்த்தி செய்வார்கள்.
இது ஒருபுறம் எனில் நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியைத் தொடர்பு கொண்டும் புகார் தரலாம். நேரிலோ அல்லது வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டோ இந்தப் புகார் கொடுக்கலாம். அவர்களும் உங்கள் தரப்பில் நியாயம் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்.
என்னதான் யுபிஐ பரிவர்த்தனைகளில் தவறு செய்து பணத்தை மீட்க முடியும் என்றாலும், பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை யுபிஐ ஐடி இதுதானா, பணம் பெறுபவரின் பெயர், செல்போன் எண், அனுப்பும் தொகை ஆகியவற்றை சரியாக பார்த்துவிட்டு அனுப்புவதே சிறந்தது. இதே போல் வங்கி கணக்கில் தவறுதலாக பணம் அனுப்பினாலும், சரி செய்ய முடியும்.
அதற்கும் இதேபோல் சில விஷயங்களை செய்ய வேண்டும். முதலில் தவறுதலாக அனுப்பப்பட்ட நபரிடம் பேசி பணத்தை திரும்ப பெற முயற்சிக்கலாம். அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் வங்கியில் புகார் அளித்து அவரது வங்கி கணக்கை உடனே முடக்கி பணத்தை எடுக்கலாம். ஆனால் இதனை உடனே செய்ய வேண்டும். அவர் வங்கி கணக்கில் உடனே பணத்தை எடுத்துவிட்டால் பணத்தை வாங்குவது கடினமாகிவிடும். இது யுபிஐக்கும் பொருந்தும்.