நெல்லை அண்ணாச்சிகள் தொடங்கிய பல கடைகள்தான் சென்னை முழுக்க உயர்ந்து நிற்கின்றன. பெரும்பாலும் நெல்லையில் இருந்து சென்னை வந்து பலர் பாத்திரம், துணி கடைகளை தொடங்கிய தொடங்கினர்
உதயத்தூரில் இருந்து வந்த அந்த குடும்பம் 1983ல் அசோக் பில்லர் சந்திப்பு அருகே.. நிலம் வாங்கி தியேட்டர் கட்டியது . முதலில் ஒரு ஸ்கிரீன் வைத்து கட்டப்பட்ட தியேட்டருக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்த போது.. தங்களின் உதயத்தூர் நினைவாக.. உதயம் தியேட்டர் என்று பெயர் வைக்கப்பட்டது. பரமசிவம் மற்றும் அவரின் 5 சகோதரர்கள் என்று 6 பேர் சேர்ந்து உருவாக்கப்பட்ட தியேட்டர் தான் உதயம் தியேட்டர்
கோரோனா பரவலுக்குப் பிறகு தமிழகத்தின் அடையாளமாக இருந்த பல்வேறு திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. அதிலும் ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு பார்வையாளர்கள் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்கும் போக்கு குறைந்துவிட்டதால் பல திரையரங்கங்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது. சென்னையில் ஒரு காலத்தில் ரசிகர்களின் ஆதர்ச தியேட்டர்களாக இருந்த சாந்தி, அகஸ்தியா போன்ற பிரபல திரையரங்குகள் இன்று காணாமல் போய்விட்டன. அந்த வரிசையில் தற்போது உதயம் தியேட்டர் இணைகின்றது.
தியேட்டர் வளர்ச்சி: அசோக் பில்லர் அருகே அமைந்துள்ள இந்த திரையரங்கம் 1983 இல் கட்டப்பட்டது. அதன்பின் வளர வளர தியேட்டரில் கூடுதல் ஸ்கிரீன் போடப்பட்டு உதயம், சந்திரன், சூரியன், உதயம் மினி என்று மாற்றப்பட்டது. சென்னையில் 20 வருடங்களுக்கு முன்பு வரை கூட சத்யம் , அபிராமிக்கு அடுத்தபடியாக பெரிய தியேட்டர் இதுதான் . இது சென்னையின் மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமாக இயங்கும் சினிமா தியேட்டர்களில் ஒன்றாக இருந்தது.
அதன்பின் இந்த தியேட்டரின் ஷேர் 6 அண்ணன் - தம்பிகளின் குடும்பத்தில் பிறந்த எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து அளிக்கப்பட்டது. அதன்பின் அது வேறு சில நிறுவனங்களுக்கும் கூட சென்றது. ஒழுங்கான ஒரு தலைமை இல்லாத காரணத்தால் 2000 தொடக்கத்தில் இந்த தியேட்டர் பெரிய பராமரிப்பு இன்றி பின்தங்கியது.
கைமாறிய நிறுவனம்: அதன்பின் கடந்த 2009ல்தான் சென்னையில் உள்ள உதயம் திரையரங்கை அதன் நிறுவன உறுப்பினர் பரமசிவம் மீண்டும் வாங்கினார். அந்த தியேட்டரை உருவாக்கிய 6 சகோதரர்களில் இப்போது உயிருடன் இருப்பவர் இவர்தான். சொத்துக்களை குடும்பத்திற்குள் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக ரூ.80 கோடிக்கு வாங்கினார்.
அதன்பின் இந்த தியேட்டரை 2013ல் விற்கும் முடிவை எடுத்தனர். ஆனால் அப்போது தியேட்டர் விற்பனைக்கு வரவில்லை. மாறாக வாங்க பெரிதாக ஆள் இன்றி அப்படியே இருந்தது. அதேபோல் இங்கே மக்கள் கூட்டமும் முன்பு அளவிற்கு இல்லை.
மூடப்படுகிறது: உதயம் தியேட்டரில் என் இதயத்தை தொலைச்சேன்.. என்று பாடல் தொடங்கி சென்னையின் லேண்ட்மார்க் பகுதிகளில் ஒன்றாக இந்த தியேட்டர் இருந்தது. இந்த நிலையில்தான் அந்த தியேட்டர் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த தியேட்டர் இருக்கும் பகுதியை காசாகிராண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது.
இங்கே மிகப்பெரிய 25 மாடி அடுக்கு கட்டிடம் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. அலுவலகம் + குடியிருப்பு பாணியில் இங்கே அடுக்குமாடி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதோடு இல்லாமல் இந்த தியேட்டருக்கு அருகிலேயே தற்போது மால் கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் ஹவுசிங் போர்ட் மூலம் இந்த குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. ஒயின் கிளாஸ் வடிவத்தில் தோன்றும் 22-அடுக்கு அமைப்பு, அசோக் பில்லரில் உள்ள ட்ரை-ஜங்ஷன் ப்ளாட்டில் கட்டப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் சதுர அடி இடத்தில் 24,000 சதுர அடி அளவு கொண்ட மாலுக்கு ஒதுக்கப்படும். மற்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கப்படும். ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பின் அளவும் 1,700 சதுர அடி மற்றும் 2.13 ஏக்கர் நிலத்தில் முழு கட்டமைப்பையும் கட்ட 227.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுமானத்தில் தற்போது 10 மாடிகள் வரை கட்டப்பட்டு உள்ளது. மீதம் உள்ள மாடி களின் கட்டுமானம் தற்போது நடந்து வருகிறது. இங்கே மால் வருவதால் அதன் உள்ளே மல்டிபிள்க்ஸ் தியேட்டர் கண்டிப்பாக இருக்கும். அதனால் இனி உதயம் தியேட்டர் வியாபாரம் பெரிய அளவில் இருக்காது என்பதை கருதி அதை விற்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
40 ஆண்டு காலமாக சென்னை சினிமா கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக, எண்ணற்ற நினைவுகளை சுமந்து நிற்கும் ‘உதயம்’ திரையரங்கம் அஸ்தமனம் ஆகப் போவதாக வரும் செய்தி சினிமா ரசிகர்களின் நெஞ்சை கனக்கச் செய்துள்ளது.