டெல்லி: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் (DYFI) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது. மனுவில் சிஏஏ, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையான மதச்சார்பின்மை கோட்பாட்டை மீறுவதாக விமர்சித்திருக்கிறது.
சிஏஏ என்றால் என்ன?: கடந்த 1955ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச்சட்டத்தின்படி, இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்க அச்சட்டம் வழிவகுத்தது. அதில் திருத்தம் செய்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், கிருத்துவர்கள் ஆகியோர் இந்நாட்டிற்கு வந்து குறைந்தது 6 ஆண்டுகள் வாழ்ந்தாலே அவர்களுக்குக் குடியுரிமை வழங்க தற்போது இப்புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகுத்துள்ளது.
எதிர்ப்பு: இசுலாமியர்களை மட்டும் திட்டமிட்டுப் புறந்தள்ளிவிட்டு மற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் திருத்தச்சட்டம் மூலம் இந்நாட்டின் அடித்தளமான மதச்சார்பின்மைக் கோட்பாடே முற்றுமுழுதாக துடைத்தெறியப்படும் என எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்தை விமர்சித்துள்ளன. இந்த சட்டத்தின் மூலம் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை தற்போது வழங்கப்படாது என்பதால், தமிழ்நாட்டில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு நிலவி வருகிறது.
மாணவர்கள்: புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் உட்பட 16 கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் இன்று முழு அடைப்பு போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றன. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
வாலிபர் சங்கம்: இந்நிலையில், சிஏஏவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்பை தெரிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக இதன் வாலிபர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சிஏஏவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது. மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறது.
மதத்தை அடிப்படையாக கொண்டு குடியுரிமை வழங்கப்படும்போது, அது மக்களை கடுமையாக பாதிக்கிறது என்று கூறிய DYFI, இந்த சட்டம் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 14 மற்றும் 21ஐ மீறுவதாகவும் தனது மனுவில் கூறியுள்ளது.