வீட்ல இட்லி மாவு மட்டும் இருந்தா போதும்? அத வைச்சு பத்து நிமிஷத்துல சூப்பரான ஜிலேபி ரெடி

நாம் வீட்டில் இனிப்பு செய்ய வேண்டும் என்றால் கேசரி, பாயாசம், பொங்கல், ரவா லட்டு இப்படியான இனிப்புகளை தான் அதிகம் செய்வது வழக்கம். ஜிலேபி, ஜாங்கிரி, மைசூர் பாக்கு போன்ற இனிப்பு வகைகளும் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். ஆனால் அதை செய்வது கடினமான வேலை, அது மட்டும் இல்லாமல் அதற்கான பொருட்கள் எல்லாம் நம்மிடம் இருக்காது. அதனாலே இவைகளை வீட்டில் செய்வதை தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் இந்த ஜிலேபி செய்வதற்கு ஒரு கப் இட்லி மாவு இருந்தால் போதும் உடனே செய்து விடலாம். இந்த சமையல் குறிப்பு பதிவில் ஜிலேபியை மிகவும் சுலபமாக வீட்டில் எப்படி செய்வது என்று தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.



இந்த ஜிலேபி செய்ய நமக்கு இட்லி மாவு இருந்தால் போதும். இந்த மாவு அதிகம் புளிக்காத அதே நேரத்தில் அப்போது அரைத்த புது மாவாகவும் இல்லாத வகையில் இருக்க வேண்டும். அரைத்து ஒன்று, இரண்டு நாள் ஆனால் போதும் மாவு இந்த ஜிலேபி செய்ய சரியான பதத்தில் இருக்கும்.
இட்லி மாவில் ஜிலேபி செய்முறை விளக்கம்:
இந்த ஜிலேபியை செய்ய முதலில் ஒரு கப் இட்லி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் கொஞ்சம் ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் ஜிலேபி பார்க்க நன்றாக இருக்கும். அத்துடன் ஒன்னரை டேபிள் ஸ்பூன் மைதா மாவு, ஒரே ஒரு சிட்டிகை உப்பு இவை அனைத்தையும் சேர்த்து மாவை நன்றாக அடித்துக் வைத்து கொள்ளுங்கள். இந்த மாவு அதிகம் கெட்டியாகவும் இருக்கக் கூடாது, அதே நேரத்தில் மிகவும் தண்ணியாகவும் இருக்கக் கூடாது.
இப்போது ஜிலேபிக்கு தேவையான சர்க்கரை பாகு தயார் செய்து கொள்வோம். அதற்கு அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை வைத்து அதில் ஒன்னே கால் கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து, இதற்கு முக்கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி சர்க்கரையை காய்ச்ச ஆரம்பிங்கள். இந்த சர்க்கரை காய்ச்சும் விதம் கைகளில் தொட்டால் நல்ல கெட்டியான பிசுபிசுப்பு தன்மை இருக்க வேண்டும். ஒரு கம்பி பதம் என்று சொல்லுவார்கள் அப்படி இருந்தால் சரியாக இருக்கும். பதம் தெரியாதவர்கள் கொஞ்சம் தொட்டுப் பாருங்கள் சர்க்கரை பாகு தண்ணியாக இல்லாமல் நல்ல கெட்டியாக உங்கள் கைகளில் பிடித்தால் சரியாக இருக்கும். இந்தப் பதம் வந்தவுடன் அரை எலுமிச்சை சாறை இந்த பாகில் பிழிந்து விட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். சர்க்கரை பாகில் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடும் போது பாகு கெட்டியாகாமல் அப்படியே இருக்கும்

இப்போது ஜிலேபியை சுட்டு எடுத்து விடலாம். தயார் செய்து வைத்த மாவை ஒரு பிளாஸ்டிக் கவரில் ஊற்றி இறுக்கமாக கட்டிக் கொள்ளுங்கள். அடியில் சின்னதாக ஒரு ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள். அல்லது உங்கள் வீட்டில் டொமோட்டோ கிச்சப் பாட்டில் இருந்தால் அதில் அழுத்தினால் அந்த ஓட்டை வழியாக மாவு வரும் இது இரண்டில் உங்களுக்கு எது வசதியாக உள்ளதோ அதன்படி மாவை பிழிந்து கொள்ளலாம்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்துக் கொள்ளுங்கள், எண்ணெய் ஊற்றி சூடானவுடன், மாவு ஊற்றி இருக்கும் கவரை லேசாக அழுத்தி சுற்றி விட்டால் போதும் வட்டமாக ஜிலேபி வந்து விடும். இதை நேரடியாக எண்ணெயிலே சுட்டு விடலாம். அதன் பிறகு இரண்டு புறமும் திருப்பிப் போட்டு மாவு வெந்தவுடன் சூட்டுடன் எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு விடுங்கள். சர்க்கரைப் பாகில் மூன்று நிமிடம் மட்டும் ஜிலேபி இருந்தால் போதும். அப்போது தான் கொஞ்சம் கிரிஸ்பியாக, அதே நேரத்தில் இனிப்பாகவும் இருக்கும். அதிக நேரம் பாகில் இருந்தால், ஜிலேபி மிகவும் சாஃப்ட் ஆகி விடும் சாப்பிட நன்றாக இருக்காது.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை